பருவகாலம் திரைப்படம் 1974-ல் வெளிவந்தது. அப்போது கமல் வளர்ந்து வரும் நடிகர். மீசையில்லாமல் வெளுத்த வெடவெட தோற்றத்தில் பிளஸ்டூ மாணவரைப் போல் இருப்பார். அந்த காலத்தில் அவர் நடிப்பில் பேசப்பட்ட திரைப்படங்களில் ஒன்று பருவகாலம். கதை, வசனம் என்று பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் என டைட்டில் கார்ட் போட்டிருப்பார்கள். எனினும் பருவகாலம் 1972 இல் மலையாளத்தில் வெளியான செம்பருத்தி படத்தின் தழுவல் என்பது பரவலாக அனைவரும் அறிந்த விஷயம்.
செம்பருத்தி படத்தில் சாந்தா என்ற பெண் லாட்ஜில் கூட்டிப் பெருக்கும் வேலை செய்து வருவாள். அவளை அந்த லாட்ஜில் தங்கியிருக்கும் தினேஷ் காதலிப்பான். ஒருநாள் சாந்தா கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்படுவாள். போலீஸ் விசாரணையில் அவள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியும். போலீஸ் பாலச்சந்திரன் என்பவனை கைது செய்யும். அந்த லாட்ஜில் அவ்வப்போது வந்து தங்கும் ராஜப்பன் ஒருநாள் சாந்தாவை பாலியல் பலாத்காரம் செய்து விடுவான். அவள் கர்ப்பமாக இருப்பதை அறிகிறவன் அவளை கொன்று கிணற்றில் வீசிவிடுவான். இந்த உண்மையை அறிந்து கொள்ளும் தினேஷ் ராஜப்பனை கொலை செய்துவிட்டு போலீஸில் சரணடைவான். இந்தக் கதையை கொஞ்சம் மாற்றி தமிழில் பருவகாலமாக எடுத்தனர்.
செம்பருத்தியில் மது, ராகவன், ரோஜா ரமணி, சுதீர் ஆகியோர் நடித்திருந்தனர். பி.என்.மேனன் படத்தை இயக்கியிருந்தார். எழுத்தாளர் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் எழுதிய லாட்ஜ் என்ற சிறுகதையை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. செம்பருத்தி வெளியாகி இரு பிலிம்பேர் விருதுகளையும், மாநில அரசின் சிறந்த இரண்டாவது திரைப்படத்துக்கான விருதையும் வென்றது.
செம்பருத்தியில் ரோஜா ரமணி நடித்த அதே லாட்ஜ் வேலைக்காரி வேடத்தை பருவகாலத்திலும் செய்தார். ஜமீன் பங்களாவை பருவகாலத்தில் ஆனந்தபவன் லாட்ஜாக மாற்றியிருந்தார்கள். பருவகால சீஸன் தொடங்கியதும் ஓவியர் சுதர்சன், குடிகார ஸ்ரீகாந்த், வேட்டைக்காரர் சசிகுமார், குதிரை பயிற்சியாளர் லியோ பிரபு, சாமியார் நாகேஷ் என பலரும் அங்கு வந்து தங்குவார்கள். ஸ்ரீகாந்தின் தம்பி கமல்ஹாசனும் அடிக்கடி அங்கு வந்து செல்வார்.
ஒருநாள் மது விருந்துக்குப் பிறகு அனைவரும் அசந்து கிடக்கிற நேரம், விளக்குகளை அணைத்துவிட்டு ரோஜா ரமணி கிளம்ப ஆயத்தமாவார். அப்போது ஒருவன் அவளை பாலியல் பாலாத்காரம் செய்துவிடுவான். ஆள் யார் என்று தெரியாது. ரோஜா ரமணியின் தந்தை எஸ்.வி.சுப்பையா அரிவாளோடு வந்து நியாயம் கேட்பார். யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ரோஜா ரமணி அந்த சம்பவத்தால் கர்ப்பமாவார். குழந்தையும் பிறக்கும். குழந்தையுடன் லாட்ஜுக்கு நியாயம் கேட்க வரும் அவருக்கு விலைமாதுவான பிரமிளா உதவ முன்வருவார்.
செம்பருத்தி படத்துக்கு இசையமைத்த தேவராஜனே பாருவகாலத்துக்கும் இசையமைத்தார். புதுமைப்பித்தனின் வரிகளில், வெள்ளி ரதங்கள் அழகு மேகம் என்ற பாடல் சூப்பர்ஹிட்டானது. ராஜேஷ் என்பவர் ஒரு ஐயப்பப் பாடலையும் பாடியிருப்பார். செம்பருத்தி தெலுங்கில் கன்னி வயசு என்ற பெயரில் ரீமேக் செய்ப்பட்டு அங்கு வெற்றி பெற்றது. செம்பருத்தியும் கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தளவுக்கு பருவகாலம் தமிழில் வரவேற்பை பெறவில்லை.