தமிழ் சினிமாவின் பிரதான ஸ்டுடியோக்கள் வடபழனி, சாலிகிராமத்தில் இருந்தாலும், கோடம்பாக்கம் தமிழ் சினிமாவின் இன்னொரு பெயராகிப் போனது. சினிமா தமிழகத்தில் அறிமுகமான ஆரம்ப காலத்தில் , ஆகிய பகுதிகளே சினிமாவுக்குப் பெயர்போன இடங்களாக இருந்தன. அங்குள்ள ஸ்டுடியோக்களில்தான் படங்கள் தயாரிக்கப்பட்டன. பிறகுதான் சினிமா யை நோக்கி நகர்ந்தது. அப்போது முதல்முதலாக இங்கு ஆரம்பிக்கப்பட்டது ஸ்டார் கம்பைன்ஸ் ஸ்டுடியோ. அந்த ஸ்டுடியோவில் தயாரான படங்களில் ஒன்று கலாவதி.
அப்போது கதைகள் என்றால் அனைத்தும் புராணக் கதைகள்தான். நமது நாட்டார் கதைகளும் பெரும்பாலும் கடவுள்களை கதாபாத்திரங்களாக கொண்டவை. அப்படியொரு கதையை மேலோட்டமாக தழுவி சிதம்பரம் ஏ.எம்.நடராஜ கவியும், டி.கே.சுந்தர வாத்தியாரும் ஒரு கதையை எழுத, எல்.எஸ்.ராமச்சந்திரன் அதற்கு திரைக்கதை அமைத்து, இயக்கினார். அந்தப் படம்தான் கலாவதி. பின்னால் வந்த சரஸ்வதி சபதம் படத்துக்கு இது முன்னோடி.
கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கும், செல்வத்துக்கு அதிபதியான லட்சுமிக்கும் ஒரு போட்டி. கயிறு இழுக்கும் போட்டியா இவர்களுக்குள் நடக்கும்? வழக்கம் போல் யார் பெரியவர் என்பதுதான் போட்டி. தங்களது போட்டிக்கு பலிகடாவாக மங்குணி விவசாயி ஒருவனை தேர்வு செய்வார்கள். அவன்தான் இவர்களின் பரிசோதனை எலி. நமது மங்குணி விவசாயி நிலத்தை உழுகையில் லட்சுமி தங்கக் கட்டிகளாக போட்டு விடுவார். அதை எடுத்துப் பார்ப்பவன், இது என்ன மஞ்ச மஞ்சையா இருக்கு என்று தூக்கிப் போட்டு விடுவான். தங்கத்துக்கும், கல்லுக்கும் வித்தியாசம் தெரியாத விவசாயி அவன். அதனால்தான் அவனை மங்குணி என்றோம். இதைப் பார்த்ததும் சரஸ்வதி புகுந்து அவனுக்கு புத்தியை கொடுப்பார். உடனே அவனுக்கு நாம் தூக்கிப் போட்டது தங்கம் என்பது தெரியவரும். ஓ... தங்கத்தையும், கல்லையும் பிரித்தறிவதுதான் அறிவா என்று கேட்கக் கூடாது. இது நாட்டார் கதை.
நமது விவசாயி தங்கக் கட்டி எடுப்பதையும், அதனை தூக்கிப் போடுவதையும் அந்நாட்டு அழுகுணி அமைச்சர் பார்த்துக் கொண்டிருப்பான். அவன் விவசாயிடம் ஏதோ மந்திர சக்தி இருக்கிறது, அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என அரண்மனைக்கு அழைத்து வருவான். திட்டம் பேக் ஃபயராகி மந்திரி ஆசைப்பட்ட இளவரசி நமது விவசாயி மீது காதல் கொள்வாள். மன்னர் விவசாயியின் சக்தியை அறிந்து அவனை அரியணையில் உட்கார வைப்பார். ஆனால், சரஸ்வதியும், லட்சுமியும் ஒரே நேரத்தில் அருள்பாலிக்க மாட்டார்களே... அவர்களுக்குள்தான் போட்டி நடந்து கொண்டிருக்கிறதே... அதனால் ஒருமுறை புத்திசாலியாகவும், உடனே முட்டாளாகவும் நடந்து கொள்ளும் தனது காதலனை புரிந்து கொள்ள முடியாமல் இளவரசி கலாவதி குழம்பிப் போவாள். கிளைமாக்ஸில் இரு கடவுள்களும் ஒரே நேரத்தில் அறிவு, செல்வம் இரண்டையும் அவனுக்கு அருளி படத்தை சுபமாக முடித்து வைப்பார்கள்.
கலாவதியின் ஹைலைட் விவசாயியாக நடித்த டி.எஸ்.துரைராஜ். இவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர். ஆலமரத்தடியில் வாகை மரம் வளருமா? கலைவாணர் திறமை, புகழுக்கு மத்தியில் மங்கித் தெரிந்த டி.எஸ்.துரைராஜ் கலைவாணர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறை சென்றதும் பிரகாசிக்க ஆரம்பித்தார். கலைவாணருடன் அவர் நடிக்க இருந்த மீரா படத்தை கலைவாணர் இல்லாமல் தனியாளாக நடிக்க வேண்டி வந்தபோது, தனது திறமையைக் காட்டி பெயர் வாங்கினார். அதன் பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடித்தவர் 1948 இல் பிழைக்கும் வழி படத்தில் நாயகனாக நடித்தார். மீண்டும் நகைச்சுவை வேடங்கள். மீண்டும் 1951 இல் கலாவதி படத்தில் நாயகன்.
கலாவதியின் அடுத்த ஹைலைட் டைட்டில் ரோலில் நடித்த டி.ஏ.ஜெயலட்சுமி. இவர் இன்னொரு துரதிர்ஷ்ட நடிகை. திறமை, அழகு இருந்தும் குரூப் டான்சர், துக்கடா வேடம் என்றுதான் இவருக்கு கிடைத்தது. 1947 இல் ஏவிஎம்மின் நாம் இருவரில் நாயகியாக நடித்தது முதல் திருப்புமுனை. பிறகு துரைராஜுக்கு ஜோடியாக பிழைக்கும் வழி, கலாவதி ஆகிய படங்களில் நடித்தார். பிறகு ஏவிஎம்மின் மேனேஜர் வாசு மேனனை திருமணம் செய்து கொண்டார். வாசு மேனன் பிற்காலத்தில் இந்திப் படங்கள் தயாரித்தார். சென்னை கோடம்பாக்கத்தின் வாசு ஸ்டுடியோஸ் இவர்களுடையதுதான். கலாவதியில் துரைராஜுக்கு ஈடுகொடுத்து நடித்த பெயரை தட்டிச் சென்றார். கலாவதியில் கைத்தட்டல் பெற்ற இன்னொருவர் துஷ்ட மந்திரியாக நடித்த இ.ஆர்.சகாதேவன்.
படத்துக்கு எம்.எஸ்.ஞானமணி இசையமைக்க, படத்தின் கதையை எழுதிய இருவருமே பாடல்களையும் எழுதினர். ஒரேயொரு பாடலை எம்.எஸ்.சுப்பிரமணியம் எழுதினார். படத்தின் கதை, நகைச்சுவை, சீரான இயக்கம் எல்லாம் சேர்ந்து கலாவதியை வெற்றிப் படமாக்கின. 1951, பிப்ரவரி 23 வெளியான கலாவதி இன்று 72 வது வருடத்தை நிறைவு செய்கிறது.