எம்ஜிஆருடன் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் எம்ஜிஆரின் வாழ்க்கையில் அவரது தாய்க்கு அடுத்தபடி முக்கியமானவர். எம்ஜிஆர் ஜெயலலிதாவிடம் காட்டிய கரிசனத்துக்கும், கட்சியில் கொடுத்த முக்கியத்துவத்துக்கும் இந்தப் புகைப்படத்தில் இருப்பவரின் தோற்றம் பிரதான காரணம் என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். எம்ஜிஆர் பிறந்தது இன்று போராட்டக்களமாக மாறியிருக்கும் இலங்கை. அங்குள்ள கண்டியில் எம்ஜிஆர் பிறந்தார். அவரது தந்தை கோபாலன் மேனன். தாய் பாலக்காடு வடவனூரைச் சேர்ந்த சத்யபாமா.
எம்ஜிஆருக்கு இரண்டரை வயதாக இருக்கையில் அவரது தந்தை காலமானார். அவரது சகோதரியும் காலமானதைத் தொடர்ந்து அவரது தாய் சத்யபாமா இரு குழந்தைகளுடன் இந்தியா வந்தார். கேரளாவில் அவரது குடும்பத்தாரிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காமல் வேலு நாயர் என்பரின் உதவியுடன் கும்பகோணத்தில் குடியேறினார். எம்ஜிஆரும், அவரது அண்ணன் எம்ஜி சக்கரபாணியும் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர். 1936 இல் சதிலீலாவதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சினிமாவிலும், அரசியலிலும் அவர் அடைந்த உயரம் அனைவரும் அறிந்தது.
எம்ஜிஆர் முதலில் பார்கவி என்கிற தங்கமணியை திருமணம் செய்து கொண்டார். துரதிர்ஷ்டவசமாக சில மாதங்கள் மட்டுமே அவர்களின் திருமண வாழ்க்கை நீடித்தது. தங்கமணி திடீரென மரணமடைய, எம்ஜிஆர் இரண்டாவதாக சதானந்தவதி (அம்மு) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்தான் நீங்கள் முதல் படத்தில் பார்த்தது. எம்ஜிஆரின் மனம் கவர்ந்தவராக சதானந்தவதி இருந்தார். ஆனால், டிபி நோயின் கொடூரமான தாக்குதலால் அவரும் மரணமடைந்தார். அதன் பிறகு நடிகை விஎன் ஜானகியை எம்ஜிஆர் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.
விஎன் ஜானகி கணபதி பட் என்பவரை முதலாவது திருமணம் செய்திருந்தார். அவர் மூலம் சுரேந்திரன் என்ற மகனும் அவருக்கு உண்டு. எம்ஜிஆர் தனது இரண்டாவது மனைவி இறந்த பிறகு, விஎன் ஜானகி கணவரை முறைப்படி விவாகரத்து செய்யும் முன் திருமணம் செய்து கொண்டதாக கூறுவர்.எம்ஜிஆரின் இரண்டாவது மனைவி சதானந்தவதி சிறிது ஜெயலலிதாவின் சாயலை கொண்டிருந்தார். எம்ஜிஆர் ஜெயலலிதாவிடம் காண்பித்த கரிசனத்துக்கு இதுவே காரணம் என்கிறார்கள்.
சதானந்தவதியை அழைக்கும் அம்மு என்ற பெயரிலேயே ஜெயலலிதாவையும் அவர் அழைத்து வந்தார். சினிமாவிலும் அரசியலிலும் பலமுறை ஜெயலலிதாவை எம்ஜிஆர் விலக்கி வைத்திருக்கிறார். சில தினங்கள்தான். அதற்குள் மறுபடியும் சேர்த்துக் கொள்வார். ஒருமுறை ஒருவரை தள்ளி வைத்தால் காலத்துக்கும் அவரை அருகே எம்ஜிஆர் அனுமதிப்பதில்லை. ஜெயலலிதா விதிவிலக்கு. சதானந்தவதியின் சாயலில் ஜெயலலிதா இருந்ததே இதற்கு காரணம் என்கிறார்கள். இருவர் படத்தில் இதனை காட்சியாகவே மணிரத்னம் வைத்திருப்பார். எம்ஜிஆராக வரும் மோகன்லாலின் முதல் மனைவி கல்பானாவும் (சதானந்தவதி), நடிகை புஷ்பவல்லியும் (ஜெயலலிதா) ஒரே தோற்றம் கொண்டவர்கள் என்பதால் இரு வேடங்களிலும் ஐஸ்வர்யா ராயை அவர் நடிக்க வைத்திருந்தார்.