1967, ஜனவரி 13 எம்ஜி ராமச்சந்திரன் நடித்த, தாய்க்குத்தலைமகன் படம் வெளியாவதாக அறிவித்திருந்தனர். ரசிகர்கள் படம் பார்க்கும் ஆவலில் இருந்தனர். சாண்டோ சின்னப்ப தேவர் படத்தை தயாரிக்க, அவரது இளைய சகோதரர் எம்.ஏ.திருமுகம் படத்தை இயக்கியிருந்தார். எம்ஜி ராமச்சந்திரன் ரசிகர்களின் அபிமான ஜெயலலிதாதான் ஜோடி.
சாண்டோ சின்ன தேவர் எம்ஜி ராமச்சந்திரனை வைத்து தயாரித்த படங்களில் தாய்க்குப் பின்தாரம், தாய் சொல்லை தட்டாதே என தாயை பிரதானப்படுத்திய இரண்டு படங்களும் மெகா ஹிட். இந்தப் படத்தின் பெயர் தாய்க்குத்தலைமகன் என்பதால் ரசிகர்கள் கூடுதல் குஷியில் இருந்தனர். படம் வெளியாவதற்கு முதல் நாள், 12 ஆம் தேதி எம்ஜி ராமச்சந்திரனை சந்திக்க முத்துக்குமரன் பிக்சர்ஸ் கே.என்.வாசுவும், எம்ஆர் ராதாவும் சென்றனர். அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட வாக்குவாதத்தில் எம்ஆர் ராதா தன்னுடன் எடுத்துச் சென்றிருந்த துப்பாக்கியை எடுத்து எம்ஜி ராமச்சந்திரனை இருமுறை சுட்டார். அவரும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தங்களின் வாத்தியார் படத்தை பார்க்கும் ஆவலில் இருந்த ரசிகர்களுக்கு எம்ஜி ராமச்சந்திரன் சுடப்பட்ட செய்தி பேரதிர்ச்சியாக அமைந்தது. மருத்துவமனையில் ஏராளம் ரசிகர்கள், திமுக தொண்டர்கள் குவிந்து கிடக்க, திட்டமிட்டபடி தாய்க்குத்தலைமகன் மறுநாள் வெளியானது. கெட்டவனோ நல்லவனோ, ஒரு பெண் தான் பெற்றெடுக்கும் முதல் குழந்தையின் மீதே அதிக ப்ரியம் வைப்பாள் என்ற கிராமிய வழக்கை மையப்படுத்தி இதன் கதையை எழுதியிருந்தனர். மூத்த மகனாக அசோகனும், இளைய மகனாக எம்ஜி ராமச்சந்திரனும் நடித்திருந்தனர்.
எம்ஜி ராமச்சந்திரன் சுடப்பட்ட நிகழ்வு பல்வேறு விதங்களில் வெளிப்பட்டது. ரஜினி அரசியலுக்கு வர வேண்டும், வந்தால் ஆன்மிக அரசியல் மலரும், அவர் நல்லவர் என்றெல்லாம் ரஜினி குறித்து நேர்மறையாக எழுதிய பத்திரிகைகள், அவர் தனிக்கட்சி தொடங்கவில்லை, அரசியலிலும் நுழையவில்லை என்றதும் தலைகீழாக மாறி, ரஜினியை தூற்ற ஆரம்பித்தன. இந்த பச்சோந்தித்தனம் அப்போதும் இருந்தது. அதுவரை எம்ஜி ராமச்சந்திரன் படங்களில் அவரை மையப்படுத்தி எழுதி வந்த பத்திரிகைகள், அவர் சுடப்பட்ட பின், அவர் இனி தேறி வரமாட்டார் என அவரை ஒதுக்கத் தொடங்கினர்.
தாய்க்குத்தலைமகன் விமர்சனம் எழுதிய பிரபல வார இதழ், படத்தில் நடித்தவர்கள் என்று எஸ்.வி.ரங்காராவ், எஸ்.என்.லட்சுமி, அசோகன் ஆகியோரது பெயர்களைக் குறிப்பிட்டு நான்காவதாக எம்ஜி ராமச்சந்திரன் என எழுதியது. அதுதவிர அவரது நடிப்பு குறித்தோ, அவரது கதாபாத்திரம் குறித்தோ அந்த விமர்சனத்தில் குறிப்பிடவே இல்லை. இத்தனைக்கும் சுடப்படுவதற்கு முன்புவரை எம்ஜி ராமச்சந்திரன் படங்களின் விமர்சனத்தில் அவரை மட்டுமே பிரதானப்படுத்தி விமர்சனம் எழுதிய வாரப் பத்திரிகை அது.
ஆனால், அவர்களின் எண்ணத்தைப் பொய்யாக்கி, எம்ஜி ராமச்சந்திரன் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். பாதியில் நின்ற ரகசிய போலீஸ் 115 உள்ளிட்ட படங்களை முடித்து, உடைந்து போன குரலுடன் அவரே டப்பிங்கும் பேசினார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது வெளியான தாய்க்குத்தலைமகனும் நன்றாக ஓடி தேவருக்கு லாபம் சம்பாதித்து தந்தது.