பழம்பெரும் இயக்குனர் டி.யோகானந்த் என்கிற தாசரி யோகானந்த் பிறந்தது அன்றைய மதராசப் பட்டணம். தெலுங்கர். புகைப்படக்கலை மீதான ஆர்வத்தால் அதனை கற்றவர், பிறகு சினிமாவில் நுழைந்தார். தெலுங்கின் அன்றைய பிரபல இயக்குனர் குடவல்லி ராமபிரம்மம் மற்றும் எல்.வி.பிரசாத்திடம் தொழில் கற்றார். 1954, ஏப்ரலில் வெளியான மருமகள் (தெலுங்கில் அம்மலக்கலு) படத்தின் மூலம் இயக்குனரானார்.
மருமகள் படத்தில் என்.டி.ராமராவ், பத்மினி, லலிதா நடித்திருந்தனர். படம் தமிழைவிட தெலுங்கில் மாபெரும் வெற்றியை பெற்றது. படத்தின் நாயகன் தெலுங்கு என்பதும் ஒரு காரணம். இந்த வெற்றிக்குப் பிறகு என்டிஆர் நடிப்பில் தொடு டொங்கலு என்ற படத்தை இயக்கினார் யோகானந்த். ஆனால், படம் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை. என்டிஆரும் அவரது சகோதரர் திருவிக்ரம ராவும் இணைந்து படத்தை தயாரித்திருந்தனர். படத்தின் தோல்வி சகோதரர்களை ரொம்பவும் பாதித்தது. அப்போதும் யோகானந்த் மீதான நம்பிக்கை என்டிஆருக்குப் போகவில்லை. மறுபடியும் அவருக்கு கால்ஷீட் தந்தார். அவரும், சகோதரரும் இணைந்து படத்தை தயாரித்தனர். ராஜசிம்கா என்ற அந்தப் படம் வெளியாகி ஆந்திராவை கலக்கியது. ஆறு சென்டர்களில் 100 நாள்களை கடந்தது. பெங்களூருவில் 175 நாள்களை கடந்து வெள்ளிவிழா கண்டது. ராஜசிம்மன் என்ற பெயரில் இதனை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு இங்கேயும் காசு அள்ளினர்.
இந்த நேரத்தில் டி.யோகானந்தின் முதல்படம் மருமகளின் தயாரிப்பாளர் லேனா செட்டியார் என்ற லட்சுமணன் செட்டியார் மீண்டும் டி.யோகானந்துடன் கைகோர்த்தார். லேனா செட்டியார் டி.யோகானந்தைவிட சினிமாத்துறையில் அனுபவம் பெற்றவர். 'யூஸ்டு கார்' விற்பனையில் இருந்த அவர், தனது வியாபாரத்தை விளம்பரப்படுத்த, துண்டு பிரசுரங்களை அந்தக் காலத்திலேயே விநியோகித்தவர். அந்தக் காலத்தில் என்றால் முப்பதுகளின் ஆரம்பத்தில். அந்தவகையில் 'பிட் நோட்டீஸ்' எனப்படும் துண்டு பிரசுரங்கள் வழியாக விளம்பரம் செய்த முதல் தமிழ் வியாபாரி என்ற பெருமைக்குரியவர்.
இவர் நாடக கான்ட்ராக்டராகவும் பணிபுரிந்துள்ளார். அந்தக் காலத்தில் நாடகங்களில் புகழ்பெற்றிருந்த தியாகராஜ பாகவதர் இவருக்கு நெருக்கம். பாகவதரின் பவளக்கொடி நாடகத்தில் மனதை பறிகொடுத்தவர், அதனை திரைப்படமாக எடுத்தார். கே.சுப்பிரமணியம், அழகப்பா செட்டியார் தயாரிப்பில் பங்காற்றினர். படம் 275 நாட்களை கடந்து ஓடியது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படங்கள் தயாரித்தார். பாகவதர் கொலை வழக்கில் சிறை சென்று வந்தபின், அவரை வைத்து இசைக்கலைஞரது வாழ்க்கையை படமாக்க தீர்மானித்தார். இசை ஞானம் உள்ள, ஜுபிடர் பிக்சர்ஸின் ஆஸ்தான இயக்குனரும், கதாசிரியருமான ஏ.எஸ்.ஏ.சாமியிடம் கதை எழுதும் பொறுப்பு தரப்பட்டது. இந்த நேரத்தில் பாகவதர் நடிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வியடைய, பாகதவரின் காலம் முடிந்துவிட்டதை உணர்ந்து கொண்டார் லேனா செட்டியார். அடிப்படையில் அவர் வியாபாரியாயிற்றே. பராசக்தி, மனோகரா, தூக்குத் தூக்கி படங்களின் மூலம் புயல் கிளப்பிக் கொண்டிருந்த சிவாஜியை நாயகனாக்கி சாமியிடம் ஒரு கதை எழுதி வாங்கினார். தனது மருமகள் படத்தை இயக்கிய டி.யோகானந்தை வைத்து அந்தப் படத்தை இயக்கி, தயாரித்தார். அந்தப படம்தான் காவேரி.
காவேரி ஒரு அரச கதை. இரண்டு வெவ்வேறு சமஸ்தானத்து மன்னர்கள். இருவருக்கும் பகை. ஒரு மன்னரின் வாரிசு சிவாஜி கணேசன். ராஜகுரு தனது தந்தைக்கு எதிராக செய்யும் சூழ்ச்சியை இளவரசனான சிவாஜி முறியடிக்க முயல்வார். இந்த நேரத்தில் அவருக்கு நடன மங்கை பத்மினியுடன் காதல் ஏற்படும். எதிரி மன்னனின் மகள் லலிதாவுக்கும் அவர் மீது காதல் தோன்றும். எதிரி மன்னனின் நயவஞ்சக தளபதியும் பத்மினி மீது காதல் கொள்வான். இந்த காதல், சூழ்ச்சி இரண்டையும் சிவாஜி எப்படி வெற்றிக் கொண்டார் என்பது கதை.
காவேரியை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எடுத்தனர். தெலுங்கில் விஜய கௌரி என்ற பெயரில் படம் வெளியானது. தமிழில் படம் 100 நாள்களை கடந்து ஓடி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து லேனா செட்டியாரின் ஆஸ்தான இயக்குனரானார் டி.யோகானந்த். அவர் தயாரித்த, எம்ஜிஆருக்கு புகழ் வாங்கித்தந்த மதுரை வீரன் உள்பட பல படங்களை அவர் இயக்கினார். 1955 ஜனவரி 12 ஆம் தேதி வெளியான காவேரி, இன்னும் 2 தினங்களில் 68 வது வருடை நிறைவை கொண்டாட உள்ளது.