மைக்கேலாக வரும் கிரிமினல் கமலுக்கு மட்டும் ஜோடி கிடையாது. தீயணைப்புத்துறையில் வேலை செய்யும் ராஜாவின் ஜோடி குஷ்பு. பணக்கார மதனுக்கு ரூபினி, அப்பாவி பாலக்காட்டு ஐயர் காமேஸ்வரனுக்கு ஊர்வசி. அவரவர் குணத்துக்கு ஏற்றபடி பாடல்களைப் போட்டு இளையராஜா வழக்கம்போல் அசத்தியிருந்தார். இந்த நான்கு கமல்களும் இடம்பெறும், 'பேரு வச்சாலும் வைக்காமல் போனாலும் மல்லி வாசம்' பாடலை சமீபத்தில் மோசமான முறையில் ரீமிக்ஸ் செய்திருந்தனர். இப்படியொரு பாட்டா என்று இன்றைய இளசுகள் மைக்கேல் மதன காம ராஜனில் வரும் ஒரிஜினல் பாடலை கேட்டு மயங்கினர். வாலி படத்தின் சிச்சுவேஷனை அற்புதமாக பாடலில் விவரிக்க, மலேசியா வாசுதேவனும், எஸ்.ஜானகியும் பாடியிருந்தனர்.
இளமை துள்ளலுடன் இருக்கும் ராஜாவுக்கு, ஷாலினி சிவராமனுடன் (குஷ்பு) 'ரம்பம்பம் ஆரம்பம்..' பாடல், இதுவும் வாலிதான். எஸ்.பி.பி.யும், சித்ராவும் பாடியிருந்தனர். நான்கு கமல்களும் பிறந்த உடன் எப்படி எதிரிகளால் பிரிக்கப்பட்டனர், யார் யாரிடம் அந்த நான்கு குழந்தைகளும் தஞ்சமடைந்தனர் என்ற பிளாஷ்பேக் கதை கேளு கதை கேளு பாடலில் கச்சிதமாக சொல்லியிருந்தார்கள் கமலும், இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவும். அதற்கு துணைபுரிந்தது இளையராஜாவின் இசையும், பஞ்சு அருணாச்சலத்தின் பாடல் வரிகளும். இந்தப் பாடலை நொடிக்கு 16 பிரேம்கள் என்று வேகமாக படமாக்கியிருந்தது அந்தப் பாடலுக்கு தனித்துவத்தை தந்தது.
இதற்கு மாறாக முழுக்க ஸ்லோமோஷனில் காமேஸ்வரன், திரிபுரசுந்தரியின் (ஊர்வசி) 'சுந்தரி நீயும் சுந்தரி நானும்...' பாடல் காட்சியை எடுத்திருந்தனர். கமலுடன், எஸ்.ஜானகி இந்தப் பாடலை பாடியிருந்தார். பாடலில் காமேஸ்வரன் பாடுவதாக வரும் தமிழ்ப்பகுதிகளை பஞ்சு அருணாச்சலம் எழுத, திரிபுரசுந்தரி பாடும் மலையாள வரிகளை பூவாச்சல் காதர் எழுதினார். இவர் மலையாள கவி, பாடலாசிரியர். பிரகாசமான ஒளியில் அட்காசமான ஒளிப்பதிவை இந்தப் பாடலுக்கு செய்திருந்தார் கன்னட ஒளிப்பதிவாளரான பி.சி.கௌரி சங்கர். இவர் இயக்குனரும் கூட. அவரது ஒளிப்பதிவில் மனதை பறிகொடுத்த கமல் அவரை தமிழுக்கு அழைத்து வந்தார். அப்போது அவர் கன்னடத்தில் ஒரு படம் இயக்கிக் கொண்டிருந்தார். தேதி கிளாஷ் ஆனபோது படத்தில் மதன் கதாபாத்திரம் பெங்களூரு செல்வது போல் அமைத்து, அங்கேயே காட்சிகளை கமல் படமாக்கினார். வேகமான கதை கேளு பாடலில் பிளாஷ்பேக் கதையை சொன்னது போல சுந்தரி நீயும் ஸ்லோமோஷன் பாடலில் காமேஸ்வரனும், திரிபுரசுந்தரியும் சந்திப்பது, காதல் கொள்வது, பெண் பார்ப்பது, திருமணம், முதலிரவு என குழந்தை பிறந்து வளர்வதுவரை காட்டியிருப்பார்கள். இந்தியாவில் முழுக்க ஸ்லோமோஷனில் எடுக்கப்பட்ட முதல் பாடல் இதுவாகும்.
பணக்கார மதனின் குணத்துக்கு தகுந்தது போல் வைக்கப்பட்டது, 'சிவராத்திரி தூக்கமேது..' பாடல். இதில் மனோரமா கங்காபாய் என்ற நாடக நடிகையாக வருவார். கணவர் இல்லை. ஒரே மகள் ஜக்குபாயும் (ரூபினி) நாடக நடிகை. மூவரும் ஒரே இடத்தில் தங்க நேரும் போது மதனின் பணக்கார களைகண்டு, எப்படியும் மகளை அவருக்கு மணம் முடித்து வைக்க திட்டமிட்டு மதனிடம் தனது மகளை அனுப்பி வைப்பார். பரிதாபகரமான அதேநேரம் வில்லங்கமான வேடம். அதைவிட வில்லங்கமான காட்சி. ஆம்பளைங்களுக்கு பிடிக்கணும்னா ஆம்பளை போடுற சென்ட்தான் போட்டுக்கணும் என்று மதனின் சென்டை மகளுக்கு பூசி அனுப்பி வைப்பார். கமல், சிங்கீதம் சீனிவாசராவ், வசனகர்த்தா கிரேஸிமோகன் மூவருமாக இந்த விரசக் காட்சியை எவ்வளவுதூரம் அப்படி தோன்றாமல் இருக்க முடியுமோ அவ்வளவுதூரம் பாலிஷாக எடுத்திருப்பார்கள். 'என்ன செய்யிறது?" என்று மகள் கேட்க, "இதுக்கெல்லாம் வசனமா எழுதி குடுக்க முடியும், பஞ்சையும், நெருப்பையும் பக்கத்துல பக்கத்துல தான் வைக்க முடியும். பார்த்துடி, அங்க போய் நடிக்காத இது நாடகமில்லை, வாழ்க்கை" என்று மனோரமாக அனுப்பி வைப்பார். கடைசியில் வரும், 'நாடமில்ல, வாழ்க்கை' வரியில் அவர்களது அவலத்தை சொல்லி, விரசம் குறைக்கப்பட்டிருக்கும்.
அன்று கமலின் படங்களில் நெருக்கமான டூயட் பாடல் கண்டிப்பாக இடம்பெறும். மைக்கேல் மதன காம ராஜனுக்கு முந்தைய அபூர்வ சகோதரர்களில் கௌதமியுடன், 'வாழ வைக்கும் காதலுக்கு ஜே,..' சத்யாவில் அமலாவுடன், 'வளையோசை கலகலவென' பாடல், பேர் சொல்லும் பிள்ளையில் ராதிகாவுடன், 'தப்புத்தண்டா..' பாடல், விக்ரமில் அம்பிகாவுடன், 'வனிதமணி வனமோகினி.., டிம்பிள் கபாடியாவுடன், 'மீண்டும் மீண்டும் வா..' என கமல் படம் என்றால் இளைஞர்கள் (இளைஞிகளும்தான்) பூரிப்படையும் ஒரு நெருக்கமான டூயட் இருந்தே ஆகும். மைக்கேல் மதன காம ராஜனில் ரூபினியுடனான, 'சிவராத்திரி தூக்கமேது..' அப்படி அமைந்தது. இளையராஜா இந்தப் பாடலில் ஒரு மதன ராஜாங்கமே நடத்தியிருந்தார். 'அவர் என்னை பளார்னு அறைஞ்சா என்ன பண்றது?' என ரூபினி கேட்க, 'அடிக்கட்டும், அதிர்ஷ்டம் அடிக்கும்னு கேட்டதில்லை' என்று கூறி, 'இதற்கெல்லாம் முதல்ல மூடு கிரியேட் பண்ணணும்...' என்று லைட்டை ஆஃப் செய்து, மனோரமா பாடலை தொடங்கி வைப்பார். அவரே மறைந்திருந்து மகளுக்கு எப்படி அபிநயம் பிடிக்க வேண்டும் என்று சொல்லியும் தருவார்.
இந்தப் பாடலில் கமல் காமதேவனாகவே மாறி நடித்திருப்பார். பாடல் நடுவில் மோதிரம் அணிவித்து ரூபினியை காந்தர்வ திருமணம் செய்து தனது லீலைகளை தொடர்வார். வில்லங்கமான கதாபாத்திரம். காட்சியோ தூக்கலான விரசம். நெருக்கமான நடன அசைவுகள். பாடல் படமாக்கிய பின் மனோரமா அதிர்ந்து போயிருக்கார். தம்பி ரொம்ப தப்பாயிருக்குப்பா என்று, பெயர் கெட்டுப்போகும் என மனோரமா பயப்பட, அதற்கு மரியாதை கொடுத்து காம ரசத்தை குறைத்து சில காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். அப்படி மாற்றி எடுக்கப்பட்ட பாடலைத்தான் இப்போது நாம் பார்க்கிறோம்.