நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணமடைந்தது திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன் என தமிழ் சினிமாவின் இருபெரும் ஆளுமைகளுடனும் ஜோடியாக நடித்துள்ளார். மீனாவுக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகர் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினியருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். அம்மா மீனாவைப் போலவே நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையே, சுவாசப்பிரச்னையால் அவதிப்பட்டு வந்த வித்யாசாகருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பிறகு அவரது உடல்நிலை மிகவும் மோசமாக தொடங்கியது. அவரது நுரையீரல் பிரச்னை அதிகமாகி, 2 நுரையீரல்களையும் மாற்றுமளவுக்கு தீவிரமாகியுள்ளது. இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்துள்ளார் வித்யாசாகர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவரது உயிர் பிரிந்தது. இது திரையுலகினருக்கும் மீனாவின் ரசிகர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.