பொன்னியின் செல்வன் சோழ அரசன் பார்த்திபனின் மகன் விக்கிரமனை பிரதானமாகக் கொண்டு வரலாற்று பின்புலத்தில் புனையப்பட்ட புதினமாகும். ஒருகாலத்தில் சீரும் சிறப்புமாக இருந்த சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையாகி, சிறிய நிலப்பரப்பில் இயங்கி வந்த காலகட்டம். பல்லவ மன்னன் நரசிம்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன் அவனை எதிர்த்துப் போரிட்டு வீர மரணமடைகிறான். பின்னர் சோழ நாடு எப்படி பார்த்திபனின் மகன் விக்கிரமனின் பராக்கிரமத்தால் விடுதலை அடைந்தது என்பதை பார்த்திபன் கனவு விரிவாக எடுத்துரைக்கிறது. எனினும், பல்லவ அரசர் நரசிம்மவர்மனின் கீர்த்தியை சொல்லும் இடங்கள் இதில் மிகுதி.
இந்த வரலாற்று நாவலை 1960 இல் திரைப்படமாக்கினர். யோகானந்த் படத்தை இயக்க, வி.கோவிந்தாஜன் படத்தை தயாரித்தார். அசோகன் பார்த்திபனாகவும், அவரது மகன் விக்கிரமனாக ஜெமினி கணேசனும், மாமல்லர் என்ற நரசிம்மவர்மனாக எஸ்.வி.ரங்காராவும், விக்ரமன் காதலித்து மணந்து கொள்ளும் நரசிம்மவர்மனின் மகள் குந்தவையாக வைஜெயந்திமாலாவும் நடித்தனர். கமலி என்ற சிறிய வேடத்தில் சரோஜாதேவியும் நடித்திருந்தார்.
பார்த்திபன் கனவு படம் பல பிரச்சனைகளால் நீண்டகாலம் தயாரிப்பில் இருந்தது. ராஜகுமாரி வைஜெயந்திமாலாவின் தோழிகளில் ஒருத்தியாக நடித்த சரோஜாதேவி இந்த காலகட்டத்தில் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார். அதனால், பார்த்திபன் கனவில் அவரது முக்கியமில்லாத காட்சிகள் நீக்கப்பட்டு கௌரவ தோற்றம் என்ற சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது.
சரியாக 62 வருடங்களுக்கு முன் 1960 ஜுன் 3 ஆம் தேதி பார்த்திபன் கனவு திரைக்கு வந்தது. தமிழ், தெலுங்கு, சிங்கள மொழிகளில் படத்தை வெளியிட்டனர். ஆனால், படம் நினைத்த அளவு வெற்றி பெறவில்லை. அதிகபடியாக செய்யப்பட்ட செலவு நஷ்டத்தை தந்தது. பத்திரிகைகள் பாராட்டினால் மக்கள் திரையரங்கில் திரள்வார்கள் என்பது பார்த்திபன் கனவு விஷயத்தில் உண்மையாகவில்லை.