1972 ம் ஆண்டு, மார்ச் 10 ம் தேதி எம்.ஜிஆரின் நல்ல நேரம் திரைப்படம் வெளியானது. எம்.எம்.ஏ.சாண்டோ சின்னப்ப தேவரின் தேவர் பிலிம்ஸ் படத்தைத் தயாரித்தது. தேவரின் இளைய சகோதரர் எம்.ஏ.திருமுகம் படத்தை இயக்கினார். தேவரின் படங்கள் என்றால் நாய், ஆடு, மாடு, பாம்பு, குரங்கு, சிங்கம், சிறுத்தை, யானை என்று ஏதாவது ஒரு விலங்கு அல்லது இவற்றில் பல விலங்குகள் இடம்பெறும். மனிதர்களைவிட விலங்குகள் ரசிகர்களை மகிழ்விக்கும் என்பதில் தேவர் மாறாத நம்பிக்கை கொண்டிருந்தார். நல்ல நேரம் படத்தில் யானைகள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன. இந்தப் படம் உருவான கதை, படத்தின் கதையைவிட சுவாரஸியமானது.
1956 இல் எம்ஜிஆர் நடித்த தாய்க்குப் பின் தாரம் படத்திலிருந்து 1970 இல் வெளியான ஜெய்சங்கரின் மன்னவன் திரைப்படம்வரை முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தேவர் தயாரித்தார். அந்தக் காலகட்டத்தில் ஏவிஎம் நிறுவனமும், நாகிரெட்டியின் விஜயா புரொடக்ஷன்ஸும் இந்தியில் படங்கள் தயாரித்து வந்தன. தேவருக்கும் இந்திப் படம் தயாரிக்கும் ஆசை வந்தது. மனதில் ஒரு விதை விழுந்துவிட்டால் அதனை ஆலமரமாக்காமல் தேவர் ஓய மாட்டார். அதேபோல், மோதுவது என்று முடிவானால் எல்லைப்புறத்தைவிட்டு நேராக தலைநகரை தாக்குதுவதான் அவரது பாணி.
இந்திப் படம் தயாரிப்பது என முடிவானதும், அன்றைய தேதியில் முன்னணி நடிகராக இருந்த ராஜேஷ் கன்னாவை நாயகனாக்குவது என தீர்மானித்தார். அப்போது ராஜேஷ் கன்னா ஆசீர்வாத் என்ற தனது கனவு வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு பணத்தேவை இருந்ததை அறிந்த தேவர், வீட்டை கட்டி முடிப்பதற்கான முழுத்தொகையை சம்பளமாக அளித்தார். ராஜேஷ் கன்னாவால் மறுத்துக்கூற முடியவில்லை. ஆனால், தேவர் சொன்ன கதைதான் அவருக்குப் பிரச்சனையாக இருந்தது.
1967 இல் தேவர் தெய்வச் செயல் என்ற படத்தை தண்டாயுதபாணி பிலிம்ஸ் பேனரில் தயாரித்திருந்தார். எம்.ஜி.பாலு இயக்கத்தில் ஆர்.சுந்தர்ராஜன், முத்துராமன் நடித்த இந்தப் படத்தின் கதையை எழுதியதுடன், இயக்க மேற்பார்வையையும் தேவர் கவனித்துக் கொண்டார். ஏறக்குறைய தேவர் எழுதி, இயக்கி, தயாரித்த படம். தெய்வச் செயல் வெளியான போது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனினும் தனது கதையின் மீதிருந்த அதீத நம்பிக்கையால் அதையே இந்தியில் ராஜேஷ் கன்னாவை வைத்து எடுக்க முடிவு செய்திருந்தார் தேவர்.
தெய்வச்செயலில் ஆர்.சுந்தர்ராஜன் பெரும் பணக்காரர். நான்கு யானைகளை தனது குழந்தைகள் போல் வளர்த்து வருவார். அவரைச் சுற்றியிருப்பவர்கள் அவரை ஏமாற்றி, அவரை நடுத்தெருவுக்கு கொண்டு வருவார்கள். கால்நடை மருத்துவம் படிக்கும் மகனுக்கு (முத்துராமன்) இவை தெரியாமல் பார்த்துக் கொள்வார். யானைகளை வைத்து வித்தைக் காட்டி அதில் வரும் பணத்தில், அன்பு உலகம் என்ற மிருகக்காட்சி சாலையை ஏற்படுத்துவார். முத்துராமன் காதலிக்கும் பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைப்பார். மருமகள் வந்ததும் பிரச்சனை தொடங்கும்.
யானைகளை வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என மருமகளும், மகனும்கூற, சுந்தர்ராஜன் வீட்டைவிட்டு வெளியேறுவார். அவரது ப்ரியத்துக்குரிய யானை ராமு இவர்களை சேர்த்து வைப்பதற்காக உயிர்த் தியாகம் செய்ய, இறுதியில் குடும்பம் ஒன்றிணையும். படத்தில் தந்தையாக வரும் ஆர்.சுந்தர்ராஜனுக்குதான் அதிக முக்கியத்துவம் இருக்கும். மகன் முத்துராமனுக்கு சின்ன கதாபாத்திரம், ஆனால் காதல் காட்சிகள் இருப்பது அவருக்குத்தான். இரண்டில் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் நாயகனுக்குரிய முழுமை அமையாது.
அதேநேரம், தேவர் தந்த பணத்தை இழக்கவும் ராஜேஷ் கன்னாவுக்கு மனமில்லை. அவர் திரைக்கதையாசிரியர் சலீம் கானிடம் பிரச்சனையை எடுத்துச் சொல்கிறார். இந்த சலீம் கான் வேறு யாருமில்லை, நடிகர் சல்மான் கானின் தந்தை. 'தேவர் தந்த பணம் எனக்குத் தேவை. ஆனால், அவர் சொல்கிற கதையை அப்படியே எடுக்க முடியாது, நீங்கள்தான் மாற்றித் தர வேண்டும்' என ராஜேஷ் கன்னா அவரிடம் கோரிக்கை வைக்கிறார். சலீம் கான் ஜவேத் அக்தருடன் இணைந்து தெய்வச் செயல் படத்தின் திரைக்கதையை மாற்றினார். தந்தை, மகன் கதாபாத்திரங்களை இணைத்து, ஒரே கதாபாத்திரமாக்கினார்கள். இப்போது நாயக கதாபாத்திரம் புதிய மெருகுடன் முக்கியத்துவம் பெற்றது. எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் தேவரின் முதல் இந்திப் படம் ஹாத்தி மேரே சாத்தி வெளியானது. இந்தப் படத்தில்தான் சலீம் - ஜாவேத் வெற்றிக் கூட்டணிக்கு முதல் முதலில் திரையில் அங்கீகாரம் கிடைத்தது. பிறகு ஏராளமான படங்களில் இணைந்து பணியாற்றி இந்திய வணிக சினிமாவின் போக்கையே இவர்கள் மாற்றினர்.
1971 ம் ஆண்டு, மே 1 தொழிலாளர் தினத்தன்று வெளியான ஹாத்தி மேரே சாத்தி படத்தை மக்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று கண்டு களித்தனர். 'நாங்கள் எடுத்தப் படங்கள் இந்தியில் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால், கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் கட்டிய தூளிகளால் திரையரங்கு வளாகம் நிறைந்திருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். இந்தியில் சாதித்துவிட்டீர்கள்' என்று நாகிரெட்டி தேவரை பாராட்டினார். சுமார் 17 கோடிகளை வசூலித்து, 1971 இல் அதிகம் வசூல் செய்த இந்திப் படம் என்ற சாதனையை ஹாத்தி மேரே சாத்தி படைத்தது. அன்றைய 17 கோடிகள் என்பது இந்தக் காலகட்டத்தில் ஆயிரம் கோடிகளுக்கு மேல் மதிப்புடையது.
ஹாத்தி மேரே சாத்தி அப்போதைய சோவியத்யூனியினில் வெளியாகி அங்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அங்கு சுமார் 3 கோடியே, 48 லட்சம் பேர் படத்தைப் பார்த்தனர். படத்தின் வெற்றியால் உற்சாகமான தேவர் அடுத்த வருடமே ஹாத்தி மேரே சாத்தி படத்தை தமிழில் நல்ல நேரம் என்ற பெயரில் எம்ஜிஆர், கே.ஆர்.விஜயாவை வைத்து எடுத்தார். நல்ல நேரத்தின் உண்மையான மூலமான தெய்வச் செயல் படத்தில் நாயகனாக நடித்த ஆர்.சுந்தர்ராஜனை நல்ல நேரத்தில் வில்லனாக்கினார். எம்ஜிஆரின் நட்சத்திர பலமும், கே.வி.மகாதேவனின் இசையும், கண்ணதாசன், புலமைப்பித்தன், அவினாசி மணி ஆகியோரின் பாடல்களும், எம்.ஏ.திருமயத்தின் இயக்கமும், சுறுசுறுப்பான நான்கு யானைகளும் சேர்ந்து நல்ல நேரத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக்கின.
தெய்வச் செயல் என்ற சுமார் படம் இந்திக்குச் சென்று, அங்கு திரைக்கதையில் மாற்றம் பெற்று, ஹாத்தி மேரே சாத்தி என்ற வெற்றிப் படமாகி, மீண்டும் தமிழுக்கு வந்து, நல்ல நேரமாக இரண்டாவது வெற்றியை பெற்றது. ஒரு சுமார் படம், திரைக்கதை மாற்றத்தால் எப்படி சூப்பர் ஹிட் திரைப்படமாகும் என்பதற்கு இந்த மூன்று படங்களும் இன்றும் உதாரணமாக உள்ளன.