மேற்குலகை எடுத்துக் கொண்டால், அதிகமுறை எடுக்கப்பட்ட கதை ஜீசஸுடையதாக இருக்கும். 100க்கும் மேற்பட்ட முறை அவரது கதையை படமாக்கியிருக்கிறார்கள். இந்தியாவில் அப்படி அதிகமுறை எடுக்கப்பட்ட கதை எது? நம்மிடம் அதற்கான தரவுகள் இல்லை. பக்த பிரகலாதன் கதை 20 முறைக்கு மேல் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அதனை அதிகமுறை எடுக்கப்பட்ட கதை எனலாம்.
திரைப்படம் இந்தியாவுக்கு வந்த போது, நாடகங்களில் நடிக்கப்பட்டு வந்த புராணக் கதைகளை திரைப்படங்களாக எடுத்தனர். அதனால், திரைப்படங்களில் புராணக் கதைகளே கோலோச்சியிருந்தன. 1932 இல் பார்சி இனத்தவரான கான் பகதூர் அர்தேஷிர் இரானி என்பவர் பக்த பிரகலாதா திரைப்படத்தை தனது இம்பீரியல் பிலிம்ஸ் சார்பாக தயாரித்தார். இவர் 1922 முதல் மௌனப் படங்களை இயக்கியும், தயாரித்தும், நடித்தும் வந்தவர். விஷ்ணுபுராணத்தில் உள்ள பக்த பிரகலாதன் கதை அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் கொண்டது. அரக்கனான ஹிரணியனின் மகன் சிறுவன் பிரகலாதன் விஷ்ணுவின் பக்தனாக இருப்பான். ஹிரண்யன் விஷ்ணுவின் எதிரி. மகனின் விஷ்ணு பக்தியை அகற்ற ஹிரண்யன் எடுக்கும் முயற்சிகள் பலிக்காது. விஷ்ணு தூணிலும், இருப்பார், துரும்பிலும் இருப்பார் என மகன் சொல்ல, கதையால் தூணில் அடிப்பான் ஹிரண்யன். அதிலிருந்து சிங்கத் தலையும், மனித உடலுமாக விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வந்து தனது நகங்களால் ஹிரண்யனின் வயிற்றைப் பிளந்து வதம் செய்வார்.
ஏன் இந்த நரசிம்ம அவதாரம் என்பதற்கு பிளாஷ்பேக் கதையுண்டு. ஹிரண்யன் தவம் செய்து, தன்னை மனிதனும் கொல்லக் கூடாது, மிருகமும் கொல்லக் கூடாது, காலையிலும் சாகக் கூடாது, இரவிலும் சாகக் கூடாது, உள்ளேயும் சாகக்கூடாது, வெளியேயும் சாகக்கூடாது என்றெல்லாம் வரம் வாங்கி வைத்திருப்பான். அதனால் காலையும் இரவும் அல்லாத அந்தி நேரத்தில், உள்ளேயும் வெளியேயும் அல்லாத வாசல் அருகில், மனிதனும், மிருகமும் அல்லாத இரண்டும் கலந்த உருவத்தில், எவ்வித ஆயுதமும் இல்லாமல் நகங்களால் ஹிரண்யன் வதைக்கப்படுவான்.
1932-ல் ஹெச்.எம்.ரெட்டி இயக்கத்தில் இரானியின் தயாரிப்பில் பக்த பிரகலாதா தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. பிறகு பல மொழிகளில் இந்தப் படத்தை ரீமேக் செய்தனர். 1939 இல் டி.ஆர்.மகாலிங்கம், எம்ஜிஆர், எம்.ஆர்.சந்தானலட்சுமி, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் சேலம் சங்கர் பிலிம்ஸ் பிரஹ்லாதா என்ற பெயரில் தயாரித்தது. பி.என்.ராய் படத்தை இயக்கினார்.
பிரஹ்லாதா எடுக்கப்பட்ட போது எம்ஜிஆர் நடித்தப் படங்களின் எண்ணிக்கை சிங்கிள் டிஜிட்டை தாண்டியிருக்கவில்லை. இதில் விஷ்ணுவாக டி.ஆர்.மகாலிங்கமும், இந்திரனாக எம்ஜிஆரும் நடித்தனர். லீலாவதி என்ற வேடத்தில் அன்றைய முன்னணி நடிகை எம்.ஆர்.சந்தானலட்சுமி நடித்தார். இவருக்கும், எம்ஜிஆருக்கும் படத்தில் சண்டைக் காட்சி உண்டு. இவர் பிற்காலத்தில் எம்ஜிஆரின் மதுரைவீரன் படத்தில் அவரது தாயாராக நடித்தார்.
தெலுங்கு பக்த பிரகலாதா அளவுக்கு தமிழ் பிரஹ்லாதா ஓடவில்லை. எனினும் படம் வெற்றிதான். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி, அசாமி, பெங்காளி என இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மொழிகளில் எடுக்கப்பட்ட கதை பக்த பிரகலாதாவாகத்தான் இருக்கும். அதேபோல், அதிகமுறை வெற்றிகளை தந்த ரீமேக்கும் இந்தக் கதைதான் என்பது குறிப்பிடத்தக்கது.