மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்றார் மாவோ. சினிமா நட்சத்திரங்கள் மரத்தைப் போல எந்த சர்ச்சையிலும் சிக்காமல் ஒதுங்கி இருக்கவே விரும்புகிறார்கள். ஆனால், மற்றவர்கள் அப்படி இருக்க விடுவதில்லை. நடிகர் பிருத்விராஜ் தெரிந்தோ தெரியாமலோ தனது பேட்டியின் மூலம் கமல், ரசிகர்களை கோர்த்து விட்டுள்ளார்.
விக்ரம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியதால், தூங்கிக் கொண்டிருந்த கமல், ரஜினி ரசிகர்கள் விழித்தெழுந்து நானா நீயா போட்டியில் இறங்கினர். என் தலைவனின் படங்கள்தான் அதிகம் வசூலித்தன என்று ஒரு தரப்பும் இல்லையில்லை எங்க தலைவர்தான் பிஸ்தா என இன்னொரு தரப்பும் இணையத்தில் மோதிக் கொண்டன. சர்வர் தீப்பிடிக்கும் அளவுக்கு நடந்த இந்த கௌரவச் சண்டை இப்போதுதான் சற்று ஓய்ந்திருக்கிறது.
அவர் சொன்னதில் எந்த வரலாற்றுப் பிழையும் இல்லை. கமல் சிறந்த நகைச்சுவைப் படங்களை தந்திருக்கிறார். மைக்கேல் மதன காமராஜன் தொடங்கி பஞ்ச தந்திரம்வரை எத்தனையோ படங்களை சொல்லலாம். தசாவதாரம் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை மறக்க முடியுமா? ரஜினி படங்கள் இதிலிருந்து மாறுபட்டவை. அவர் கமலைப் போல் ஆக்ஷன், காமெடி, த்ரில்லர் என ஜானர் படங்கள் செய்வதில்லை. அவரது அனைத்துப் படங்களிலும் காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி அனைத்தும் கலந்திருக்கும். அதனால், அனைத்துப் படங்களிலும் அவர் சென்டிமெண்ட், காதல், சண்டையுடன் காமெடியும் செய்தாக வேண்டும்.
சற்றுப் பின்னோக்கிச் சென்றால் குரு சிஷ்யனில் பிரபு, வினு சக்ரவர்த்தியுடன் ரஜினி அடிக்கும் கூத்து நம்மை சிரிக்க வைக்கும். மன்னனில் கவுண்டமணியுடன் சின்ன தம்பி படத்துக்கு டிக்கெட் வாங்கும் காட்சிகளில் திரையரங்கே சிரிப்பில் அதிர்ந்தது. சமீபத்தில் என்றால், விவேக்குடன் சிவாஜியிலும், வடிவேலுடன் சந்திரமுகியிலும் காமெடியில் கலக்கினார். நகைச்சுவை என்ற ரஜினியின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்டை இளம் இயக்குநர்கள் பயன்படுத்த தவறிவிட்டனர்.
சரி, கமல், ரஜினியில் யார் சிறந்த நகைச்சுவை நடிப்பை தரக்கூடியவர்? சந்தேகமில்லாமல் கமல் என சொல்லலாம். தமிழின் அனைத்து நகைச்சுவை நடிகர்களும் தங்களுக்கென தனித்துவமான பாணியை கொண்டவர்கள். அவர்கள் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்தப் பாணிதான் வெளிப்படும். உதாரணமாக கவுண்டமணியின் பாணி நக்கல்விடுவது. அவர் துணி வெளுக்கிறவராக நடித்தாலும், துண்டு போட்ட அரசியல்வாதியாக நடித்தாலும் அந்த நக்கல் பாணி நடிப்புதான் சிரிப்பை வரவைக்கும். இதேபோல் கலைவாணர் தொடங்கி சின்னக் கலைவாணர் வரை அவர்களின் பாணி எது என்பதை அறுதியிட்டு கூறலாம். ஆனால், கமலின் நகைச்சுவை நடிப்பு ஒரே பாணியை கொண்டதில்லை.
மைக்கேல் மதன காமராஜனில் வரும் காமராஜனின் பீம்பாய் பீம்பாய் காமெடியும், அந்த நடிப்பும், சதிலீலாவதியில் இருக்காது. இருவருமே அப்பாவிகள்தான் ஆனால், கதாபாத்திரத்துக்கேற்ப நடிப்பு முற்றிலும் மாறியிருக்கும். இந்த இரண்டையும் சிறிதுகூட பம்மல் கே. சம்பந்தம் கமல் பிரதிபலிக்க மாட்டார். அது ஒரு வெள்ளந்தி முரடனின் நகைச்சுவையாக இருக்கும். இந்த மூன்றிலும் உள்ள அம்சமும் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தில் பார்க்க முடியாது. அவ்வை சண்முகி நகைச்சுவையும், கதாபாத்திரமும் மேலே பார்த்த அனைத்துப் படங்களிலிருந்தும் மாறுபட்டது. இவை எதையையும் பஞ்ச தந்திரத்தில் பார்க்க முடியாது. ஆக, படத்துக்குப் படம், கதாபாத்திரத்துக்கு கதாபாத்திரம் வெரைட்டியான நகைச்சுவை நடிப்பை தமிழில் கமல் அளவுக்கு வேறு எந்த நடிகரும் தந்ததில்லை.
ரஜினியின் குரு சிஷயன் காமெடியிலிருந்து சந்திரமுகிவரை அனைத்தும் ஒரே பாணியிலானவை. கமல் சினிமாவுக்கு முழுக்குப் போட்டு முழுநேர அரசியல்வாதியாகப் போவதாக அறிவித்த போது, பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் போன்ற நகைச்சுவை படங்களை இனி மேல் பார்க்க முடியாதே என்றுதான் ரசிகர்கள் அதிகம் கவலைப்பட்டார்கள். விக்ரமைப் போன்ற ஒரு படத்தை இன்னொரு நடிகரால் தர முடியும். ஆனால் மைக்கோல் மதன காமராஜன், சதிலீலாவதி, பஞ்ச தந்திரம் போன்ற ஒரு படத்தை இன்றைய எந்த தமிழ் ஹீரோவாலும் தர முடியாது.