ஜென்டில்மேன்: இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு வழங்கும் அதே ராபின் ஹூட் கதை. ஆனால் அதனை பிரம்மாண்டமாக படமாக்கிய விதத்தில் கவனம் பெற்றார் இயக்குநர் ஷங்கர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், பரபரப்பான ஆக்சன் காட்சிகளும் படத்துக்கு பலமாக அமைந்தன. இந்தப் படம் அமேசான் பிரைம் வீடியோவில் இருக்கிறது.
திருடா திருடா : மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ஒளிப்பதிவு, இசை என தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாசமான காட்சி அனுபவத்தைத் தந்தது. அழகு மற்றும் கதிர் என இரண்டு திருடர்கள் சர்வதேச திருட்டுக் கும்பலின் உதவியுடன் 1000 கோடி ரூபாயை கொள்ளையடிக்க செய்யும் முயற்சியை நகைச்சுவை கலந்து சுவாரசியமான திரைக்கதையுடன் சொல்லியிருப்பார் இயக்குநர் மணிரத்னம். படம் வெளியானபோது இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களிடையே பிரபலம். இந்தப் படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.
மங்காத்தா : பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ எதிர்மறை வேடத்தில் நடித்தால், அவர் அப்படி இருப்பதற்கு எமோஷனலான காரணங்கள் சொல்லப்படும். அப்படி இல்லாமல் படம் முழுக்க அஜித் வில்லனாகவே மிரட்டியிருப்பார். தமிழில் வந்த ஹெயிஸ்ட் படங்களில் இன்றளவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சஸ்பென்ட் ஆன போலீஸ் அதிகாரி விநாயக் மகாதேவ் இளைஞர்களின் துணை கொண்டு எப்படி 500 கோடியை கொள்ளையடிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை. வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான இப்படம் டிரெண்ட் செட்டராக அமைந்தது. துணிவு படம் பார்த்த ரசிகர்கள் கூட மங்காத்தா அஜித்தை பார்த்துவிட்டதாக உற்சாகத்தில் இருக்கின்றனர். அந்த அளவுக்கு இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இந்தப் படம் காணக்கிடைக்கிறது.
ஆரண்ய காண்டம் : திரையரங்குகளில் வெளியானபோது வரவேற்பைப் பெறாத இப்படம், அதன் பின்னர் கல்ட் கிளாசிக் வரிசையில் இடம் பிடித்தது. இந்தப் படத்தில் சிங்கப் பெருமாள் கஜேந்திரன் பசுபதி என அனைவருக்கும் விலங்குகளை நினைவுபடுத்தும் பெயர் வைத்திருப்பார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. சிங்கப்பெருமாள் என்ற வயதான டானுக்கும் கஜேந்திரன் என்ற அவரது எதிரிக்கும் கோஸ்டி மோதல். இதற்கிடையே சிங்கப்பெருமாளிடம் சிக்கித் தவகிக்கும் சுப்பு என்ற இளம்பெண் அவரிடம் பணியாற்றும் சப்பை என்ற இளைஞரை பயன்படுத்தி பணத்தை எடுத்துக்கொண்டு எப்படி தப்பிக்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.
பீட்சா : கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பேய் பட டிரெண்டை துவங்கி வைத்தது. பீட்சா கடை உரிமையாளரின் மூட நம்பிக்கையை பயன்படுத்தி அந்தக் கடையின் பணியாளர் அவரிடம் இருக்கும் வைரத்தை எப்படி கொள்ளையடிக்கிறார் என்பதே படத்தின் கதை. ஹாரர் திரில்லராக ஆரம்பித்து ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ்களுடன் சுவாரசியமாக கதை சொல்லியிருப்பார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். நடிகர் விஜய் சேதுபதிக்கு நல்ல அடையாளத்தை கொடுத்த படம். இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
சூது கவ்வும் : இந்த லிஸ்ட்டில் ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் . பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக வேலையில்லாமல் இருக்கும் அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக் மூவரும் கடத்தல் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கும் விஜய் சேதுபதியை சந்திக்கின்றனர் விஜய் சேதுபதி தனது கடத்தல் தொழிலுக்கு அவர்களை பயன்படுத்த நினைக்கிறார். சின்ன சின்ன கடத்தல் மூலம் பணம் சம்பாதிக்கும் அவர்கள், அமைச்சரின் மகனை கடத்தப்போய் பிரச்சனையில் சிக்குகிறார்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதை படு சுவாரசியமாக சொல்லியிருப்பார் இயக்குநர் நலன் குமாரசாமி. இந்தப் படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் இருக்கிறது.
சதுரங்க வேட்டை : இயக்குநர் வினோத்தின் முதல் படமான இது பெரிய விளம்பரங்கள் ஏதுமில்லாமல் வெளியாகி பாராட்டுக்களை குவித்தது. காந்தி பாபு என்ற இளைஞர் மக்களை விதவிதமாக ஏமாற்றுவதை படு சுவாரசியமாக பதிவு செய்திருப்பார் இயக்குநர் வினோத். உண்மை சம்பங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்ததால் ரசிகர்களால் இந்தப் படத்தை கனெக்ட் செய்ய முடிந்தது. இந்தப் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
ராஜதந்திரம் : சிறிய மோசடிகளில் ஈடுபடும் மூன்று இளைஞர்கள் நகைக்கடையை கொள்ளையடிக்கும் பணியில் ஈடுபடும் சூழல் ஏற்படுகிறது. கொள்ளையடிக்கும் முயற்சியில் வென்றார்களா என்பது படத்தின் கதை. சதுரங்க வேட்டை போல குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் பாஸிட்டிவ் விமர்சனங்களை அள்ளியது. இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இருக்கிறது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் : இந்தப் படமும் சத்தமில்லாமல் வந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த படம். சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபடும் இரண்டு இளைஞர்கள் தாங்கள் சந்திக்கும் பெண்களின் காதலை உண்மை என நம்பி திருந்த நினைக்கிறார்கள். ஆனால் அவ்விரு பெண்களோ, இளைஞர்களை ஏமாற்றி பணத்துடன் தப்பிக்கிறார்கள் என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு திடீர் திருப்பங்களுடன் சுவாரசியமாக திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. துல்கர் சல்மான், ரக்சன் இணைந்து நடித்த இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணகிடைக்கிறது.
துணிவு
கடைசியாக தான் வந்து சேர்ந்தார் விநாயக் மகாதேவ் என்பது மாதிரி, இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக இடம் பிடித்திருக்கிறது துணிவு. வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படம் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்தப் படத்தில் வங்கிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப் படம் விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.