1981 இல் பாலசந்தர் மரோ சரித்ராவை இந்தியில் ரீமேக் செய்தார். ஏக் துஜே கே லியே என்ற பெயரில் இந்தியில் வெளியான அந்தப் படத்தில் சில மாறுதல்கள் பாலசந்தர் செய்திருந்தார். முக்கியமாக நாயகி சரிதாவுக்குப் பதில் ரதி அக்னிகோத்ரியை நடிக்க வைத்தார். படம் வெளியாகி இந்தியில் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது. திரையிட்ட இடங்களில் எல்லாம் மக்கள் அலைமோதினர். அந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த இந்திப் படம் என்ற சாதனையை படம் படைத்தது.
இந்த வெற்றியால் கமல், ரதி அக்னிகோத்ரி ஜோடியை உடனடியாக சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தார் தங்களின் அடுத்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தனர். தேக்கா பியார் தும்கரா என்று பெயரிடப்பட்ட அந்தப் படத்தின் வேலைகள் 1982 இல் தொடங்கின. அப்போது ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ரதி அக்னிகோத்ரி, ஏக் துஜே கே லியே படத்தில் பாலசந்தர் தனது காட்சிகளை குறைத்து, கமலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என குறைபட்டுக் கொண்டார். இதுபோல் மேலும் சில புகார்களை அவர் பாலசந்தர் மீது வைத்தார். அவரது தந்தையும் பாலசந்தரை விமர்சித்தார்.
பாலசந்தரை தனது குருவாக வழிபட்டு வந்த கமலுக்கு இது கோபத்தை ஏற்படுத்த, அவர் ரதி அக்னிகோத்ரிக்கு எதிராக பேசினார். படப்பிடிப்பில் ரதியின் நடிப்பை பாலசந்தர் விமர்சித்து பேசினாரே தவிர , தனிப்பட்ட முறையில் அவர் எதுவும் சொல்லவில்லை என்றார் கமல். இந்த உரையாடல்கள் தடித்து, கமல், ரதி அக்னிகோத்ரி சண்டையில் முடிந்தது. இதன் காரணமாக 1982 இல் தொடங்கப்பட்ட படம் பல வருடங்கள் முடியாமல் தள்ளிப்போனது.
தேக்கா பியார் தும்கரா படத்திற்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட கமலின் அரை டஜன் இந்திப் படங்கள் வெளியான பிறகும், ரதியுடன் நடித்தப் படம் வெளியாகவில்லை. பணம் போட்டவர்களுக்கு யாராக இருந்தாலும் கட்டுப்பட்டுத்தானே ஆக வேண்டும். இறுதியில் கமல், ரதி இருவரும் நடிக்க படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்புதளத்தில் இருவரும் விரோதிகள், பேசிக் கொள்ள மாட்டார்கள். இயக்குனர் ஆக்ஷன் சொன்னதும் கேமராவுக்கு முன் பேசி, சிரித்து காதல் செய்வார்கள். இப்படி ஒருவழியாக அந்தப் படத்தை முடித்தனர்.
பாலசந்தரை முன்வைத்து நடந்த சண்டை குறித்து ரதி பிறகு விளக்கம் அளித்தார். பாலசந்தரைக் குறித்து தான் எதுவும் சொல்லவில்லை, கமல்தான் நடுவில் புகுந்து தான் பேசியதை மாற்றி சொல்லிவிட்டார் என்றார். கமலோ, ரதி பாலசந்தரை விமர்சித்ததுடன் அவரது தந்தையும் பாலசந்தர் குறித்து தவறாக பேசினார் என தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இவர்களை பேட்டியெடுத்தவர்கள் இவர்கள் சொன்னதை செய்தி சுவாரஸியத்துக்காக கொஞ்சம் மாற்றி எழுதியதும் இந்தப் பிரச்சனை பெரிதாக காரணமானது.
கடைசியில் 1985 தேக்கா பியார் தும்கரா திரைக்கு வந்தது. அதற்கு முன்பே இந்திப் படவுலகின் அரசியலால் கமல் சலிப்புற்றிருந்தார். குறிப்பிட்ட நேரத்தில் படத்தை அவர்கள் முடிப்பதில்லை. சொன்னது ஒன்று எடுப்பது ஒன்றாக இருக்கும். பல இந்திப் படங்களின் கதை, காட்சிகள் படப்பிடிப்புத்தளத்தில் மாற்றப்பட்டன. தேக்கா பியார் தும்கரா படப்பிடிப்பிலும் இதுபோல் காட்சிகள் மாற்றப்பட்டன. இதனால் இந்திப் படவுலகு மீது ஒவ்வாமை கொண்டு, 1985 க்குப் பிறகு கமல் இந்தியில் நடிக்கவில்லை. இத்தனைக்கும் குறுகிய காலத்தில் சிலபல சில்வர் ஜுப்லி படங்களை அவர் இந்தியில் தந்திருந்தார்.