இந்தப் படத்தில் சித்திக் முஸ்லீமாக வருவார். பணக்காரர். துபாய் போக வேண்டும் என்பது கனவு. அவரது உயிர் நண்பன் முகேஷ் இந்து. ஏழை. வாத்தியார் தொழிலுக்கு முயற்சித்துக் கொண்டிருப்பார். இந்த நேரத்தில் சித்திக்கின் தந்தையின் நண்பரான மலப்புறம் ஹாஜியாரான மது, தனது பள்ளியில் ஒரு வாத்தியார் உத்தியோகம் இருப்பதாகவும் சித்திக்கை அனுப்பி வைக்கும்படியும் கேட்பார். சித்திக்கிற்கு துபாய் போக வேண்டும் என்பதே ஆசை. அப்பாவிடம் அதனை சொல்ல முடியாது என்பதால், அவர் துபாய் செல்ல, அவரது முஸ்லீம் அடையாளத்துடன் முகேஷ் மதுவின் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுவார்.
முகேஷை அந்தப் பள்ளியின் இன்னொரு ஆசிரியர் ஜெகதி ஸ்ரீகுமாருக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால், இருவரும் ஒரே வீட்டில்தான் தங்கியிருப்பார்கள். முகேஷ் ஓர் இந்து என்பது, முகேஷ் தனது கிராமத்தில் இந்தி டியூஷன் எடுத்த உஷாவுக்கு மட்டுமே தெரியும். அவள் திருமணமாகி முகேஷின் பள்ளிக்கருகில் குடிவந்திருப்பாள். அவளது கணவன் (பிரேம் குமார்) மிலிட்டரியில் வேலை பார்க்கும் சந்தேகப் பேர்வழி. முகேஷ் தனது ஆள் மாறாட்டக் கதையை உஷாவிடம் சொல்லும் போது ஜெகதி ஸ்ரீகுமார் ஒளிந்திருந்து அதனை கேட்பார்.
அதே நேரம் பிரேம் குமாரும் கேட்பார். ஜெகதி உண்மையை ஹாஜியாரிடம் சொல்ல ஓடுவார். முகேஷ் பின்னாலேயே துரத்துவார். அதேநேரம், பிரேம் குமார் துப்பாக்கியுடன் முகேஷை சுடுவதற்காக பின்னாலேயே துரத்துவார். ஒருகட்டத்தில் பிரேம்குமார் துப்பாக்கியால் சுட, குண்டு ஜெகதி ஸ்ரீகுமாரின் கழுத்தில் பாயும். கழுத்தில் குண்டுடன் அவரால் பேச முடியாது. மருத்துவமனையில் நர்சிடம் பேபப்பரும் பேனாவும் வாங்கி எழுதித் தருவார். அதை நர்ஸ் வாங்கும் முன் முகேஷும், சித்திக்கும் வாங்கி, நர்ஸுக்கு ஜெயதி ஸ்ரீகுமார் ஆபாச கடிதம் எழுதியதாகச் சொல்ல, ஜெகதிக்கு தர்ம அடி விழும். கடைசியில் அவர் உண்மையைச் சொல்ல முடியாமலேயே தனது மனைவிகளால் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்படுவார்.
இதிலும் ஆள்மாறாட்டம்தான் கதை. விஜய் பொய் சொல்லி அந்த கிராமத்தில் வந்து தங்கியிருப்பார். அவர் உண்மையான வாரிசு அல்ல சங்கீதாதான் உண்மையான வாரிசு என்பதை அவர்களின் உரையாடல் மூலம் அறிந்து கொள்ளும் ஆர்.எஸ்.சிவாஜி அதனை சொல்ல ஓட, பெண்ணை கையைப் பிடித்து இழுத்ததாகச் சொல்லி விஜய்யின் நண்பரான சார்லி அவரை துரத்திச் செல்வார். ஊரே சேர்ந்து துரத்தும்.
தோப்பு வழியாக ஓடுகையில் கத்தி எறிந்து பழகிக் கொண்டிருப்பவனின் நடுவில் செல்ல, அவன் எறியும் கத்தி சிவாஜியின் கழுத்தில் பாயும். சிவாஜி மருத்துவமனையில் சைகைப் பாஷையில் சொல்வதை மலையாளப் படத்தில் வருவது போலவே சார்லி மாற்றிச் சொல்லி சிவாஜிக்கு திட்டு வாங்கித் தருவார். தமிழிலும் அந்த காமெடி பேசப்பட்டது.