பொன்னியின் செல்வன் திரைப்படம் சோழர்களின் பெருமையை உலகறியச் செய்தது, இந்தக் கதையை முதன்முதலில் படமாக்க விரும்பியவர் எம்ஜி ராமச்சந்திரன், பொன்னியின் செல்வன் பெயரில் படத்தை அறிவித்து, கதாபாத்திரங்களைக்கூட அறிமுகப்படுத்தினார். ஆனால், அவரது விருப்பம் நிறைவேறாமல் போனது என்று மணிரத்னத்தினத்தின் பொன்னியின் செல்வனையும், எம்ஜி ராமச்சந்திரன் எடுக்காமல் போன பொன்னியின் செல்வனையும் சலிக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனை கேட்கும் போது சிவாஜி ரசிகர்களின் பிபி ஏறுவதையும் உணர முடிகிறது.
பொன்னியின் செல்வன் கதையை எத்தனை பேர் எடுக்க முயன்று தோற்றுப் போய் கடைசியில் மணிரத்னம் எடுத்திருக்கிறார் தெரியுமா? என்று கேட்பவர்கள், அதே சோழனை குறித்து 1973 இல் எடுக்கப்பட்ட ராஜராஜ சோழன் படத்தை மறந்துவிடுகிறார்கள். தஞ்சை பெரிய கோவிலை கட்ட காரணமாக இருந்த ராஜராஜ சோழனின் கதையை படமாக்க ஒன்றல்ல இரண்டல்ல பதினேழு பேர் முயன்றனர். ஒருவராலும் முயற்சியை வினையாக்க முடியவில்லை.
இறுதியாக ஆனந்த் மூவிஸ் ஜி.உமாபதி சிவாஜியை வைத்து ராஜராஜ சோழன் படத்தை தயாரித்தார். 1973 திரைக்கு வந்தப் படம் 98 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. அந்த நேரத்தில் வேறு சில சிவாஜி படங்கள் வந்ததால் 100 நாளை தவறவிட்டது. எனினும் படம் கமர்ஷியலாக வெற்றிதான். ராஜராஜன் கதையை முதலில் படமாக்க விரும்பியவர் ஏவி மெய்யப்ப செட்டியார் என்பது குறிப்பிடத்தக்கது. அவராலேயே முடியாமல் கடைசியில் ஜி.உமாபதிதான் சாதித்தார்.
பொன்னியின் செல்வனுக்கு முன்பே ராஜராஜ சோழனின் கதையில் நடித்தவர் சிவாஜி என்ற பெருமை அவரது ரசிகர்களுக்கு உண்டு. அறுபதுகளின் ஆரம்பம்வரை ராஜா ராணி கதைகளில் வாள் சண்டைப் போட்டுக் கொண்டிருந்த எம்ஜி ராமச்சந்திரன் ராஜராஜ சோழன் கதையை எப்படி தவறவிட்டார்? சரியான கதாசிரியர் அமையாதது ஒரு காரணமாக இருக்கலாம். இன்னொரு காரணம், ராஜராஜ சோழனாக ராஜ ராஜன் என்ற படத்தில் அவர் 1957 லேயே நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் அவர் சோழ இளவரசர் ராஜராஜனாக வருவார். கதாபாத்திரப் பெயரும், அவரது நாட்டின் பெயரும் தவிர வேறு எதுவும் சோழ வரலாறைக் கொண்டிராது. அதாவது கற்பனையான ராஜ ராணி கதைதான் ராஜ ராஜன். அதில் வரும் பிரதான கதாபாத்திரத்துக்கு ராஜராஜன் என பெயர் வைத்து, அவன் சோழ இளவரசன் என்று காட்டியிருந்தனர். சிவாஜியின் ராஜராஜ சோழனில் சரித்திரம் நிறைந்திருக்கும். ரசிகர்கள் எதிர்பார்த்த போர்க்காட்சிகள், சண்டைக் காட்சிகள் அதிகமில்லை. எம்ஜி ராமச்சந்திரனின் படத்தில் சரித்திரம் இல்லை. ஆனால், ரசிகர்கள் விரும்பும் மர்மம், பழிவாங்கல், காதல், சண்டை, போர்க்காட்சி எல்லாம் இருந்தது.
ராஜ ராஜனில் வில்லன் பி.எஸ்.வீரப்பா. கதைப்படி சோழ நாட்டின் தளபதி. பெயர் நாகவேலன். அவர் சோழ இளவரசன் ராஜராஜனை சிறை வைத்து, நாட்டை கைப்பற்ற பார்ப்பார். நாகவேலனின் தங்கை பிரியமோகினி ராஜராஜன் தப்பித்துச் செல்ல உதவி செய்வாள். ஏமாற்றமடைந்த நாகவேலன், இளவரசன் வேடனின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் வேடனும், அவன் கூட்டமும் சேர்ந்து இளவரசனை அடித்துக் கொன்றதாக கதைகட்டிவிடுவான்.
எம்ஜி ராமச்சந்திரன் தனது அனைத்துத் திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கு வசதியான கதை. வாள் சண்டை, காதல் காட்சி, ஆக்ரோஷ மோதல், பூசாரியாக குத்தாட்டம் போடுவது என அனைத்தையும் சிறப்பாக செய்திருந்தார். அவரை ஒருதலையாக காதலித்து, அதற்காகவே உயிர்துறக்கும் பிரியமோகினி வேடத்தில் லலிதா நடித்திருந்தார். அவரை ஒருதலையாகக் காதலிக்கும் வேடம் நம்பியாருக்கு. இவர் நாகவேலனின் வலது கை. ரமாவாக பத்மினி நடித்திருந்தார். அவரது நடனத்திறமையை வெளிக்காட்ட மறக்காமல் நடனமும் வைத்திருந்தனர்.
படத்தில் இடம்பெற்ற உள்அரங்குகள் சிறப்பாக இருந்தாலும், வெளிஅரங்குகள் சோபிக்கவில்லை. எனினும் திரைக்கதை மற்றும் காட்சிகளின் சுவாரஸியத்தால் இன்றும் போரடிக்காமல் பார்க்கக் கூடிய படமாக ராஜ ராஜன் இருப்பது தனிச்சிறப்பு. படம் வெளிவந்த காலத்தில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றது. படத்தில் இடம்பெற்ற பதினொரு பாடல்களில் எம்ஜி ராமச்சந்திரன் பூசாரி வேடத்தில் கோவிலில் பாடி ஆடும் நாட்டுப்பற பாணியிலான பாடல்தான் சிறப்பு எனச் சொல்லலாம்.