குறுகிய காலத்தில் தொடர்ச்சியாக திரைப்படங்கள் எடுப்பதில் கேஎஸ் ரவிக்குமார், சுந்தர் சி ஆகியோருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் எஸ்பி முத்துராமன். ஏவிஎம் நிறுவனத்தில் எடிட்டிங் உதவியாளராக இருந்த எஸ் பி முத்துராமனுக்கும் கமலுக்கும் ஒரு பழைய தொடர்பு உண்டு. கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் எஸ்பி முத்துராமன் முதல் முதலாக உதவி இயக்குனராக பணியாற்றினார். கிருஷ்ணன் - பஞ்சு, யோகானந்த், கிருஷ்ண நாயர், பீம்சிங், திரிலோகசந்தர் என அன்றைய முன்னணி இயக்குனர்கள் பலரிடம் தொழில் பயின்ற பின் 1972 இல கனிமுத்து பாப்பா திரைப்படத்தை இயக்கினார். 1976 இல் இவர் இயக்கிய ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதே வருடம் இவர் இயக்கிய இன்னொரு வெற்றிப் படம் மோகம் முப்பது வருஷம்.
எழுத்தாளர் மணியன் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய மோகம் முப்பது வருஷம் கதையைத் தழுவி இந்தப் படத்தை எடுத்தனர். மணியனின் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் இயக்குனர் மகேந்திரன். கணவன்- மனைவி உறவு அசிங்கமானது அல்ல; அது பேரின்பம். அது 30 நாளில் முடிந்து விடக் கூடியது அல்ல முப்பது வருடங்களுக்கு மேல் நீடிக்கக்கூடியது என்ற கருத்தை பிரதிபலிக்கும் இந்தக் கதையில் கமல் சுமித்ரா விஜயகுமார் படாபட் ஜெயலட்சுமி ஸ்ரீபிரியா மேஜர் சுந்தர்ராஜன் சுகுமாரி உள்ளிட்டோர் நடித்தனர்.
வெளிநாட்டில் படித்த கமலுக்கு சொந்தம் விட்டுப் போகக் கூடாது என கிராமத்து முறைப்பெண் சுமித்திராவை திருமணம் செய்து வைப்பார்கள். விஜயகுமார் கிராமத்து மனநிலை கொண்ட ஓவியர். அவரது மனைவி படாபட் ஜெயலட்சுமி மாடர்ன் பெண். இப்படி இரு துருவங்களாக இருக்கும் இரண்டு ஜோடிகளை பற்றிய கதை இது. ஸ்ரீபிரியா பாமா என்ற இளம் பெண் வேடத்தில் நடித்திருந்தார். சுமித்ராவுக்கு படத்தில் வெள்ளந்தியான வேடம். கமல் ஆசையோடு மல்லிகைப் பூ வாங்கி வந்தால் தூக்கக் கலக்கத்துடன், பூவை சாமி படத்திற்கு வைத்து விடுங்கள் என்று சொல்லக்கூடியவர். படப்பிடிப்பு தளத்திலும் ஏதாவது நகைச்சுவை சொன்னால் அவர் புரிந்து கொண்டு சிரிப்பதற்கு பல நிமிடங்கள் பிடிக்கும் என்பதால் அவரை டியூப் லைட் என்று பெயர் வைத்து கிண்டல் செய்ததாக எஸ்பி முத்துராமன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.
படாபட் ஜெயலஷ்மிக்கு கணவர் விஜயகுமாரை விட மாடர்ன் இளைஞனான கமல் மீது ஓர் மயக்கம். அவருடன் இணைவதற்கு துடித்துக் கொண்டிருப்பார் இருவரும் தனியாக சந்திக்க நேரம் தருணத்தில் தப்பு செய்து விடுவார்கள் என ரசிகர்கள் எண்ணக் கூடிய ஒரு காட்சியும் படத்தில் உண்டு. ஶ்ரீப்ரியாவுக்கும் கமல் மீது காமம். நீ திருமணம் ஆனவன். என்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. ஆனால் ஒரே ஒரு குழந்தை மட்டும் கொடு. அந்த குழந்தையுடன் வாழ்ந்து விடுகிறேன் என்பார். அவரது ஆசைக்கு கமல் உடன்பட மாட்டார். இப்படி அந்த காலத்திலேயே சிக்கலான கதையை குடும்பத்தோடு பார்க்கிற வகையில் எடுத்திருந்தார் எஸ் பி முத்துராமன். படத்திற்கு சென்சார் ஏ சான்றிதழ் வழங்கியிருந்தது.
மோகம் முப்பது வருஷம் திரைப்படத்தின் வெற்றியின் காரணமாக இதே கூட்டணி அடுத்த வருடம் இணைந்தது. இயக்குனர் மகேந்திரன் கதை வசனம் எழுத, எஸ் பி முத்துராமன் இயக்க, சாந்தி நாராயணன் தயாரிக்க, விஜயபாஸ்கர் இசையில் ஆடு புலி ஆட்டம் திரைப்படம் எடுக்கப்பட்டது. இதில் கமலுடன் ரஜினியும் நடித்திருந்தார். கமல் நாயகன் ரஜினி வில்லன். கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட இந்த ஆக்சன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தயாரிப்பாளர் சாந்தி நாராயணனுக்கு முந்தைய படத்தை விட அதிக லாபத்தை பெற்றுத் தந்தது.
30, 40 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமானது. அப்படங்களின் கதையை இந்த காலகட்டத்துக்கு ஏற்ற காட்சிகளுடன் மறு உருவாக்கம் செய்து வெளியிட்டால் இப்போதும் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. அப்படி ஒரு எக்காலத்திற்குமான திரைப்படம் தான் மோகம் முப்பது வருஷம்.
1976 நவம்பர் 27ஆம் தேதி வெளியான மோகம் முப்பது வருஷம் திரைப்படம் நேற்று முன்தினம் தனது 46 வருட நிறைவை கொண்டாடியது.