தமிழ் சினிமாவில் விஜயகாந்த் ஓர் அபூர்வ மனிதர். மதங்களை கடந்து மனிதர்களை நேசித்தவர். சினிமாவிலும், சினிமாவுக்கு வெளியேயும் மனிதர்களுடன் பழக மதம் அவருக்கு தடையாக இருந்ததில்லை. அவரது தேசத்தை காக்கும் படங்களில் காஷ்மீர் முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக காட்டப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு உண்டு. அது இயக்குனர்கள் உருவாக்கிய கதைகள். அதில் விஜயகாந்த் நடித்தார். ஆனால், அவரது உயிரும், உறவுமாக இருந்த நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் ஒரு முஸ்லீம். அவருடன் தர்காவுக்கு செல்வது, தொழுகை செய்வது என விஜயகாந்த் திரைப்படத்துக்கு வெளியே இஸ்லாத்தை மதிப்பவராகவும், மரியாதை செய்கிறவராகவுமே இருந்திருக்கிறார்.
விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் எண்பதுகளின் முற்பகுதி சுவாரஸியமானது. 1981 இல் அவர் நடித்த முக்கிய திரைப்படங்களுள் ஒன்று சிவப்பு மல்லி. ராம.நாராயணன் இயக்க, ஏவிஎம் படத்தை தயாரித்திருந்தது. முழுக்க கம்யூனிச கொள்கையை பேசிய திரைப்படம் சிவப்பு மல்லி. அந்த காலகட்டத்தில் லட்சியவாதம் இளைஞர்களின் ஆதர்சமாக இருந்தது. நக்சல்கள் பற்றிய வியப்பு தமிழ்நாட்டைவிட ஆந்திராவில் மேலோங்கியிருந்த காலம். தொழிற்சங்கம், கம்யூனிஸம் அனைத்தையும் கலந்துகட்டி எர்ரா மல்லேலு என்ற தெலுங்குப் படம் 1981 இல் வெளியானது. படம் பம்பர் ஹிட்டாக ஏவிஎம் அதன் உரிமையை வாங்கி ராம.நாராயணன் இயக்கத்தில் தமிழில் சிவப்பு மல்லியாக்கியது.
கம்யூனிஸ பின்னணி கொண்ட கதை என்பதாலா தெரியவில்லை,, ஏவிஎம் பேனரில் படத்தை எடுக்காமல் ஏவிஎம் சரவணனின் மகன் பாலசுப்பிரமணியன் அண்ட் கம்பெனி என்ற பெயரில் சிவப்பு மல்லியை தயாரித்தனர். விஜயகாந்த், சந்திரசேகர் பிரதான வேடங்களில் நடித்த அந்தப் படம் கம்யூனிஸத்தை வலுவாக தமிழ் திரையில் பேசிய முதல் படமாகும். "வங்க, மலையாளத் திரைப்படங்களில் மட்டும் பறக்கும் செங்கொடி தமிழக் காற்றில் புதிதாக பறக்கிறது" என கல்கி பத்திரிகை விமர்சனம் எழுதியது. 'எரிமலை எப்படி பொறுக்கும்...', ;ரெண்டு கன்னம் சந்தனம் கிண்ணம்...' ஆகிய அற்புதமான பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தன.
நியாயத்துக்காக போராடும் கோபக்கார இளைஞன் என்ற விஜயகாந்தின் சிவப்பு மல்லி கதாபாத்திரம் அவருக்கும், ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. அதனை அவர் திரையில் தொடர்ந்தார். 1984-ல் வெளியான வெள்ளைப்புறா ஒன்று படத்தில் சுத்தியல் அரிவாள் நட்சத்திரத்தை டாலராக கொண்ட செயினை அணிந்திருப்பார். இப்படி கம்யூனிஸ்டாக திரையில் வலம்வந்த விஜயகாந்த் அதே வருடம் குழந்தை ஏசு என்ற பக்திப் படத்தில் நடித்தார்.
முன்னணி நட்சத்திரங்கள் இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம், நாத்திகர் என கதைக்கேற்ப பல்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பது சகஜம். ஆனால், பக்திப் படங்கள் எனும்போது, ரஜினி ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் நடித்தது போல், தாங்கள் சார்ந்த மதத்தை பிரதிபலிக்கும் பக்திப் படங்களில் மட்டுமே நடிப்பர். நாம் சொல்வது முன்னணி நடிகர்களைப் பற்றி. விஜயகாந்த் தனிப்பெரும் ஹீரோவாக இருந்த போது இன்றைக்கு சரியாக 38 ஆண்டுகளுக்கு முன், 1984 ஏப்ரல் 12 ஆம் தேதி அவர் நடிப்பில் குழந்தை ஏசு திரைப்படம் வெளியானது. இந்துவான அவர் குழந்தை ஏசு படத்தில் நடிக்க தயங்கவில்லை. இதுபோல் வேறு முன்னணி நடிகர்கள் அனேகமாக யாருமே நடித்ததில்லை.
குழந்தை ஏசு படத்தை கே.சங்கர் இயக்கியிருந்தார். ராஜேஷ், சரிதா உள்பட பலர் நடித்திருந்தனர். கிறிஸ்தவ பின்னணியில் அபூர்வமாகவே பக்திப் படங்கள் வரும். அப்படி வெளிவந்த குழந்தை ஏசு நல்ல வரவேற்பை பெற்றது. 'கண்ணே வா கண்மணியே வா..', 'தேவன் கோவில் மணி தினமும் வாழ்த்தும் இனி...,' ஆகிய பாடல்கள் ஷியாம் இசையில் நல்ல வரவேற்பை பெற்றன.
விஜயகாந்த் இதில் சிறிய வேடத்தில் தான் நடித்திருந்தார். ஒரு சண்டைக் காட்சியும் அவருக்கு உண்டு. இதையடுத்து 1985 இல் நவக்கிரக நாயகி என்ற பக்திப் படத்திலும், அதற்கு அடுத்த வருடம் 1986 இல் நம்பினார் கெடுவதில்லை என்ற ஐயப்பனின் பெருமையைச் சொல்லும் பக்திப் படத்திலும் விஜயகாந்த் நடித்தார். தனிப்பெரும் ஹீரோவாக இருந்தவேளை பக்திப் படங்களில் சிறிய வேடங்களில் நடித்த முன்னணி நடிகர் விஜயகாந்த் ஒருவராகவே இருப்பார். இஸ்லாம் பின்னணியில் படம் எடுத்திருந்தால் அதிலும் விஜயகாந்த் தயங்காமல் நடித்திருப்பார் என்பதே விஜயகாந்தின் தனித்துவம்.