அறுபதுகளில் எம்ஜிஆர் படம் வெளியானால் திரையரங்குகள் திருவிழாவாகும். அரசியல் களத்திலும் எம்ஜிஆர் அன்று ஸ்டாராக இருந்தார். வளர்ந்து வந்த திமுகவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் அவரும் ஒருவர். 1967 இல் திமுக பெருவாரியான இடங்களை வென்று முதல்முறை அண்ணா தலைமையில் ஆட்சி அமைக்க எம்ஜிஆரின் சினிமா புகழ் அணில் போல் உதவியது.
இப்படியான காலகட்டத்தில்தான் 1967 இல் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் எம்ஜிஆரை சுட்டார். எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழ்நாடே கொந்தளித்தது. இந்த நிகழ்வால் சினிமா, அரசியல் இரண்டிலும் பல அசம்பாவிதங்கள் நடந்தன. பலரது வாழ்க்கை திசைமாறிப்போனது. அந்த சூறாவளியில் சிக்கிக் கொண்ட ஒரு படம்தான் இன்ப நிலா.
எம்ஜிஆரை வைத்து ஆசை முகம் என்ற படத்தை பி.எல்.மோகன் ராம் தயாரித்தார். பி.புல்லையா இயக்கம். திரைக்கதையாசிரியர் துறையூர் மூர்த்திக்கும், எம்ஜிஆருக்கும் முட்டிக் கொண்டதால், துறையூர் மூர்த்தி, இது வேலைக்கு ஆகாது என்று படத்திலிருந்து விலகிக் கொண்டார். பிறகு ஆரூர் தாஸ் திரைக்கதை, வசனத்தை எழுதினார். படத்தில் இருவர் பெயரும் இடம்பெறும்.