1936 இல் சதிலீலாவதியில் நடிகராக அறிமுகமான எம்ஜி ராமச்சந்திரன், அதே வருடம் இரு சகோதரர்கள் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி தெரியவில்லை. 1938 இல் அவரது நடிப்பில் வெளியான வீர ஜெகதீஷ் படத்தின் வெளியீட்டு தேதியும் சரியாக தெரியவில்லை. இவ்விரு படங்கள் ஒருவேளை பொங்கலுக்குக்கூட வெளியாகியிருக்கலாம். இந்த சாத்தியக்கூறை தவிர்த்துப் பார்த்தால், பொங்கலுக்கு வெளியான முதல் எம்ஜிஆர் படம் பணத்தோட்டம். 1963, ஜனவரி 11 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு பணத்தோட்டத்தை வெளியிட்டனர்.
பணத்தோட்டம் சி.அண்ணாதுரை எழுதிய புத்தகத்தின் பெயர். எம்ஜிஆர் தீவிர திமுக விசுவாசியாக இருந்த காலத்தில், அண்ணாவின் புத்தகப் பெயரையே படத்தின் பெயராக்கினர். கே.சங்கர் படத்தை இயக்கினார். இவர் எடிட்டராக இருந்து இயக்குனரானவர். 1959 இல் இவர் இயக்கிய ஒரே வழி தமிழ்ப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் பிரேம் நசீர் நடித்தார். அதனைத் தொடர்ந்து கண்ணதாசன் எழுதி, தயாரித்த சிவகங்கைச் சீமை படத்தை இயக்கினார். மருது சகோதரர்களைப் பற்றிய திரைப்படம் இது. இந்தப் படத்தை ஊமையன் கோட்டை என்ற பெயரில் எம்ஜி ராமச்சந்திரனை வைத்து முதலில் தொடங்கினர். அவர் பாதியில் படத்திலிருந்து கழன்று கொள்ள, எஸ்.எஸ்.ராஜேந்திரனை வைத்து சிவகங்கைச் சீமை என்ற பெயரில் அதே கதையை எடுத்தனர். இதனால் சங்கருக்கு எம்ஜிஆர் மீது கோபம் இருந்தது.
பணத்தோட்டம் படத்தை இயக்கும் வாய்ப்பு சங்கருக்கு வந்த போது முதலில் அதனை மறுத்தார். பிறகு ஒருவழியாக சமாதானமாகி படப்பிடிப்பை தொடங்கினார். அந்த நேரத்தில் சிவாஜியின் ஆலயமணி படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது. இரண்டு படங்களுக்கும் சங்கர்தான் இயக்குனர். காலையில் ஆலயமணி, மதியத்துக்கு மேல் பணத்தோட்டம் என அட்டவணைப் போட்டு படப்பிடிப்பை நடத்தினர். சிவாஜி படத்தின் படப்பிடிப்பு வாகினி ஸ்டுடியோவிலும், பணத்தோட்டம் படப்பிடிப்பு சத்யா ஸ்டுடியோவிலும் நடந்தது. பணத்தோட்டம் கிளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பை காலை ஏழுமணிக்குத் தொடங்கி மறுநாள் ஏழுமணிவரை தொடர்ச்சியாக நடத்தினர்.
பணத்தோட்டத்தில் சரோஜாதேவி, எஸ்.வி.சுப்பையா, நம்பியார், அசோகன், நாகேஷ் ஆகியோருடன் மலையாள நடிகை ஷீலாவும் நடித்தார். இதற்கு முன் அவர் எம்ஜி ராமச்சந்திரனுடன் பாசம் படத்தில் நடித்திருந்தார். படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையும், கண்ணதாசனின் பாடல் வரிகளும். குறிப்பாக, பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா... பாடலில் கண்ணதாசன் புகுந்து விளையாடியிருப்பார். 'சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா...' என்ற வரியில், எம்ஜிஆர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதை சுட்டிக் காட்டியிருப்பார். அவரது வள்ளல்தன்மையை குறிக்க பாரி வள்ளல் மகனா என்ற வரியை சேர்த்திருப்பார்.
சங்கரின் மறுதலிப்பில் தொடங்கிய படம் வெற்றிகரமாக முடிந்து 1963 ஜனவரி 11 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்து வெற்றி பெற்றது. தனது படத்தை இயக்க மாட்டேன் என்று சங்கர் சொன்னதை, படத்தின் வெற்றிக்குப் பிறகு சங்கரிடமே கேட்டார் எம்ஜிஆர். அவர் அதற்கு வருத்தம் தெரிவிக்க, கலங்கரை விளக்கம், சந்திரோதயம், குமரிக்கோட்டம் என்று எம்ஜிஆரை வைத்து மேலும் பல படங்களை சங்கர் இயக்கினார். எம்ஜிஆர் ரசிகர்களைப் பொறுத்தவரை, அவர்களது வாத்தியார் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி அவர்களை மகிழ்வித்த முதல் படம் பணத்தோட்டமாகும்.