பிரபல கல்லூரி விழாவில் கலந்துக் கொண்ட நடிகை நயன்தாரா அங்கு மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை நயன்தாரா, சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். பின்னர் வல்லவன், யாரடி நீ மோகினி என பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். அடுத்ததாக காதல் பிரச்னைகளில் சிக்கிய அவர் ராஜா ராணி படத்தில் தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கினார். பின்னர் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கத் தொடங்கினார். தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார் நயன். இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்ட அவர், அக்டோபரில் வாடகைத்தாய் முறை மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். இந்நிலையில் சென்னையின் பிரபல கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டார் நயன்தாரா. அங்கு மாணவர்களிடம் பேசிய அவர், ”கல்லூரி காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடியவை என்பதை மறந்துவிடாதீர்கள். எவ்வளவு உயரத்தை அடைந்தாலும் எப்போதும் பணிவுடன் இருங்கள்” என்றார்.