பணக்காரரான தர்மலிங்கத்துக்கு இரு மகன்கள். மூத்தவன் ஏழை கமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அவர்களை தர்மலிங்கம் ஏற்றுக் கொள்ள மாட்டார். மூத்த மகன் இறந்து கமலாவும், அவர்களின் ஒரே குழந்தையும் அனாதையான நிலையில், இன்ஸ்பெக்டர் நாதன் கமலாவுக்கும், அவளது குழந்தைக்கும் அடைக்கலம் தருவார். நியாயப்படி கமலாவுக்கு சேர வேண்டிய சொத்துக்காக அவள் போராட வேண்டும் என்று நினைப்பார் இன்ஸ்பெக்டர் நாதன். ஆனால், அவள் கோர்ட்டுக்கு செல்லும் வழியில் கொல்லப்படுவாள்.
கமலா கொலையின் சந்தேகம் தர்மலிங்கம் மற்றும் அவரது இரண்டாவது மகன் சங்கரின் மீது விழும். சங்கர் நாதனின் தங்கை உமாவை காதலிப்பான். அதேநேரம் தர்மலிங்கத்தின் மகள் சரசுவை நாதன் காதலிப்பார். இந்த காதல்கள் காரணமாக கமலா கொலை விசாரணை உணர்வுப்பூர்வமான நெருக்கடியை நாதனுக்கு ஏற்படுத்தும். இறுதியில் யார் கொலையாளி என்பதை நாதன் கண்டுபிடிப்பதுடன் சுபம்.
எம்ஜிஆர் ரசிகர்களுக்கான சண்டை, காதல், சரசம், பாடல்கள் என அனைத்தும் என் கடமையில் இடம்பெற்றிருந்தது. எனினும் படம் சரியாகப் போகவில்லை. என் கடமையின் தோல்வி குறித்து, எம்ஆர் ராதா எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்ட வழக்கு விசாரணையின் போது கேட்கப்பட்டது. அப்போது எம்ஜிஆரிடமும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன. 1965 ஜனவரி 26 அன்று இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்துடன், அரசியலமைப்பு சட்ட நகலை எரிக்கும் நிகழ்வையும் திமுக சார்பில் அண்ணா ஒருங்கிணைத்திருந்தார்.
அதில் கலந்து கொள்ளாதிருக்கும் பொருட்டு, ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பை கோவாவுக்கு அருகே வைத்திருந்தார் எம்ஜிஆர். நாணமோ... பாடலை அப்போதுதான் படமாக்கினர். இது குறித்து வழக்கறிஞர் எம்ஜிஆரை குறுக்கு விசாரணை செய்த போது, காதல் காட்சிகள் எடுக்கப்பட்டதா என்று கேட்க, எம்ஜிஆர் இல்லை என்று பதிலளித்தார். அவரும் விடாமல், நாணமோ.. பாடலை அப்போதுதானே எடுத்தீர்கள் என்று கேட்க, கோர்ட்டில் சிரிப்பொலி எழுந்தது.
இந்த விசாரணையின் போது, திமுகவினர் என் கடமை படத்தை புறக்கணித்ததால்தானே அது தோல்வியடைந்தது என்றும் எம்ஜிஆரிடம் கேட்கப்பட்டது. எம்ஜிஆர் சுடப்பட்டதற்குப் பின்னால் அரசியல் இருக்கலாம், அதுவும் சொந்தக்கட்சிக்காரர்களே இருக்கலாம் என்ற திசையில் வழக்கறிஞர்களின் கேள்விகள் அமைந்திருந்ததை வழக்கு விசாரணையை படிக்கையில் ஒருவர் புரிந்து கொள்ள முடியும். இந்த முயற்சியில் அவர்களுக்கு தோல்வியே கிட்டியது.
அதனையடுத்து மார்ச்சில் வெளியான என் கடமை சரியாகப் போகவில்லை. அதையடுத்து ஏப்ரல் 24 வெளியான பணக்கார குடும்பம் 150 நாள்களை கடந்து ஓடியது. ஜுலை 18 வெளியான தெய்வத்தாய் படமும் வெற்றி பெற்றது. செப்டம்பர் 25 வெளியான தொழிலாளி, நவம்பர் 3 வெளியான படகோட்டி இரண்டும் 100 நாள் படங்கள். அதையடுத்து டிசம்பர் 8 வெளியான தாயின் மடியில் தோல்வியடைந்தது.
ஜனவரியில் வெளியான வேட்டைக்காரனும், ஏப்ரலில் வெளியான பணக்கார குடும்பமும் வெற்றி பெற்ற நிலையில், அவற்றிற்கு நடுவில் மார்ச்சில் வெளியான என் கடமை திமுகவினரின் புறக்கணிப்பால் தோல்வியடைந்தது என்பதில் எவ்வித லாஜிக்கும் இல்லை. அழுத்தமான திரைக்கதையும், ரசிகர்கள் எதிர்பார்த்த ஹீரோயிச காட்சிகளும் படத்தில் இல்லாததே தோல்விக்கு காரணமாக அமைந்தன.