இந்தியாவில் ஏன் உலகிலேயே அரசியல்வாதிகளையும், சினிமாக்காரர்களையும் நேரடியாக நையாண்டி செய்யும் ஒரு இனம் உண்டென்றால் அது மலையாளிகள்தான். மம்முட்டியும், மோகன்லாலும் வீற்றிருக்கும் மேடையில், அவர்களைப் போலவே மிமிக்ரி செய்து கலாய்ப்பது அங்கு சர்வசாதாரணம். அதுபோல் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், துண்டு துக்கடா அரசியல்வாதி என்ற பேதமில்லாமல் அனைவரையும் அவர்களைப் போலவே மேக்கப் போட்டு, அவர்கள் குரலில் பேசி கலாய்ப்பது சினிமா விழாக்களில் தவறாமல் இடம்பெறும் நிழ்ச்சி.
ஒருமுறை முன்னாள் முதலமைச்சர் கருணாகரனின் மகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அவரை வைத்துக் கொண்டே கருணாகரனைப் போல் மிமிக்ரி செய்து நையாண்டி செய்தார்கள். மிமிக்ரி என்றால், அவரைப் போல் பேசுவதல்ல. கருணாகரன் நாய் வளர்த்தால் எப்படி குரைக்கும், ரயில் விட்டால் அது எப்படி கூவிக் கொண்டு செல்லும் என்று அவரது குரலில் பேசி செய்து காட்டினார்கள்.
வளர்ந்து வரும் இளம் நடிகரான ஸ்ரீநாத் பாசியை சமீபத்தில் ஒரு பேட்டி எடுத்தனர். அவரது சட்டம்பி படத்தின் வெளியீட்டை முன்வைத்து எடுக்கப்பட்ட பேட்டி அது. சட்டம்பி என்றால் முரடன், ரவுடி என பொருள் கொள்ளலாம். பேட்டி எடுத்த பெண் நிருபர், சினிமாவில் உங்களுக்குத் தெரிந்த ஐந்து சட்டம்பி நடிகர்கள் யார் என்று கேட்டதும் ஸ்ரீநாத் பாசி கோபமானார். நிருபர் நகைச்சுவையின் ஒரு பகுதியாக கேட்ட கேள்விக்கு, கேமராவை ஆஃப் செய்யச் சொல்லி, கெட்டவார்த்தையில் திட்ட ஆரம்பித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, கேரளா பிலிம் புரொடியூசர்ஸ் அசோஸியேஷன் ஸ்ரீநாத் பாசிக்கு எவ்வித ஒத்துழைப்பும் அளிப்பதில்லை என அறிவித்தது.
சட்டம்பி கேள்விக்கு ஸ்ரீநாத் பாசி பதிலளிக்காமல் தவிர்த்திருக்கலாம். அதற்கு மாறாக கெட்டவார்த்தையில் திட்டியது அவரது சகிப்பின்மையின் வெளிப்பாடு. சட்டப்படி ஒரு நடிகரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பின் அவரது படத்துக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என்பது கேரள தயாரிப்பாளர்களின் சகிப்பின்மை. இந்தப் பிரச்சனையில் ஸ்ரீநாத் பாசிக்கு எதிராக தயாரிப்பாளர்களின் நிலைப்பாடு சரியல்ல என்றவர் மம்முட்டி. இப்போது அவரே இப்படியொரு சிக்கலில் மாட்டியுள்ளார்.
சாதாரண ஒரு நகைச்சுவைப் பேச்சு. உடனே இணைய போராளிகள் கையில் கோடாரியுடன் இறங்கிவிட்டனர். மம்முட்டி செய்தது பாடி ஷேமிங், அவர் எப்படி இதுபோல் கூறலாம் என கூச்சலிடத் தொடங்கினர். சம்பந்தப்பட்ட இயக்குனர், மம்முட்டியின் கருத்து எனக்கு எந்த கவலையையும் அளிக்கவில்லை. இதனை யாரும் ஊதிப் பெரிதாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பின்பும் இணைய கூச்சல்கள் நிற்கவில்லை. 24 மணி நேரம் கண்டு கொள்ளாமல் விட்டால் கூச்சலிடுகிறவர்கள் அடுத்த விஷயத்தை நோக்கி நகர்ந்துவிடுவார்கள். எனினும் மம்முட்டி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
'2018 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஜூட் ஆண்டனியை பாராட்டி உற்சாகத்தில் பயன்படுத்திய வார்த்தைகள் சிலரை காயமடையச் செய்ததற்கு வருந்துகிறேன். அத்துடன் இனி வருங்காலத்தில் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன். நினைவூட்டிய அனைவருக்கும் நன்றி!' என தனது குறிப்பில் மம்முட்டி கூறியுள்ளார்.