

மரக்கன்று நட்டு அதனை புகைப்படம் எடுத்து வெளியிடும் சவாலை நடிகர் விஜய்க்கு பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்துள்ளார்.


ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலங்கள், தங்களுக்குள் மாறி மாறி ஒருவரை டேக் செய்து ஏதேனும் ஒரு விஷயத்தை சவாலாகவிடுவது கடந்த சில ஆண்டுகளாக பழக்கமாக இருந்துவருகிறது.


இதனிடையே, தெலுங்கு திரையுலகில் #GreenIndiaChallenge என்ற சவால் பிரபலமாகி வருகிறது. ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு, மேலும் மூவருக்கு அதை எடுத்துச் செல்ல வேண்டும்.


இந்தநிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த சவாலில் பங்கேற்றுள்ளார். மரக்கன்றை வைக்கும் வீடியோவை மகேஷ் பாபு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.


அந்த ட்விட்டர் பதிவில், ‘எனது பிறந்தநாளைக் கொண்டாட இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது. இந்த #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், விஜய், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்குவிடுக்கிறேன். இந்தச் சங்கிலி எல்லைகளைக் கடந்து தொடரட்டும். இந்தச் சங்கிலி எல்லைகளைக் கடந்து தொடரட்டும். இதற்கு நீங்கள் எல்லாரும் ஆதரவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.