பிறந்ததும், வளர்ந்ததும் சென்னை. சினிமா மீது ஆர்வம் பிறந்ததும் சென்னையில். நண்பர்களுடன் சினிமா குறித்து பேசித் திரிந்ததும் சென்னையில். ஆனால், முதல் திரைக்கதையை எழுதி முடித்த போது, அதனை படமாக்க வாய்ப்பு கிடைத்தது கன்னடத்தில். சின்ன பட்ஜெட்டில் கன்னடத்தில் ஒரு படத்தை எடுத்து முடித்துவிட முடியும் என்பதே காரணம். அப்படி மணிரத்னம் தனது முதல் படம் பல்லவி அனுபல்லவியை கன்னடத்தில் இயக்கினார்.
அனில் கபூர், லட்சுமி நடித்த அந்தப் படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றது. சிறந்த திரைக்கதைக்கான கர்நாடக மாநில அரசின் விருதை வென்றது. அந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் பாலுமகேந்திரா. அவர் இயக்கிய முதல் படம் கோகிலாவும் கன்னடப்படம் என்பது முக்கியமானது. பல்லவி அனுபல்லவிக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
சின்ன பட்ஜெட்டில் வெற்றிப் படம் தந்தவர் என்பதால் மணிரத்னம் மீது பல தயாரிப்பாளர்களின் பார்வையும் விழுந்தது. அதில் ஒருவர் என்.ஜி.ஜான். மலையாளத்தின் பிரபல தயாரிப்பாளர். அரசியல் பின்னணியில் ஐ.வி.சசி இயக்கத்தில் அவர் தயாரித்த ஈநாடு, இனியெங்கிலும் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதன் தொடர்ச்சியாக ஒரு படத்தை எடுக்க விரும்பி மணிரத்னத்தை ஒப்பந்தம் செய்தார். அந்தப் படம்தான் உணரு.
முரளி, ரேவதி, சத்யராஜ், சரத்பாபு, ராதிகா, கவுண்டமணி நடித்த பகல் நிலவு 37 வருடங்களுக்கு முன்னால் 1985 ஜுன் 28 ஆம் தேதி இதே நாளில் வெளியானது. கமர்ஷியலாக படம் தோல்வியடைந்தது. எனினும், படத்தின் பாடல்களும், அதனை படமாக்கிய விதமும், சத்யராஜின் பெரியவர் கதாபாத்திர வடிவமைப்பும் ரசிகர்களையும், திரையுலகினரையும் யாரிந்த மணிரத்னம் என கேட்க வைத்தன.
நாயகன் படத்து வேலுநாயக்கரின் சாயலை பகல் நிலவு பெரியவரில் நீங்கள் பார்க்கலாம். இந்த கதாபாத்திரத்தை விரித்துதான் வேலுநாயக்கர் கதாபாத்திரத்தை வடிவமைத்தீர்களா என்ற கேள்விக்கு மணிரத்னம் இல்லை என்று பதிலளித்திருந்தார். ஊர்ப்பெரியவர் என்ற கோணத்தில் பகல் நிலவு படத்தின் சத்யராஜ் கதாபாத்திரத்தை உருவாக்கியதாகவும், வேலுநாயக்கர் வரதராஜ முதலியாரை மனதில் வைத்து உருவாக்கியது எனவும் விளக்கியிருந்தார்.