நவாசுதீன் தன்னை வீட்டை விட்டு வெளியே துரத்தியதாகவும், தன்னையும் குழந்தைகளையும் உள்ளே நுழைய விடாமல் தடுத்ததாகவும் ஆலியா கூறியிருந்தார். தற்போது அது அனைத்திற்கும் பதிலளித்துள்ள நவாசுதீன், "இது குற்றச்சாட்டு அல்ல, ஆனால் எனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறேன்" என்ற தலைப்பில் இன்ஸ்டகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
”என் மௌனத்தால் எல்லா இடங்களிலும் நான் கெட்டவன் என்று முத்திரைக் குத்தப்படுகிறேன். நான் அமைதி காத்ததற்குக் காரணம், இந்த விஷயத்தை எல்லாம் என் சிறு பிள்ளைகள் எங்காவது படித்துவிடுவார்கள் என்று தான். ஒருதலைப்பட்சமான மற்றும் மானிபுலேட் செய்யப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் ஒரு சில மக்கள் எனது குணாதிசய படுகொலையை மிகவும் ரசிக்கிறார்கள்.
சில விஷயங்களை நான் தெரியப்படுத்த விரும்புகிறேன். முதலாவதாக, நானும் ஆலியாவும் பல ஆண்டுகளாக ஒன்றாக வாழவில்லை. நாங்கள் ஏற்கனவே விவாகரத்து செய்துவிட்டோம், ஆனால் எங்கள் குழந்தைகளுக்காக மட்டுமே எங்களிடம் ஒரு புரிதல் இருந்தது. யாருக்காவது தெரியுமா, துபாயில் படிக்கும் என் குழந்தைகள் ஏன் இப்போது இந்தியாவில் இருக்கிறார்கள் என்று? 45 நாட்களாக அவர்கள் பள்ளிக்கு வரவில்லை என பள்ளியிலிருந்து எனக்கு தினமும் கடிதம் அனுப்புகிறார்கள். எனது குழந்தைகள் கடந்த 45 நாட்களாக பணயக் கைதிகளாக வைக்கப்பட்டு, துபாய் பள்ளி படிப்பை இழந்துள்ளனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு துபாயில் குழந்தைகளை விட்டுவிட்டு, இப்போது பணம் கேட்டு இங்கு அழைத்து வந்துள்ளார். பள்ளிக் கட்டணம், மருத்துவம், பயணம் மற்றும் இதர பொழுது போக்குச் செலவுகள் என சராசரியாக, கடந்த 2 வருடங்களாக மாதத்திற்கு சுமார் 10 லட்சமும், என் குழந்தைகளுடன் துபாய்க்குச் செல்வதற்கு முன்பு மாதத்திற்கு 5-7 லட்சமும் சம்பளமாகப் பெறுகிறார் ஆலியா. அவர் எனது குழந்தைகளின் தாய் என்பதால், அவருக்கென வருமானத்தை அமைத்துக் கொள்ளும் பொருட்டு, பல கோடி ரூபாய் செலவில் அவரது 3 படங்களுக்கு நிதியளித்துள்ளேன்.
என் குழந்தைகளுக்காக அவருக்கு ஆடம்பர கார்கள் கொடுக்கப்பட்டன, ஆனால் அவற்றை ஆலியா விற்று பணத்தை தானே செலவழித்தார். எனது குழந்தைகளுக்காக மும்பையின் வெர்சோவாவில் கடலோர ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பையும் வாங்கியுள்ளேன். எனது குழந்தைகள் சிறியவர்கள் என்பதால் ஆலியா அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இணை உரிமையாளராக ஆக்கப்பட்டார். எனது பிள்ளைகளுக்கு துபாயில் ஒரு வாடகை வீட்டையும் எடுத்துக் கொடுத்துள்ளேன். ஆலியா வசதியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு அதிக பணம் மட்டுமே தேவை, அதனால் என் மீதும் என் அம்மா மீதும் பல வழக்குகள் போட்டிருக்கிறார். அது அவருடைய வாடிக்கை, கடந்த காலத்திலும் அவள் இதையே செய்திருக்கிறாள். அவளுடைய கோரிக்கையின்படி பணம் கொடுத்தால், வழக்கை வாபஸ் பெறுகிறாள்.
எனது குழந்தைகள் விடுமுறையில் இந்தியா வரும்போதெல்லாம், அவர்கள் பாட்டியுடன் மட்டுமே தங்குவார்கள். அவர்களை எப்படி வீட்டை விட்டு வெளியே துரத்த முடியும்? அப்போது நான் வீட்டில் இல்லை. அவள் ஏன் வெளியே துரத்தும் போது வீடியோ எடுக்கவில்லை, அதேசமயம் அவள் மற்ற விஷயங்களை வீடியோவாக பதிவு செய்கிறாள். இந்த நாடகத்தில் அவர் குழந்தைகளை வைத்து, என்னை அச்சுறுத்தவும், என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், எனது தொழிலை கெடுக்கவும், அவளுடைய சட்டவிரோத கோரிக்கைகளை நிறைவேற்றவும் இதையெல்லாம் செய்கிறாள்” என அதில் தெரிவித்துள்ளார் நவாசுதீன் சித்திக்.