கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான மாறன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படங்கள் என்றால் நிச்சயம் நன்றாக இருக்கும் என்ற மக்களிடையே இருந்த நம்பிக்கையை இந்தப் படம் பொய்யாக்கியது. தனுஷுடன் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, மகேந்திரன் என பெரும் நட்சத்திரங்கள் இருந்தும் சிறிது அளவு கூட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற நம்பிக்கைக்குரிய படங்களுக்கு பிறகு சூர்யா நடித்த படம், நம்ம வீட்டுப் பிள்ளை படத்துக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கிய படம் என மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான எதற்கும் துணிந்தவன் ஏமாற்றத்தையே தந்தது. யதார்த்த படங்களைக் கொடுத்து வந்த சூர்யா நீண்ட இடைவேளைக்கு பிறகு கமர்ஷியல் ஹீரோவாக களமிறங்கினார். அதே போல குடும்ப சென்டிமென்ட்களை கொடுத்த வந்த பாண்டிராஜ் முழுக்க ஆக்ஷன் படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருந்தார். இருவரது மாற்றங்களை ரசிகர்கள் ரசிக்கவில்லையோ என்ற எண்ணத்தை படத்தின் ரிசல்ட் கொடுத்தது.
அனைவரையும் சகட்டு மேனிக்கு கலாய்ப்பது என்ற நடிகர் சந்தானம் தனது பாணியிலிருந்து விலகி சீரியசாக நடித்த படம் குலு குலு. மேயாத மான், ஆடை என விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற படங்களுக்கு பிறகு ரத்னகுமார் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்தப் படம் திரையரங்கில் வெளியாகி ஏமாற்றத்தையே கொடுத்தது. வித்தியாசமான களமாக இருந்தாலும் அனைவருக்கும் புரிந்துகொள்ளும்படி சுவாரசியமாக சொல்லாதது இந்தப் படத்தின் மைனஸ்.
வழக்கம்போல வித்தியாசமான கெட்டப்புகள், அதற்கேற்ப வேறுவேறு மேனரிசங்கள் என கோப்ரா படத்துக்கும் தனது அபரீதமான உடல் உழைப்பை கொடுத்திருந்தார் விக்ரம். டிமாண்டிக் காலனி, இமைக்கா நொடிகள் படத்துக்கு பிறகு இயக்கிய படம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் என இத்தனை இருந்தும் அழுத்தமான திரைக்கதை இல்லாததால் படம் ரசிகர்களைக் கவரவில்லை.
ஜோம்பி படம், ஸ்பேஸ் ஃபிலிம் என ஹாலிவுட் கான்செப்டுகளை எடுத்து அதனை தமிழுக்கு ஏற்றார் போல நம்பகமான திரைக்கதையுடன் கொடுத்து வந்தார் இயக்குநர் சக்தி சௌந்தரராஜன். டெடி படத்துக்கு பிறகு ஆர்யா - சக்தி சௌந்தரராஜன் நடித்த படம் கேப்டன். ஆனால் மோசமான விஎஃப்எக்ஸ் காட்சிகளால் படம் ரசிகர்களின் பொறுமையை சோதித்தது.
டாக்டர், டான் என மிகப்பெரிய வெற்றிப்படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த படம் பிரின்ஸ். ஜதிரத்னாலு என்ற சூப்பர் ஹிட் தெலுங்கு நகைச்சுவை படத்தைக் கொடுத்த அனுதீப் கேவி இயக்கிய படம், இத்தகைய காரணங்களால் பிரின்ஸ் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்றது. புதுமுக நடிகர்கள் நடித்திருக்க வேண்டும், சிவகார்த்திகேயனின் மாஸ் இமேஜுக்கு இந்தப் படம் செட் ஆகவில்லை என்ற ரசிகர்களின் கருத்துக்களை கேட்க முடிந்தது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா, எம்ஜிஆர் மகன் என தலா 2 வெற்றிப் படங்கள் 2 தோல்வி படங்களைக் கொடுத்த இயக்குநர் பொன்ராம் டிஎஸ்பி படத்துக்காக இந்த முறை விஜய் சேதுபதியுடன் களமிறங்கினார். விஜய் சேதுபதிக்கு சோலோ ஹீரோவாக வெற்றிப் படமாக நிச்சயம் அமையும் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கியது டிஎஸ்பி பட ரிசல்ட். பழைய கதை, வலுவற்ற திரைக்கதை என இந்தப் படம் ரசிகர்களிடையே எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
நீண்ட இடைவேளைக்கு பிறகு சோலோ ஹீரோவாக வடிவேலு நடித்த படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். வடிவேலு - சுராஜ் கூட்டணியின் தலைநகரம், மருதமலை பட காமெடிகள் இன்றளவும் ரிப்பீட் மோடில் ரசிகர்கள் பார்த்துவருகிறார்கள். அந்த வகையில் இருவரும் இணைந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. காமெடி எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சோகமே மிஞ்சியது.