நினைவுச்சின்னம் 1989 மே 5 ஆம் நாள் வெளியானது. பிரபு, ராதிகா, முரளி, சித்ரா, விஜயகுமார், கவுண்டமணி, செந்தில், எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் ஏல இளங்குயிலே..., வைகாசி மாசத்துல..., உள்பட நான்கு பாடல்களை கங்கை அமரன் எழுதியிருந்தார். இதில் வைகாசி மாசத்துல.. பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவை தவிர இளையராஜா, பிறைசூடன் இருவரும் தலா ஒரு பாடலை எழுதியிருந்தனர்.
சாதிரீதியான சித்தரிப்புகளை அதன் உள்ளார்ந்த மேட்டிமைத்தனத்தை அறியாமல் இயல்பாக ஏற்றுக் கொண்டிருந்த காலத்தில் நினைவுச்சின்னம் வெளியானது. ஊரே மதிக்கும் கவுண்டச்சியாக ராதிகாவும், அவரது கணவர் பிரபுவும் படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தனர். ஊர் பஞ்சாயத்திலும் ராதிகாதான் முன்நின்று தீர்ப்புகளில் தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வார்.
என் மனைவி இன்னொருத்தன்கூட இருக்கிறதை பார்த்தேன் என்று பொய்யாக குற்றம்சாட்டி பஞ்சாயத்து கூட்டுகிறவனை சாமர்த்தியமாக மடக்கி, உண்மையை வெளிக்கொண்டு வருவார் ராதிகா. அப்படிப்பட்டவர், அதேபோன்ற ஒரு பொய் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் போது, எதிர்த்து நிற்காமல் தன்னைத்தானே கத்தியால் குத்தி இறந்து போய், அந்த ஊருக்கே காவல் தெய்வமாவார்.
ராதிகா கவுண்டச்சியாக கோயம்புத்தூர் வட்டார வழக்கை இழுத்து இழுத்துப் பேசி அதற்கு முன் நடித்தப் படங்களிலிருந்து தன்னை மாறுபட்டு காட்டியிருந்தார். படத்தில் வரும் இன்னொரு ஜோடி முரளி, சித்ரா. வெற்றிலை குதப்பியபடி அறிமுகமாகும் சித்ரா போலீஸ் அதிகாரி என்பதே ரசிகர்களுக்கு தாங்க முடியாத ட்விஸ்ட். இதில், அவர்தான் சின்ன வயதில் காணாமல் போன பிரபு - ராதிகா தம்பதியின் மகள் என்று கிளைமாக்ஸில் கதையை மரவட்டையாக சுருட்டியிருப்பார்கள்.
ஊர் மக்கள் பக்தியாக வழிபடும் நினைவுச்சின்னம், ரயில் வரும் போதெல்லாம் ரேக்ளா வண்டியில் அரிவாளோடு கண்கள் சிவக்க கிளம்பும் பிரபு, தாலியை காவல் தெய்வமாக கும்பிடுவது என ஆரம்பத்தில் அடுக்கடுக்காக மர்மங்களை கோர்த்து எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்கள். கிராமத்து சென்டிமெண்டும், கவுண்டமணி, செந்தில் காமெடியும், இளையராஜாவின் பாடல்களும் படத்தை வெற்றி பெற வைத்தன. 150 நாள்களைத் தாண்டி படம் ஓடியது. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக முதல்முறையாக மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதை ராதிகா பெற்றார்.
நினைவுச்சின்னத்தை இயக்கியவர் அனுமோகன். படையப்பா படத்தில், 'படையப்பரு பாம்பு புற்றக்குள்ள கைவிட்டாருங்களே, கடிக்கலைங்களான்னு கேட்பாரே, அவர்தான். நினைவுச்சின்னத்துக்கு முன் மோகன், ரேகா, அமலா நடிப்பில் ஒரு படம் இயக்கியிருந்தார். நினைவுச்சின்னத்துக்குப் பிறகும் பல படங்கள் இயக்கினார். அப்போதே படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் பிறகு காமெடி நடிகரானார். அவரது படம்தான் ராதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான முதல் மாநில அரசின் விருதை பெற்றுத் தந்தது. அதே வருடம் பூந்தோட்ட காவல்காரனுக்காக சிறப்பு விருதும் ராதிகாவுக்கு கிடைத்தது.
நினைவுச்சின்னம் படத்தில் ராதிகாவின் நடிப்பை அனைத்துப் பத்திரிகைகளும் பாராட்டின. 'ராதிகா கொங்கு தமிழை செங்கரும்பாய் இனிக்கக் கொஞ்சிக் குலவும் போது அவரது உழைப்பை பாராட்டலாம். பஞ்சாயத்தில் பொய் சொல்கிறவனின் உள்நோக்கத்தை புட்டுப் புட்டு வைக்கும் வயனம் இருக்கிறதே, சூப்பர்' என பிரபல வார இதழ் ராதிகாவின் நடிப்பைப் பாராட்டி எழுதியது. அந்தவகையில் நினைவுச்சின்னம் ராதிகாவுக்கு முக்கியமான திரைப்படம். 33 வருடங்களை பூர்த்தி செய்திருக்கும் இப்படம் இன்று 34 வது வருடத்துக்குள் காலடி எடுத்து வைக்கிறது.