24 மணிநேரம் 1984 ஜுலை 20 ஆம் தேதி இதே நாளில் வெளியானது. அப்படம் வெளியாகி இன்றோடு 38 வருடங்கள் நிறைவடைகிறது. 1984 தொடக்கத்தில், அதாவது பிப்ரவரி மாதம் இதே மோகன், நளினி, சத்யராஜை வைத்து மணிவண்ணன் எடுத்த நூறாவது நாள் படம் வெளியாகி பம்பர் ஹிட்டானது. அதில் மோகன் எதிர்மறை நாயகனாக வருவார். சத்யராஜ் மொட்டைத் தலையுடன் கிளைமாக்ஸில் வருவார். படம் வெற்றி பெற்ற நேரம், 7 கொலைகளை செய்த ஜெயப்பிரகாஷ் என்ற கிரிமினல், நூறாவது நாள் படத்தைப் பார்த்தே அத்தனை கொலைகளையும் செய்தேன் எனச் சொல்ல, படம் மேலும் பிக்கப்பானது. இதனை அப்படியே அறுவடை செய்ய நினைத்தார் மணிவண்ணன்.
மோகன், நளினியை தம்பதியாக்கி, சத்யராஜை மெயின் வில்லனாக்கி 24 மணிநேரம் படத்தை எடுத்தார். இதில் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யும் பணக்கார பெரிய மனிதர் வேடம் சத்யராஜுக்கு. மோகனின் மனைவி நளினி மீது மையல் கொண்டு அவரையும் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்துவிடுவார். அத்துடன் அதனை செய்தது மோகன் என்பதாக ஜோடித்து அவரை ஜெயிலுக்கு அனுப்புவார். ஜெயிலில் இருந்து தப்பித்து வரும் மோகன், 24 மணி நேரத்தில் சத்யராஜை கொலை செய்துவிடுவதாக சவால்விடுவார். ஆனால், போலீஸ் அதிகாரியாக வரும் ஜெய்சங்கரால் கடைசி நேரத்தில் மோகன் கைது செய்யப்படுவார். கையில் விலங்குடன், போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை எடுத்து சத்யராஜை சுட்டு தனது சபதத்தை மோகன் நிறைவேற்றுவார்.
மோகன், நளினி நெருக்கமான காட்சிகள், பாலியல் பலாத்கார காட்சிகள், ஜெயமாலினி, அனுராதாவின் கவர்ச்சி நடனம் என 24 மணி நேரத்தை கிளாமரில் தோயத்து எடுத்திருந்தார் மணிவண்ணன். ஏ.சபாபதியின் ஒளிப்பதிவும், கேமரா கோணங்களும் வெகு சிறப்பாக அமைந்திருந்தன. இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தன.
நூறாவது நாள் மற்றும் 24 மணிநேரம் படங்கள் வெளியான 1984 வது வருடம் அதில் பங்காற்றிய அனைவருக்கும் முக்கியமான வருடமாக அமைந்தது. சத்யராஜுக்கு படங்கள் குவிய, ஒரே வருடத்தில் 27 படங்களில் நடித்தார். 1984 இல் மோகன் நடிப்பில் அதிகபட்சமாக 15 படங்கள் வெளிவந்தன. இதில் அம்பிகை வந்தாள் படத்தையும் சேர்த்து மூன்று படங்கள் மணிவண்ணன் இயக்கியவை. மணிவண்ணன் மொத்தம் ஆறு படங்களை இயக்கினார். அதுதான் ஒரு வருடத்தில் அவர் இயக்கிய அதிகப்பட்ச பட எண்ணிக்கையாகும்.