சின்ன பட்ஜெட்டில் பல்லவி அனு பல்லவியை மணிரத்னம் இயக்கியிருந்தார். இது பல தயாரிப்பாளர்களை கவர்ந்தது. அதில் ஒருவர் என்.ஜி.ஜான். மலையாளத்தில் பல வெற்றிப் படங்களை அவர் தயாரித்திருந்ததால் மணிரத்னத்தை அவர் அணுகிய போது அவருக்கு படம் செய்ய மணிரத்னம் ஒத்துக் கொண்டார். என்.ஜி.ஜானிடம் மணிரத்னம் திவ்யா என்ற கதையை கூறினார். என்.ஜி.ஜான் அதனை காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவரிடம் வேறு திட்டங்கள் இருந்தன.
1982 இல் என்.ஜி.ஜான் ஈ நாடு என்ற மலையாளப் படத்தை தயாரித்திருந்தார். டி.தாமோதரன் எழுத, ஐ.வி.சசி படத்தை இயக்கியிருந்தார். பாலன் கே.நாயர், மம்முட்டி, ரதீஷ், டி.ஜி.ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வைபின் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 77 பேர் மரணமடைந்ததை பின்னணியாக வைத்து இதன் கதையை டி.தாமோதரன் எழுதியிருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருதையும் வென்றது. தமிழில் இப்படம் இது எங்க நாடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, இந்தியிலும் ரீமேக் செய்தனர்.
ஈ நாடு தந்த வெற்றியின் உற்சாகத்தில் அதே கூட்டணியுடன் அடுத்தப் படத்தை தயாரித்தார் என்.ஜி.ஜான். படத்தின் பெயர் இனியெங்கிலும். இதற்கும் டி.தாமோதரனே கதை, இயக்கம் ஐ.வி.சசி. மோகன்லால், மம்முட்டி, ரதீஷ், சீமா உள்ளிட்டவர்கள் நடித்தனர். முந்தையப் படம் போன்றே அரசியல் பின்னணியில் இனியெங்கிலும் எடுக்கப்பட்டது. படம் வெற்றி.
தொடர்ந்து இரு வெற்றிகளை ருசித்த என்.ஜி.ஜான், மணிரத்னம் இயக்கும் படமும் அரசியல் பின்னணி கொண்டதாக அமைய வேண்டும் என விரும்பினார். டி.தாமோதரன் அதற்கேற்ப துறைமுகத்தில் இயங்கிவரும் தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் பின்னணியில் ஒரு கதையை எழுதினார். அப்போது கம்யூனிஸத்தையும், தொழிற்சங்கங்களையும் விமர்சிப்பது ஒரு மோஸ்தராக இருந்தது. படத்தின் கதை மணிரத்னத்தின் ரசனைக்கு ஒத்துவரவில்லை. அவர் பாதி மனதுடன் படத்தை இயக்கினார். அந்தப் படம்தான் உணரு. படத்தின் பெயரைக்கூட முந்தைய இரு படங்களின் தொடர்ச்சியாக வைத்தனர். ஈ நாடு என்றால் இந்த நாடு, இனியெங்கிலும் என்றால் இனிமேலாவது, உணரு என்றால் விழித்தெழு. இந்த நாடு இனிமேலாவது விழிக்க வேண்டும்.
உணரு படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் தமிழில் பகல் நிலவு படத்தை எடுத்தார். படம் சுமாராகப் போனது. அடுத்து இதயகோவில். இளையராஜாவின் பாடல்கள் பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தில் கவுண்டமணி கொடுத்த குடைச்சலால் அவரை ஒருபோதும் தனது படங்களில் நடிக்க வைப்பதில்லை என்று முடிவு செய்தார். அதையடுத்து அவர் என்.ஜி.ஜானிடம் முதலில் சொன்ன திவ்யா படக்கதையை திரைப்படமாக்கினார். அதுதான் மவுன ராகம். மணிரத்னத்துக்கென்ற தனித்த ஸ்டைலை உருவாக்கி, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த முதல் படம். நினைத்தப் படத்தை எடுக்க, மணிரத்னத்துக்கே நாலு படங்கள் செய்ய வேண்டியிருந்திருக்கிறது. முதல் படமே 100 சதவீதம் நாம் நினைத்தபடி வரவேண்டும் என்று அடம்பிடித்து படம் இயக்குவதை தள்ளிப்போடும் உதவி இயக்குனர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது.