கமல், ரஜினி, ஷங்கர் ஆகியோரின் படங்கள் தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் சாதனைப் படைத்திருக்கின்றன. கடைசியாக 2.0 படம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்திப் பேசும் மாநிலங்களில் நல்ல வசூலை பெற்றது. எனினும், பாகுபலி 2, புஷ்பா, கேஜிஎப் சேப்டர் 2 போன்று இந்தியா முழுவதும் 500, 1000 கோடிகள் வசூலிக்கவில்லை. தமிழ் சினிமாவும் இந்தப் படங்களைப் போல் பாக்ஸ் ஆபிஸில் கலக்க வேண்டும் என்பது தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் கனவு. இந்தக் கனவை கமலின் விக்ரம் பூர்த்தி செய்யுமா?
இந்தியா முழுவதும் அறிந்த நடிகராக கமல் இருக்கிறார். முப்பது வருடங்களுக்கு முன்னால் அமிதாப்பச்சனைக்கூட அனைத்து மொழி ரசிகர்களுக்கும் தெரியாது. ஆனால், கமலை தெரியும். தமிழ மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட அனைத்து மொழிப் படங்களிலும் கமல் அப்போது நடித்து வந்தார். எல்லா மொழிகளிலும் வெள்ளிவிழாப் படங்கள் தந்துள்ளார். அந்த வலுவான நிலையில் இருந்து கமல் படிப்படியாக கீழிறங்கினார். தமிழில் மட்டுமே நடிக்க ஆரம்பித்தார். தமிழில் தயாராகும் படங்கள் வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும். சாச்சி 420 போல அபூர்வமாகவே பிற மொழிகளில் நடித்தார்.
காதல், சென்டிமெண்ட், சண்டை, காமெடி என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படங்களை கமல் அதிகம் தவிர்த்தார். சதிலீலாவதி, தூங்காவனம் என ஒற்றை ஜானர் படங்களில் அதிகம் கவனம் செலுத்தினார். இதனால், அவரது சந்தை மதிப்பு தமிழ் மொழிக்குள் சுருங்கிப் போனது. காதல், காமெடி, சென்டிமெண்ட், சண்டை என அனைத்தும் கலந்து தசாவதாரம், விஸ்வரூபம் போன்ற படங்களை எடுக்கையில் அவை மொழி கடந்து அனைத்து மாநிலங்களிலும் வரவேற்பை பெற்றன.
ரஜினி மேலே சொன்ன கமர்ஷியல் அம்சங்கள் கொண்ட படங்களில் மட்டுமே நடித்தார். ஸ்ரீ ராகவேந்திரா தவிர்த்து அவர் எந்த ஜானர் படத்திலும் நடிக்கவில்லை. இதன் காரணமாக ரஜினி படங்களின் வர்த்தகம் பிற மாநிலங்களிலும் வளர ஆரம்பித்தது. கபாலி பிற மொழிகளிலும் கணிசமாக வசூலித்தது. ஆனாலும், பாகுபலி 2, புஷ்பா, கேஜிஎப் சேப்டர் 2 போன்ற வெற்றியை தமிழ் சினிமா இதுவரை சுகிக்கவில்லை. அதனை கமலின் விக்ரம் சாத்தியப்படுத்துமா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.
விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் என இரு முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பகத் பாசில் இருப்பதால் விக்ரமின் கேரளா மாநில ஓபனிங் அமர்க்களமாக இருக்கும். அதேபோல், தெலுங்கு மாநிலங்களிலும் ஓபனிங்குக்கு குறைவிருக்காது. கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூரு போன்ற நகரங்களிலும் படம் நல்ல ஓபனிங்கை பெறும். எனினும் இந்தி பேசும் மாநிலங்களில் படம் பெரிதாகப் போக வேண்டுமென்றால், படத்துடன் அவர்களுடன் ஒன்றிப்போகும் யூனிவர்சல் கன்டென்டை விக்ரம் கொண்டிருக்க வேண்டும். அதுபோல், காட்சிகள், திரைமொழி ஆகியவை பொதுப்பார்வையாளர்களை கவரும் வகையில் அமைய வேண்டும்.
லோகேஷ் கனகராஜின் முதலிரு படங்கள் அவரது திறமைக்குச் சான்றுகள். மூன்றாவது படம் மாஸ்டர் வசூல்ரீதியாக திருப்திகரமாக அமைந்தாலும், விமர்சனரீதியாக திருப்தி அளிக்கவில்லை. விஜய் சேதுபதி நடிப்பைத் தவிர அதில் சொல்லிக் கொள்ளும்படி ஏதுமில்லை. விக்ரமை மாநகரம், கைதி போன்று தரமாக எழுதியிருந்தால் மற்றவற்றை கமல், பகத், விஜய் சேதுபதி பார்த்துக் கொள்வார்கள். க்ரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு ஏற்கனவே பாராட்டை பெற்றது. பீஸ்டில் அனைவரும் நேர்மறையாகச் சொன்ன ஒரே விஷயம் அனிருத்தின் இசை. பாடல்கள் எப்படியிருந்தாலும் விக்ரமின் பின்னணி இசையில் சொதப்ப மாட்டார் என நம்பலாம்.
விக்ரமின் வியாபாரமும் நம்பிக்கை அளிக்கிறது. படத்தின் ஓடிடி உரிமை மொத்தமாக 120 கோடிகளுக்கு வாங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இசை உரிமை 18 கோடிகள், தமிழக திரையரங்கு உரிமை 35 கோடிகள், இந்தி டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமை 38 கோடிகள், கேரளா 10 கோடிகள் என இப்போதே படம் 200 கோடிகளைத் தாண்டி சம்பாதித்திருப்பதாக உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் புள்ளி விவரங்களில் ஐந்தோ பத்தோ கோடிகள் முன் பின் ஆனாலும் இது நல்ல வியாபாரம். வெளியாகும் முன்பே போட்டப் பணத்தை தயாரிப்பாளர் கமலுக்கு படம் சம்பாதித்து தந்துவிடும். ஒரே கேள்வி, பான் இந்தியா திரைப்படத்துக்கு இலக்கணமாக தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகுமா? 500, 1000 கோடிகளை வசூலிக்குமா? குறைந்தபட்சம் புஷ்பா படத்தைப் போன்று 100 கோடியையாவது இந்தியில் வசூலிக்குமா?
கமலின் அபூர்வ சகோதரர்களும், இந்தியனும் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் என்பதை இங்கு நினைவுகூர வேண்டும். ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட் என சமீபகால படங்கள் பான் - இந்தியா கனவை நிறைவேற்ற தவறிய நிலையில் கமலின் விக்ரம் அதனை சாத்தியமாக்கினால், தமிழ் சினிமாவின் மாபெரும் சாதனையாக அது பார்க்கப்படும்.