எம்.ஆர்.ராதா நாடகத்தையே முழுமையான கலையாக கருதினார். அவரைப் பொறுத்தவரை சினிமா இரண்டாம்பட்சம். ஓய்வுநேர பொழுதுப்போக்கு. நாடகத்தில் எந்த ரீடேக்கும் இல்லாமல் 3 மணி நேரம் நடிக்க வேண்டும். ஆனால், சினிமாவில் ஒரு காட்சிக்கு ஒன்பது ரீடேக்குகள். "சினிமால மட்டும்தான்டா தப்பு செய்தா ஓய்வெடுக்கச் சொல்லி ஆப்பிள் ஜுஸ் தருவான்" என்று சினிமாவை எம்.ஆர்.ராதா கலாய்த்திருக்கிறார்.
சினிமாவில் சலிப்புற்று இருந்த நேரம்தான் அவரது ரத்தக்கண்ணீர் நாடகத்தை சினிமாவாக்க துணிந்து அவரிடம் வந்து கேட்கிறார்கள். அந்த நாடகம் அப்போது பல நூறுமுறை மேடையேறியிருந்தது. சாமானியர்கள் அனைவருக்கும் அந்த நாடகத்தின் கதை தெரியும். அதனை படமாக்க பலருக்கும் விருப்பம்தான். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது. எம்.ஆர்.ராதா பூனையும் அல்ல புலி. அப்படியே அவர் திரைப்படமாக்க சம்மதித்தாலும் யாரை பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பது. குஷ்டரோகி வேடத்தில் நடிக்க யார் முன் வருவார்கள்.
கடைசியாக ஒரு பிரமாஸ்திரம். அப்போது அவ்வையார் படத்துக்காக கே.பி.சுந்தராம்பாளுக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது பிரமிப்பாக பேசப்பட்டது. கே.பி.சுந்தராம்பாள் வாங்குனதைவிட இருபத்தைஞ்சாயிரம் சேர்த்து ஒரு லட்சத்து இருபத்தைஞ்சாயிரம் கொடுங்க என்று ராதா கேட்க, அதற்கும் பெருமாள் முதலியார் சம்மதித்தார்.
பிறகு வேலைகள் மளமளவென நடந்தன. நாடகத்தின் கதை, வசனகர்த்தா திருவாரூர் தங்கராசுவே சினிமாவுக்கும் வசனம் எழுதுவது என தீர்மானமானது. இயக்கம் கிருஷ்ணன் - பஞ்சு. தாசி காந்தா கதாபாத்திரத்தில் நடிக்க அப்போதைய முன்னணி நடிகைகள் யாரும் முன் வராததால் புதுமுகம் ஒருவரை ஒப்பந்தம் செய்தனர். அவர்தான் எம்.என்.ராஜம்.