புராணக் கதைகளில் மிதந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவை சமூகப் பிரச்சனைகளின் பக்கம் திருப்பியதில் திராவிட இயக்கத்துக்கு பங்குண்டு. திரைப்படங்களில் சமூக அவலங்களைப் பேசிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா போன்றவர்கள் திராவிட இயக்கத்தால் தூண்டுதல் பெற்றவர்கள். சி.என்.அண்ணாதுரை, கருணாநிதி இருவரும் கதாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக திரைப்படங்களில் சமூகக் கருத்துக்களை விதைத்தனர். சாதியும், மதமும் மனிதர்களை பிரித்து, அடிமையாக்கி வைத்திருந்தது இவர்களின் வருகைக்குப் பிறகே திரைப்படங்களில் பதிவானது.
சுந்தரம் என்ற ஜமீன்தார் கொடுமதி படைத்தவர். மற்றவர்களின் சொத்துக்களை பிடிங்கி அவர்களை நடுத்தெருவில் விடுவதில் அவருக்கு ஒரு திருப்தி. அவரிடம் கடன் வாங்கிய கீழ் சாதிக்காரரான சகாதேவனின் வீட்டையும் எடுத்துக் கொள்கிறார். சசகாதேவன் தன்னால் இறந்துவிட்டதாக கருதும் சுந்தரம், தன்னிடம் வாங்கிய கடனை திருப்பி தராமல் சகாதேவன் ஊரைவிட்டு ஓடிவிட்டதாக கதைகட்டுகிறார். இருப்பிடம் பறிபோன சகாதேவனின் மனைவி தனபாக்யம் தனது மகள் சுந்தரியுடன் வேறு கிராமத்தில் சென்று குடியேறி, தெருவில் பலகாரம் விற்று பிழைப்பு நடத்துகிறார்.
காலங்கள் கடந்த பிறகு, உயர்சாதியைச் சேர்ந்த பணக்காரனான கனகு சுந்தரி மீது காதல் கொள்கிறான். இருவரும் வேறு சாதி. ஊர் இவர்கள் காதலை ஒத்துக் கொள்ளாது என்பது தெரிந்து, சுந்தரியை யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறான். இந்த நேரத்தில் ஏற்படும் தீ விபத்தில் சுந்தரி இறந்துவிட்டதாக ஊராரைப் போல கனகுவும் நம்புகிறான். சுந்தரத்தின் சூழ்ச்சியில் கனகுவின் தந்தையும் சிக்கிக் கொள்ள, அவரைக் காப்பாற்றுவதற்காக சுந்தரத்தின் மகள் காவேரியை மனமில்லாமல் கனகு திருமணம் செய்து கொள்கிறான்.
சாதிய ஏற்றத் தாழ்வே இந்தப் படத்தின் அடிநாதம். சாதி ஆணவமும், பணமும் எப்படி அடுத்தவர்களை அடிமையாக நடத்தச் செய்கிறது என்பதை அண்ணாவின் கதை அழுத்தமாக சொல்லியிருக்கும். சரி, இந்தக் கதைக்கும் படத்தின் பெயருக்கும் என்ன தொடர்பு?
கனகு முற்போக்காளன், சாதி, மத வேறு பாடுகளைப் பார்க்காதவன் என்பதால் பதிவுத் திருமணம் செய்திருப்பான், தாலி கட்டியிருக்க மாட்டான். தாலியில்லாத ஒருத்தி குழந்தை பெற்றுக் கொண்டால் அவளை ஊர் நடத்தைக் கெட்டவள் என்று தூற்றுமே என சுந்தரியின் கழுத்தில் அவரது தாயார் தனபாக்யம் ஒரு மஞ்சள் கயிறை கட்டிவிடுவார். கனகுவும், சுந்தரி யும் சந்திக்கையில் அவளது கழுத்தில் கிடக்கும் தாலியைப் பார்த்து கனகு கேட்க, மேற்படி விஷயங்கள் தெரிய வரும்.
டி.ஆர்.பாப்பா படத்துக்கு இசையமைக்க, உடுமலை நாராயண கவி, கே.டி.சந்தானம், கண்ணதாசன் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர். வில்லன் சுந்தரம் வேடத்தில் எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அசத்தியிருந்தார். படத்திலேயே சிறந்த நடிப்பு என்றால் அது அவருடையதும் தனபாக்யமாக நடித்த கண்ணாம்பாவுடையதும்தான். சுந்தரியாக ஜமுனாவும், காவேரியாக ராஜசுலோச்சனாவும் நடித்திருந்தனர்.
தாலி கட்டுதல் என்பது சமூகத்துக்காக செய்யப்படுகிற ஒரு சடங்கு. அதைத் தாண்டி அதில் எந்தப் புனிதவும் இல்லை என்பதைக் காட்ட, தாயே மகளுக்கு தாலி கட்டியதாகச் சொல்லும் காட்சியை அண்ணா வைத்திருந்தார். அதையே படத்தின் பெயராக வைத்தது தவறாகிப் போனது. தாலி சென்டிமென்டில் ஊறிய நமது சமூகம், மகளுக்கு அம்மா தாலி கட்டினாளா, இது என்ன கண்றாவி என்று பெயரிலேயே பின்வாங்கிக் கொண்டது.
எனினும், சிறந்த ஒளிப்பதிவாளரான ஆர்.ஆர்.சந்திரன் ஒளிப்பதிவை மட்டும் பார்த்துக் கொண்டு, இயக்கத்தில் தேர்ந்த ஒருவரிடம் படம் இயக்கும் பொறுப்பை ஒப்படைத்திருந்தால், படம் இன்னும் சிறப்பான தரத்தைப் பெற்றிருக்கும், ரசிகர்களும் கண்டுகளித்திருப்பார்கள். துரதிர்ஷ்டவசமாக அப்படி அமையாமல் படம் தோல்வி கண்டது.