சயின்ஸ் பிக்ஷன் கதைகள் தமிழில் அரிதாகவே படமாக்கப்பட்டுள்ளன. அந்தக் கதைகளின் அந்நியத்தன்மை ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை அளிப்பதில்லை என்பது ஒரு காரணம். இரண்டாவது அதன் பட்ஜெட். ஆங்கிலத்தில் பலநூறு கோடிகளில் எடுக்கப்படும் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படங்கள் இன்று கடைகோடி கிராமம்வரை பார்க்கப்படுகின்றன. அவற்றிற்குப் போட்டியாக தமிழில் ஒரு சயின்ஸ் பிக்ஷனை உருவாக்குவது எளிதல்ல. எந்திரன், 2.0 போல மெகா பட்ஜெட்டில் மட்டுமே அது சாத்தியம்.
தமிழில் குறிப்பிடத்தகுந்த சயின்ஸ் பிக்ஷன் முயற்சி என ரவிக்குமாரின் இன்று நேற்று நாளை படத்தை சொல்லலாம். குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட டைம் ட்ராவலிங் கதையான இது, லாபத்தை தந்த போதும், அதே ஜானரில் வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை. குறைந்த பட்ஜெட்டில் கதையம்சம் உள்ள சயின்ஸ் பிக்ஷன் திரைப்படத்தை உருவாக்கும் எண்ணமும், திறனும் கோடம்பாக்க சினிமாவுக்கு குறைவாக உள்ளதையே இது காட்டுகிறது. இந்தியாவை எடுத்துக் கொண்டால், பறக்கும் தட்டு, ஏலியன் இவற்றை வைத்து எடுக்கப்பட்ட முதல் முயற்சி தமிழில் வெளியான கலை அரசி என்பது பலரும் அறியாத செய்தி.
கலை அரசியில் வேற்றுக்கிரகத்திலிருந்து, மனிதர்களைப் போன்ற தோற்றம் கொண்ட இரு ஏலியன்கள் பறக்கும் தட்டில் பூமிக்கு வருவார்கள். அவர்களின் கிரகத்தில் தொழில்நுட்பம் வளர்ந்த அளவிற்கு ஆடல், பாடல் கலைகள் வளர்ச்சி பெற்றிருக்காது. அந்த கலைகளை தங்கள் கிரகத்தில் முன்னெடுப்பதற்காக பூமியைச் சேர்ந்த கலைஞர்களை கடத்திச் செல்ல வேண்டும் என்பது அவர்களின் திட்டம். வாணி என்ற பெண்ணின் பாடலும், நடனமும் ஏலியனுக்குப் பிடித்துப்போக, அவளை கடத்தி, பறக்கும் தட்டில் தங்களது கிரகத்துக்கு கொண்டு செல்வார்கள். வாணியும் அவர்களுக்கு நடனக்கலையை கற்றுத் தருவாள்.
ஏலியன் மறுபடி பூமிக்கு வருகையில் வாணியின் காதலன் பறக்கும் தட்டில் ஏலியனுக்குத் தெரியாமல் ஏறிக்கொண்டு அவர்களின் கிரகத்துக்குச் சென்று, வாணியை மீட்டு வருவான். இந்தக் கதையில் பூமியில் நடக்கும் கதையும் உண்டு. வாணியை காணாமல் அவனது காதலனை போலீஸ் கைது செய்வது, வாணியின் தோற்றத்தில் இருக்கும் வள்ளி தன்னை வாணி என்று சொல்லி வாணியின் வீட்டில் அடைக்கலம் புகுவது என வழக்கமான தமிழ் சினிமா கதை.
இந்தப் படத்தில் வாணியாக பானுமதியும், அவரது காதலனாக எம்ஜி ராமச்சந்திரனும் நடித்திருந்தனர். தட்டு மாதிரி ஏதோ பறக்குது என்று கிராமத்து நபர் சொல்ல, அது வேற்றுக்கிரகவாசி, இப்படித்தான் பறக்கும் தட்டுல போவாங்க என்று எம்ஜி ராமச்சந்திரன் சொல்வார். பறக்கும் தட்டு, ஏலியன் எல்லாம் எங்க ஊர்ல ரொம்பவே சகஜம்ங்கிறது போல் இருக்கும் அவரது பேச்சு.
ஏலியனாக நம்பியார் நடித்திருப்பார். ஏலியனுக்குப் பிரத்யேக உடை வேண்டுமே. அந்தக்காலத்தில் நமக்குத் தெரிந்தது ராஜா காலத்து உடை மட்டுமே. ஏலியன்களுக்கும் அதையே கொடுத்திருப்பார்கள். இதனால், வேற்று கிரகமா இல்லை அண்டை ராஜ்ஜியமா என்ற குழப்பம் ஏற்படும். எம்ஜி ராமச்சந்திரன் வேற்றுகிரகத்துக்கு செல்லும் போது, இன்னொரு எம்ஜி ராமச்சந்திரன் அங்கிருப்பார். அது கோமாளி ஏலியன் எம்ஜிஆர்.
பூமியிலிருந்து வரும் எம்ஜி ராமச்சந்திரனால் பூமியில் நடப்பது போல் வேற்றுகிரகத்தில் நடக்க முடியாது. ஈர்ப்புவிசையில் உள்ள மாறுபாட்டால் ஸ்லோமோஷனில்தான் நடப்பார். அங்கு இயல்பாக நடக்க அதற்கென்று பி[ரத்யேக ஷு உண்டு. இதுபோல் சில விஷயங்களில் அறிவியலை அரைகுறையாக தொட்டுச் சென்றது தவிர, விண்வெளி குறித்தோ, வேற்றுகிரகம், ஏலியன் குறித்தோ கலை அரசி படக்குழு அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. வித்தியாசமான கதைக்களம் இருந்ததால் திரைக்கதையிலும் கோட்டைவிட்டிருந்தனர். படம் பார்த்த அன்றைய ரசிகர்களுக்கு அதுவொரு அரைகுறை மாயாஜாலப் படமாக இருந்தது.
கதை, திரைக்கதையில் ஓட்டைகள் இருந்தாலும், அறிவியலை அரைகுறயாகத் தொட்டிருந்தாலும் இந்தியாவின் முதல் சயின்ஸ் பிக்ஷன் என்ற பெருமை கரை அரசி படத்திற்கே உள்ளது. ஞானமூர்த்தி கலை அரசி படத்தின் கதையை எழுத, காசிலிங்கம் படத்தை இயக்கினார். கே.வி.மகாதேவன் இசையமைத்தார். பல வருடங்கள் தயாரிப்பில் இருந்த கலை அரசி ரசிகர்களுக்கு திருப்தி அளிக்காதபோதும், அதன் கதை காரணமாக இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத சினிமாவாகிப் போனது.