கடந்த சில வருடங்களில் பாகுபலி 1, பாகுபலி 2, புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் போன்ற படங்கள் இந்திய அளவில் வசூலை அள்ளின. நேரடி இந்திப் படங்களை தாண்டிச் சென்றன. தெலுங்கு, கன்னட சினிமாக்கள் ஏற்படுத்திய இந்திய அளவிலான கவனஈர்ப்பை சமீபத்திய தமிழ் சினிமாக்களால் செய்ய முடியவில்லை. தமிழ் சினிமாவும் இப்படங்களைப் போல் இந்திய அளவில் கவனமும், வசூலும் பெற வேண்டும் என தமிழ் திரையுலகினரும், தமிழ் சினிமா ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் அடுத்த நம்பிக்கை கமலின் விக்ரம்.
விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் நம்பிக்கையை வலுவூட்டியுள்ளது. கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், செம்பன் வினோத் என நிறைய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மனிதர்களை சிங்கம், புலியாக உவமைப்படுத்தி, இரவு நீங்கும் போது விடியலைப் பார்க்கப் போவது யார் என்பதை முடிவு செய்வது இயற்கை அல்ல, நான்தான் என்கிறார் கமல். இதில் வீரம் பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. வில்லனின் ஆள்கள் சுற்றி வளைத்துவிட்டார்கள் என்ற குரலைத் தொடர்ந்து கமல் இப்படி சொல்கிறார். "இந்த மாதிரி நேரங்களில் வீரர்களெல்லாம் அடிக்கடி சொல்ற வார்த்தை என்னத் தெரியுமா, ...த்தா பார்த்துக்கலாம்."
கமல் படங்களில் வீரம் பற்றி வருவது இது முதல்முறையல்ல. பல படங்களில் வந்திருக்கிறது. அதில் சிறப்பாக இரு படங்களை குறிப்பிட வேண்டும். அந்தப் படங்கள் வந்த காலகட்டம் மட்டுமின்றி இப்போதும் அது பேசப்படுகிறது. முதலாவது குருதிப்புனல். கோவிந்த் நிஹாலனி 1994 இல் இயக்கிய துரோக்கல் படத்தைத் தழுவி குருதிப்புனலை கமல் தமிழில் எடுத்தார். பி.சி.ஸ்ரீராம் படத்தை இயக்கினார். பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள் இன்றி போலீஸ், தீவிரவாதிகள் மோதலை ராவாக குருதிப்புனல் சொன்னது. படத்தைப் பார்த்த கோவிந்த் நிஹாலனி, குடும்ப உறவுகள் குறித்தக் காட்சிகளை துரோக்கல்லைவிட சிறப்பாக கமல் எடுத்திருந்ததாக பாராட்டினார். படத்துக்கு முதலில் துரோகி என்று பெயர் வைத்த கமல், பாலசந்தர் அப்பெயர் வேண்டாம் என கூறியதைத் தொடர்ந்து குருதிப்புனல் நாவலின் பெயரை தனது படத்துக்கு வைத்துக் கொண்டார்.
இந்தப் படத்தில் நாசர் தீவிரவாதிகள் தலைவராக வருவார். அவரை என்கவுண்டரில் கொல்வதற்காக கமல் தனியான இடத்துக்கு அழைத்து வருவார். அப்போது கமலுக்கும், நாசருக்கும் இடையில் நடக்கும் உரையாடல் மிகச்சிறப்பாக இருக்கும். இறுதியில் கமல் மனதை மாற்றிக் கொள்வார். படத்தில் நாசரின் பெயர் பத்ரி. கமல் சொல்வார், "பத்ரி, இந்த விளையாட்டுல ஜெயிக்கிறதோ, தோக்கிறதோ முக்கியமில்லை. உயிரோடு இருக்கிறதும் சாகறதும்தான். கெட்டிக்காரத்தனமா பேசி சாவுலயிருந்து தப்பிச்சுகிட்டதா மட்டும் நினைக்காத. இன்னும் கொஞ்ச நாள்ல நீ சாகிற வரம் கேட்டு என்னை கெஞ்சப்போற" என்பவர், நாசரின் அருகில் வந்து அவரது கண்ணைப் பார்த்துச் சொல்வார்.
"வீரம்னா என்னன்னு தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது." குருதிப்புனலில் வரும் வசனங்களில் இது மிகவும் பிரசித்திப் பெற்றது. போலீசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் வீரம்னா பயம் இல்லாம நடிக்கிறது என்ற வசனம் பொருத்தமாக இடம்பெற்றது. ஆனால், விருமாண்டியில் வன்முறை நிறைந்திருந்தாலும், வன்முறை எதற்கும் தீர்வாகாது என்ற கருத்தை இறுதியில் நிலைநிறுத்திய படம். அதிலும் வீரம் பற்றி குறிப்பு வரும்.
குருதிப்புனல் போன்று கமலே அதையும் பேசியிருப்பார். பஞ்சாயத்தில் கமல் ஒறண்டை இழுத்து சண்டையாகிவிடும். கொத்தாளத்தேவனுக்காக இதனை அவர் செய்திருப்பார். ஆனால், பிரச்சனைகளுக்கு காரணம் கொத்தாளத்தேவன் என்பதை நன்கு அறிந்த அன்னலட்சுமி, போய் மன்னிப்புக் கேள் என்பாள். கமல் தயங்குவார். அப்போது அன்னலட்சுமி, "மன்னிக்கிறவன் மனுஷன், மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்" என்பார். கமலும் குடிபோதையில் இரவில் ஒறண்டை இழுத்தவனை தேடிச் செல்வார். மன்னிப்பு என்பதே அகராதியில் இல்லாமல் தெனாவெட்டாக வாழ்வதே வீரம் என்று வாழ்கிறவர் அல்லவா. மன்னிப்பு கேட்கையில் அன்னலட்சுமி சொன்னதை மாற்றி, "மன்னிக்கிறவன் மனுஷன், ஆனா, மன்னிப்பு கேட்கிறவன் வீரன்" என்பார். விருமாண்டி சொன்ன வன்முறைக் கூடாது என்ற கருத்துக்கு, மன்னிப்பு கேட்பதுதான் வீரம் என்பது பொருந்திப் போனது.
இப்போது விக்ரம் படத்தில் மீண்டும் வீரம் பற்றிய குறிப்பு வந்திருக்கிறது. இதில் அநியாயங்களை அதே அநியாய வழியில் அழிப்பவராக கமல் நடித்திருப்பதாக தெரிகிறது. மேலும், இது குரோதங்களின் காலகட்டம். வீரம்ங்கிறது பயம் இல்லாம நடிக்கிறது, மன்னிக்கிறதுதான் வீரம் என்று பேசியவர் இப்போது "..த்தா பார்த்துக்கலாம்" லெவலுக்கு வந்திருக்கிறார். படம் இந்தியாவே பார்க்கிற மாதிரி இருந்தா மகிழ்ச்சிதான்.