செருப்பு தைப்பவரின் மகனாகப் பிறந்த வீரன், அந்த நாட்டின் தளபதியாக உயர்வதைச் சொல்லும் கதைதான் வீரன். 1939 இல் மதுரை வீரன் கதை அதே பெயரில் படமாக்கப்பட்டது. பிறகு பி.யூ.சின்னப்பா நடிப்பில் நாற்பதுகளில் மறுபடியும் படமாக்கும் முயற்சிகள் நடந்தன. நவீனா பிக்சர்ஸ் மேற்கொண்ட இந்த முயற்சி பலனளிக்கவில்லை. அதன் பிறகு கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியார் 1956 இல் மதுரை வீரனை எம்ஜி ராமச்சந்திரன் நடிப்பில் திரைப்படமாக்கினார். டி.யோகானந்த் படத்தை இயக்கினார்.
வரலாற்று பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் மதுரை வீரன் அருந்ததிய சமூகத்தில் பிறந்து, தளபதியாக உயர்ந்தவன் என்கிறார். ஆனால், 1956 இல் கண்ணதாசன் எழுத்தில் வெளியான மதுரை வீரனில் அவன் உயர்குலத்தில் பிறந்து செருப்பு தைக்கிறவரால் வளர்க்கப்படுவதாக காட்டப்பட்டது. பொதுவாக பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் பெரிய பதவிகளை அடைந்தாலோ, சாதனைகள் புரிந்தாலோ அவர்களை உயர்சாதியுடன் இணைத்து பேசுவது தொன்றுதொட்டே இருந்து வரும் ஆதிக்க மரபு. கீழ் சாதிக்காரனால் எதையும் சாதிக்க முடியாது என்ற ஆதிக்க மனப்பான்மையால் உருவான மரபு இது. திருவள்ளுவரைக்கூட ஆதி என்ற அந்தணருக்கும், பகவதி என்ற கீழ் சாதிப் பெண்ணிற்கும் பிறந்தவர் என்று ஒருசாரர் கூறுவதும் இதன் பாற்பட்டதே.
புராண, இதிகாசங்களில் வரும் இந்த ஆதிக்க மனப்பான்மை நமது திரைப்படங்களிலும் பிரதிபலிப்பதைப் பார்க்கலாம். படத்தின் நாயகன் கதைப்படி வேலைக்காரனாக, ஏழையாக இருப்பான். அவனது முதலாளியின் அனைத்து ஆஸ்திகளுக்கும் அவனே வாரிசு எனவும், சந்தர்ப்பவசத்தால் அவன் வேலைக்காரனாக இருப்பதாகவும் கதைப் பண்ணியிருப்பார்கள். இதே கதையில் ரஜினியே பல படங்களில் நடித்திருப்பார்.
மதுரை வீரன் உருவான காலகட்டம் முக்கியமானது. 1952 இலிருந்து 1954 வரை முதலமைச்சராக இருந்த ராஜாஜி என்கிற ராஜகோபாலாச்சாரி குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்வது அவசியம் என்ற பெயரில் குலக்கல்வியை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது. அதன்படி மாணவர்கள் பாதி நாள் வகுப்பறையில் பாடம் படிக்க வேண்டும். மீதி நேரம் தனது தந்தையின் தொழிலை பழக வேண்டும். அதாவது செருப்பு தைக்கிறவனின் மகன் செருப்பு தைக்க வேண்டும், சலவைத் தொழிலாளியின் மகன் துணி வெளுக்க வேண்டும்.
குலக்கல்விக்கு எதிர்ப்பு வலுத்ததால் தனது நோயை காரணம் காட்டி ராஜகோபாலாச்சாரி பதவி விலக, காமராஜர் முதலமைச்சரானார். குலக்கல்வித் திட்டம் கைவிடப்பட்டது. முக்கியமான இந்த காலகட்டத்தில் தயாரானதுதான் மதுரை வீரன் திரைப்படம். கண்ணதாசன் இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதினார். இதில் இடம்பெற்ற சும்மா இருந்தா... எனத் தொடங்கும் பாடலில் குலக்கல்வியை மறைமுகமாக ஆதரிக்கும் வரிகள் இடம்பெற்றன. அந்தப் பாடல்...
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்
உண்மையோடு உழைக்கோணும்
தானே தன்னன்னா - மச்சான்
ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா...
படிச்சு வேலைக்கு பலபேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்
கொடுத்த வேலையை முடிப்பது சிரேஷ்டம்
குடிசைத் தொழிலில் வேணும் நாட்டம்
உண்மையோடு உழைக்கோணும்
தானே தன்னன்னா - மச்சான்
ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா...
அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை
இப்படிச் செய்வதினாலே தொல்லை
ஏற்பட்டதென்றால் கேட்பதும் இல்லை
தெரிஞ்ச தொழிலை செய்தாலே
தானே தன்னன்னா - மச்சான்
தாழ்வுமில்லை அதனாலே தானே தன்னன்னா
வேலை வேலை என்று ஓலமிட்டு அழுதா
ஆளைத் தேடியது வீட்டுக்கு வருதா
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விபரம் புரியுதா
பாடுபட்டால் பலனுண்டு
தானே தன்னன்னா - மச்சான்
பஞ்சந்தீர்க்க வழியுண்டு
தானே தன்னன்னா...
மலைதனில் சிறியதும் பெரியதும் உண்டு
மனிதர்கள் அறிவிலும் அதுபோல் உண்டு
உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று
உண்மையோடு உழைக்கோணும்
தானே தன்னன்னா - மச்சான்
ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா...
அருமையான வரிகள் அமைந்த இந்தப் பாடலில், அப்பன் தொழிலை பிள்ளைகள் பார்ப்பதில்லை. அதனால் தொல்லைகள் ஏற்படும் என்று சொன்னால் யாரும் கேட்பதும் இல்லை. அப்படி அப்பன் தொழிலை செய்தால் வேலைப் பஞ்சம் ஏற்படாது என்கிறார்கள். இதைத்தான் ஆதிக்க சக்திகளும் சொல்கின்றன. அதாவது , அப்பன் சலவைத் தொழிலாளியாக இருந்தால் மகனும் ஊரார் துணி வெளுக்க வேண்டும், அப்பன் முடி திருத்துபவராக இருந்தால் மகனும் முடிதான் வெட்ட வேண்டும்... அதைவிட்டுவிட்டு பட்டம் படித்து ஏன் வேலை வேலை என்று வேலைக்கு அலைகிறீர்கள்?
திரைப்படம் என்பது பொழுதுப்போக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு திரைப்படத்திலும் ஓர் அரசியல் உள்ளது. அது வெகுஜனமக்களின் மனதில் அவர்களை அறியாமலே ஒரு கருத்துருவை உருவாக்குகிறது. அதுவே சமூகத்திலும், தேர்தல் அரசியலிலும் சொல்வாக்குச் செலுத்துகிறது. இதனை புரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் திரைப்படங்களை அணுக வேண்டும் என்பதை மதுரை வீரன் பாடல் நமக்கு உணர்த்துகிறது.