1978 இல் நடிக்க வந்த சத்யராஜுக்கு 1986 இல்தான் முன்னணி நட்சத்திரமாகும் வாய்ப்பு கிடைத்தது. இரவுப் பூக்கள், முதல் வசந்தம் படங்களைத் தொடர்ந்து வெளியான பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகள் சத்யராஜுக்கு ஹீரோ அந்தஸ்தை பெற்றுத் தந்தது. அதையடுத்து வெளியான பாலைவன ரோஜாக்கள், விடிஞ்சா கல்யாணம், மந்திரப் புன்னகை படங்கள் அவரது நட்சத்திர அந்தஸ்துக்கு வலு சேர்த்தன.
1987 இல் பாசில் மம்முட்டியை வைத்து எடுத்த மலையாளப் படத்தை சத்யராஜ் நடிப்பில் பூவிழி வாசலிலே என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று சத்யராஜை ஹீரோவாக நிலைநிறுத்தியது. அதே வருடம் வெளியான மோகன்லாலின் ராஜாவின்டெ மகன் படத்தின் தமிழ் ரீமேக்கான மக்கள் என் பக்கம், மம்முட்டியின் ஆவநாழி படத்தின் தமிழ் ரீமேக்கான கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகியன சத்யராஜின் திரைவரலாற்றை மாற்றி எழுதின.
முரட்டு நாயகனாக சித்தரிக்கப்பட்டு வந்த அவரை மென்மையான நாயகனாக மாற்றியது, மோகன்லால் நடித்த இரு மலையாளப் படங்களின் ரீமேக்குகள், அண்ணாநகர் முதல் தெரு (காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட்), என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (மாமாட்டி குட்டியம்மைக்கு). இந்தப் படங்களில் பூவிழி வாசலிலே மலையாளத்தில் தோல்வி கண்ட படத்தின் தமிழ் ரீமேக்.
இப்படி மலையாளத் தோல்விப் படத்தின் ரீமேக்கையும் ஹிட்டாக்கிய சத்யராஜுக்கு அதன் பிறகு அப்படியொரு வாய்ப்பு அமையவில்லை. மலையாளத்தில் ஒரு வருடம் ஓடிய ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த சித்ரம் படத்தை 1995 இல், எங்கிருந்தோ வந்தான் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தனர். சத்யராஜ் நடித்தார். படம் படுதோல்வி. அதன் பிறகு 2003 இல், மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ஹிட்லர் படத்தை மிலிட்டரி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தனர். சத்யராஜ்தான் இதிலும் ஹீரோ.
ஹிட்லர் படத்துக்கு மலையாள சினிமாவில் சிறப்பான இடம் உண்டு. ராம்ஜிராவ் ஸ்பீக்கிங் படத்தை இயக்கி, இயக்குனர்களாக அறிமுகமான சித்திக் - லால் இணை, தொடர்ச்சியாக, இன் ஹரிகர் நகர், காட்ஃபாதர், வியட்நாம் காலனி, காபுள்ளிவாலா என வெற்றிகள் கொடுத்தனர். காபுள்ளிவாலாவுடன் இந்த இணை பிரிந்தது. பிறகு சித்திக் தனியாக படம் இயக்க ஆரம்பித்தார். வெற்றிகரமான கூட்டணி பிரிந்த பின், சித்திக் தனியாக இயக்கி வெளிவந்த முதல் படம் ஹிட்லர். மம்முட்டி நடித்த இந்தப் படம் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்து, ஹிட்லர் கேரளாவில் 300 நாள்கள் ஓடி, அந்த காலகட்டத்தின் மிகப்பெரிய வசூல் படமானது. சித்திக் இதன் பிறகு தொடர்ந்து தனித்து படங்கள் இயக்க ஆரம்பித்தார். சித்திக் - லால் இடையே சண்டை ஏற்பட்டு சித்திக் தனியாக படம் செய்யவில்லை. ஹிட்லர் படத்தின் தயாரிப்பாளர்களில் லாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிட்லரில் ஐந்து திருமணமாகாத தங்கைகளுடன் வசித்து வருகிறவராக மம்முட்டி நடித்தார். கோபக்காரர். தனது தங்கைகளை யார் சைட் அடித்தாலும் கையை உடைக்காமல் விடமாட்டார்கள். அப்படிப்பட்டவர் தனது மூத்த தங்கையை கிழவரான புரபஸருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய சூழல் வரும். அதனைத் தொடர்ந்து மற்ற தங்கைகள் அவரைவிட்டுப் பிரிந்து செல்வார்கள். அவரது தாய்மாமனுடனும் அவருக்கு பகை ஏற்படும். இதனை பயன்படுத்தி மம்முட்டியின் குடும்பத்தை அழிக்க நினைக்கும் இன்னொரு குடும்பம் எப்படி பழிவாங்குகிறது, அதனை மம்முட்டி எப்படி முறியடிக்கிறார் என்பது கதை.
நகைச்சுவையும் சென்டிமெண்டும் சரிவிகிதத்தில் கலந்து இந்தப் படத்தை சித்திக் எடுத்தார். 2003 இல் இப்படத்தை சாய்சுரேஷ் இயக்கத்தில், சத்யராஜ் நடிப்பில் மிலிட்டரி என்ற பெயரில் ரீமேக் செய்தனர். படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. மலையாள படத்தை தமிழில் எப்படி ரீமேக் செய்ய வேண்டும் என்பதற்கு சத்யராஜின் பூவிழி வாசலிலே ஓர் உதாரணம். எப்படி செய்யக் கூடாது என்பதற்கு மிலிட்டரி ஓர் உதாரணம்.
மிலிட்டரியை இயக்கிய சாய்சுரேஷ் பற்றி சொல்ல வேண்டும். இவர் வேறு யாருமில்லை, தலைநகரம், தற்போது வெளிவந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய சுராஜ் தான். சுந்தர் சி.யின் உதவி இயக்குனராக உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகி ராமன் படங்களில் பணிபுரிந்தவர், 1998 இல் சரத்குமார் நடித்த மூவேந்தர் படத்தை சி.ஜி.சுராஜ் என்ற பெயரில் இயக்கினார். படம் சுமாராகப் போக, ஜி.சாய்சுரேஷ் என பெயரை மாற்றி குங்குபொட்டு கவுண்டர், மிலிட்டரி படங்களை இயக்கினார். பெயர் மாற்றியும் அதிர்ஷ்டம் வராத நிலையில், மீண்டும் சுந்தர் சி.யுடன் பணியாற்றி, அவர் ஹீரோவான போது சுராஜ் என்ற பெயரில் தலைநகரம் படத்தை இயக்கி மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தார்.