வில்லனை அறிமுகப்படுத்துகையில், வில்லன் எத்தனை மோசமானவன் என்பதை காண்பிக்க, மது, மாது, புகைக்கு நடுவே கவர்ச்சி நடனம் ஒன்றும் ஆடப்படும். அல்லது வில்லனை சந்திக்க ஹீரோ ஹோட்டலுக்கு வருகையில் அங்கு இப்படியொரு நடனம் நடைபெறும். இறுதி கிளைமாக்ஸுக்கு முன்பு இதுபோன்ற கிளப் டான்ஸ் வைப்பது அப்போதைய தமிழ் சினிமா நடைமுறையாகவே இருந்தது.
இவர் பிறந்தது ஆந்திர மாநிலம் குண்டூர். இவர் தெலுங்கர் என்று தான் அனைவரும் நினைத்திருந்தனர். கமலும் ஒருமுறை ஜெயமாலினியிடம் நீங்க தெலுங்கா என்று கேட்டுள்ளார். ஆனால், ஜெயமாலினியின் குடும்பம் தஞ்சாவூரைச் சேர்ந்தது. இவரது மூத்த சகோதரி ஜோதிலட்சுமி. நடனத்தில் வல்லவர். ஜெயமாலினியின் பெரியம்மாவுக்கு (அம்மாவின் அக்கா) குழந்தைகள் இல்லாததால் ஜோதிலட்சுமியை அவருக்கு தத்து கொடுத்தனர். அவர் சினிமாவில் கவர்ச்சி நடனங்கள் ஆடி சம்பாதித்தது, ஜோதிலட்சுமியின் அம்மாவுக்கோ, அவரது குடும்பத்துக்கோ எந்தவகையிலும் உதவவில்லை.
தனது மூத்த மகளைப் போல் கடைக்குட்டி மகளையும் சினிமாவில் நடிக்க வைக்க முயற்சி செய்தார் ஜெயமாலினியின் அம்மா. 1974-ல் சொர்க்கத்தில் திருமணம் படத்தில் ஜெயமாலினி அறிமுகமானார். அதே வருடம் விட்டலாச்சாரியாவின் தெலுங்குப் படத்தில் (Aadadani Adrustam) ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடினார். முதல் படத்திலேயே கவர்ச்சி நடனத்தில் ஜெயமாலினி கலக்கினார். அதனைத் தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் அவருக்கு வந்தன.
1978-ல் வெளியான ஜகன்மோகினி தெலுங்குப் படத்தை விட்டலாச்சாரியா தயாரித்து, இயக்கினார். இது 1951-ல் இதே பெயரில் கன்னடத்தில் வெளியான படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். ஜகன்மோகினியை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். ஜெயமாலினியின் கவர்ச்சி நடிப்பும், நடனமும், பேய்களின் அட்டகாசமும் ஜகன்மோகினியை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கியது. அதன் பிறகு ஐந்து மொழிகளில் நிற்காமல் நடனமாடத் தொடங்கினார் ஜெயமாலினி.
என்டிஆருடன் ஒரு படப்பிடிப்பு. கூட்டம் அம்முகிறது. இரண்டு நாளா இங்கதான் ஷுட்டிங் நடத்துறோம். இப்படி கூட்டமில்லை. இன்னைக்கு நீ வர்றேன்னு தெரிஞ்சதும் இவ்வளவு பெரிய கூட்டம் சேர்ந்திடுச்சி என்று என்டிஆர் ஜெயமாலினியிடம் கூறியுள்ளார். அந்தளவு அன்றைக்கு ஜெயமாலினிக்கு ரசிகர்கள் மத்தியில் க்ரேஸ் இருந்தது.
பிற கவர்ச்சி நடிகைகளுக்கு ஜெயமாலினி போல் உடை உடுத்த வேண்டும், ஆட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. சில்க் ஸ்மிதா தன்னை ஒப்பந்தம் செய்யவரும் தயாரிப்பாளர்களிடம், எனக்கு சேலை வேண்டாம், ஜெயமாலினியைப் போல் மேலே ஒரு உடை, கீழே ஒரு உடை என்று தந்தால் போதும் என்று சொல்வதுண்டு. அந்தளவு ஜெயமாலினியின் இடை அன்று பிரசித்தி பெற்றிருந்தது.
அந்தக்காலத்தில் ஸ்மார்ட்போன் போன்ற வசதிகள் இல்லை. படம் பார்க்க வேண்டும் என்றால் திரையரங்குக்குதான் செல்ல வேண்டும். ஐந்து மொழிகளில் பறந்து பறந்து ஆடிக்கொண்டிருந்தவருக்கு தனது படங்களைப் பார்க்கக்கூட நேரம் இருந்ததில்லை. பார்க்க நேரம் கிடைத்தபோது தனக்கு அதிர்ச்சியாக இருந்ததாக ஜெயமாலினி பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் இடுப்பு அசைவை மட்டுமே போகஸ் செய்து ஓவர் கவர்ச்சியாக காட்டியிருக்கிறார்கள். இதனை புரிந்து கொள்கிற தொழில்நுட்ப அறிவோ, சுதந்திரமோ அன்று எங்களுக்கு இருந்ததில்லை. காசு கொடுத்துவிட்டால் அவர்கள் சொல்கிற உடையணிந்து, அவர்கள் சொல்கிறபடி ஆட வேண்டும். மறுத்தால் என்னுடைய இடத்தில் வேறொரு நடிகை அதே நடனத்தை ஆடி பணத்தை வாங்கிச் செல்வார். எனக்கு இன்று கிடைத்திருக்கும் புகழும் வேறொரு நடிகைக்கு சென்றிருக்கும் என யதார்த்தமாக பேசுகிறார் ஜெயமாலினி.
திரையில் கவர்ச்சியாக நடனமாடினாலும் திரைத்துறையில் நல்ல பெண் என்ற பெயரை ஒருபோதும் இழந்ததில்லை என்பதை இப்போதும் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். என்னுடன் நடித்தவர்கள் எல்லோரும் தொழில்பக்தி கொண்டவர்கள். திரையில் தான் அவர்கள் வில்லன்கள். நிஜத்தில் அவர்களும் அப்பா, மகன், கணவன் என பல பொறுப்புகள் உடையவர்கள் தான். ஜெயமாலினி உச்சத்தில் இருந்த போதே அவர் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்று அவரது அம்மா விரும்பினார். சினிமா குடும்பத்தில் இப்படி யோசிப்பவர்கள் குறைவு.
ஜெயமாலினியை திருமணம் செய்ய திரைத்துறையில் உள்ள பலரும் விருப்பம் தெரிவித்தனர். அவர்களை அவர் நிராகரித்தார். சினிமாவுக்கு சம்பந்தமில்லாத அதேநேரம் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்த ஒருவரே தனக்கு சரியான வாழ்க்கைத் துணைவராக இருப்பார் என நினைத்தார். அதன்படி அமைந்தவர் தான் பார்த்திபன். ஜெயமாலினியின் அண்ணனின் நண்பர். காவல் ஆய்வாளர். ஜெயமாலினியை திரைக்கு வெளியே நன்கு அறிந்தவர். அவரது கடவுள் பக்தி, சினிமாவுக்கு வெளியே அவர் உடை உடுத்தும் விதம், அவரது குணம் என அனைத்தும் அறிந்தவர். இவர்களின் திருமணம் 1994-ல் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
அத்துடன் தனது வாழ்க்கை வரலாறை புத்தகமாகக் கொண்டுவரும் விருப்பமும் அவருக்கு உள்ளது. தனது குடும்ப வாழ்க்கையை குறித்து பேசியிருக்கும் அவர், தனது கணவர் நடனத்தில் ஆர்வம் உள்ளவர். வீட்டில் சந்தோசமாக இருக்கும் தருணங்களில் ஆட்டமும் பாட்டும் தூள் கிளப்பும். என்னுடைய கணவரும் நன்றாக நடனம் ஆடுவார் என தெரிவித்திருந்தார்.