1936 இல் வெளியான இரு சகோதரர்கள் படத்தின் பாதிப்பில் ப.நீலகண்டன் தியாக உள்ளம் என்ற நாடகத்தை எழுதினார். இதனை ஏவி மெய்யப்ப செட்டியார் 1946 இல் திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார். அவரே படத்தை இயக்கி, தயாரித்தார். புகழ்பெற்ற ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரான முதல் படம் இதுவாகும். படத்தின் கதை சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் தொடங்கி காந்தியின் பிறந்தநாளில் முடிவது போல் எழுதப்பட்டிருக்கும். டி.ஆர்.மகாலிங்கம், பி.ஆர்.பந்துலு, கே.சாரங்கபாணி, டி.ஆர்.ராமச்சந்திரன், வி.கே.ராமசாமி, டி.ஏ.ஜெயலக்ஷ்மி, பேபி கமலா, கே.ஆர்.செல்லம் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்தனர். படம் 1947 பொங்கலை முன்னிட்டு வெளியாகி பம்பர் ஹிட்டானது. இதன் பிறகே காரைக்குடியில் இருந்த தனது ஸ்டுடியோவை சென்னைக்கு மெய்யப்ப செட்டியார் மாற்றினார்.
நாம் இருவர் வெளியாகி கிட்டத்தட்ட 38 வருடங்களுக்குப் பிறகு அதே பெயரில் ஒரு படத்தை ஏவிஎம் தயாரித்தது. ஆனால், முந்தையப் படத்தின் ரீமேக் அல்ல. முற்றிலும் புதிய கதை. ஆனால், அப்படியும் சொல்ல முடியாது, 1985 நாம் இருவர் தமிழுக்குத்தான் புதியது. கன்னடத்துக்கு பழையது. 1984 இல் அங்கு வெளியான ராமபுரத ராவணா படத்தைத் தழுவி இந்த நாம் இருவர் எடுக்கப்பட்டது.
படத்தில் சிவாஜி ஓய்வுபெற்ற குடிகார மில்ட்டரிகாரர். பிரபு ஊருக்குள் வரும் போது, போட்டேன் ஜிஞ்சரடி... புத்தி பஞ்சரடி... என்று ஜெயமாலினியுடன் சாராயக்கடையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பார். அவருக்கு லவ் பெயிலியர். ஒருகாலத்தில் ஸ்ரீவித்யாவை காதலிப்பார். ஸ்ரீவித்யாவின் தந்தை படிப்பு மற்றும் பொருளாதாரத்தை காரணம் காட்டி சிவாஜியை நிராகரித்து, வேறொரு மாப்பிள்ளையை ஸ்ரீவித்யாவுக்கு நிச்சயம் செய்வார். சிவாஜி மனமுடைந்து மிலிட்டரியில் போய் சேர்வார். இங்கே திருமண நாளில் பர்ஸ்ட் நைட் நடக்கும் முன் ஸ்ரீவித்யாவின் கணவர் இறந்து போவார்.
சிவாஜி குடியும், ஆட்டமுமாக இருப்பதுடன் அந்த ஊர் பெரிய மனிதர் வி.கே.ராமசாமியின் கொட்டத்தை எதிர்க்கவும் செய்வார். பிரபு, சிவாஜியின் தம்பி மகள் ஊர்வசியை காதலிப்பார். வி.கே.ராமசாமி ஸ்ரீவித்யாவின் அண்ணனை கொன்று அவருக்கு திருடன் என்ற பட்டமும் கட்டுவார். இதனைத் தொடர்ந்து சிவாஜி, பிரபு, ஸ்ரீவித்யா மூவரும் ஓரணியில் நின்று வி.கே.ராமசாமியை அம்பலப்படுத்துவது கதை. கடைசி டிவிஸ்டாக வாத்தியார் பிரபு, போலீஸ் உடையில் வந்து, நான் வாத்தியார் இல்லை, க்ரைம் பிராஞ்ச் டிஎஸ்பி என்று, சிவாஜி, ஸ்ரீவித்யாவை சேர்த்து வைத்து சுபம் போடுவார். பிரபு, ஊர்வசியும் ஒன்று சேர்வார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கிய நாம் இருவருக்கு கங்கை அமரன் இசையமைத்தார். ஏவிஎம் படங்களுக்கு இளையராஜா இசையமைத்து வந்த நிலையில் நாம் இருவர் வாய்ப்பு கங்கை அமரனுக்கு தரப்பட்டது. திருவிழா... திருவிழா... இளமையின் தலைமையில் ஒருவிழா... பாடல் சூப்பர் ஹிட்டாகி நாம் இருவருக்கு அடையாளம் தந்தது. படத்தில் இடம்பெற்ற 4 பாடல்களில் இது ஒன்றுதான் உருப்படியான பாடல்.
சிவாஜியின் முதல் படம் பராசக்தி வெள்ளி விழா கண்டது. 100 வது படம் நவராத்திரியில் ஒன்பது வேடங்களில் அசத்த, படமும் வெற்றி. 125 வது படம் உயர்ந்த மனிதனும், 150 வது படம் சவாலே சமாளியும் வெற்றி. 200 வது படம் திரிசூலம் இன்டஸ்ட்ரி ஹிட். இந்தப் படங்களுடன் ஒப்பிடுகையில் 250 வது படம் நாம் இருவர் - வெற்றி பெற்றிருந்தாலும் சுமார்தான்.