சிவாஜி, எம்ஜிஆர் படங்கள் அதிக நாள்கள் ஓடும், லாபம் தரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சிவாஜியாவது வருடத்துக்கு நான்கைந்து படங்கள் நடிப்பார். எம்ஜிஆர் இரண்டுக்கு மேல் போனதில்லை. இன்று போல் அன்று ஒரு படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிடும் வழக்கமும் இல்லை. ஆக, இருக்கிற பலநூறு திரையரங்குகளுக்கு வருடம் முழுக்க தீனிபோட இவை போதாது. அந்த இடத்தை நிரப்பியவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். யார் கால்ஷீட் கேட்டாலும் மறுப்பதில்லை. புதுமுக இயக்குனரா, புதிய தயாரிப்பாளரா கவலையில்லை. அவர்கள் கொடுக்கும் காசோலை திரும்பி வந்தாலும் ஏன் என்று கேட்பதில்லை. காசு இருந்தால் ஏன் திரும்பி வரப்போகிறது, பாவம் பிழைத்துப் போகட்டும் என்று இருந்துவிடுவார். வருடத்திற்கு அவரது நடிப்பில் பத்துக்கும் மேல் திரைப்படங்கள் வெளியாகும்.
ஆனையடி அப்பள வியாபாரி அப்பாசாமி, இவரது மனைவி பாக்கியம். இருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. தாண்டவத்திற்கும், அவரது மனைவிக்கும் பத்து குழந்தைகள். அதில் மூத்தவன் சுப்பு. சப்பாத்தி சப்பாத்திதான் ரொட்டி ரொட்டிதான். சப்பாத்தி ரொட்டியாக முடியாது, ரொட்டி சப்பாத்தியாக முடியாது என்று ரம்ப தத்துவம் பேசி திரிகிறவன். ரவி சட்டம் படிக்கும் அனாதை. காலையில் பேப்பர் போட்டு, மாலையில் டியூசன் எடுத்து ஒரேநேரத்தில் உழைத்துப் படிக்கும் நல்லவன். ராஜவேலு நேர்மையான மனிதர். கம்பெனி பணம் இரண்டு லட்சத்துடன் கொல்கத்தா செல்கையில் பணத்தை யாரோ திருடிக்கொள்ள, அதன் காரணமாக சித்தசுவாதீனம் போய்விடும். அவரது மகள் காஞ்சனா அவரை பார்த்துக் கொள்ள ஒரு நர்ஸை நியமித்திருப்பாள்.
அப்பா சினிமாவுக்கு பணம் தரவில்லை என சுப்பு, வீட்டிலிருக்கும் அலங்கார நாற்காலியை ஏலக்கடைக்காரருக்கு விற்றுவிடுவான். அதனை, 60 பொண்டாட்டிகளும், 136 குழந்தைகளும் கொண்ட ஆற்காடு நவாபின் நாற்காலி என்று சொல்லி அப்பாசாமியின் தலையில் கட்டுவான் கடைக்காரன். அந்த நாற்காலியில் அமர்ந்த நவாபுக்கு 136 பிள்ளைகள் என்றால், தனக்கு ஒன்று பிறக்காதா என்ற நப்பாசை. நாற்காலி காணாமல் போனதும் தாண்டவத்திற்கு பதட்டமாகிவிடும். ஏலக்கடைக்காரரிடம் சென்று விசாரிப்பார்.
அப்பாசாமி நாற்காலியை வாங்கியது தெரிய வரும். அந்த நாற்காலியை வெள்ளைக்காரன் ஒருவனிடம் பத்தாயிரத்துக்கு விலை பேசியிருந்தேனே என புலம்பும் அவர், நாற்காலிக்காகவும், வாடகைப் பாக்கி காரணமாக வீட்டை காலி பண்ண வேண்டிய நிர்ப்பந்தத்தாலும் ஒரு வேலை செய்வார். மலையாள சாமியார் போல் வேஷமிட்டு, அப்பாசாமியின் வீட்டிற்குப் போய், பத்து குழந்தைகள் இந்த வீட்டில் துள்ளி விளையாடினால்தான் உமக்கு குழந்தை பிறக்கும் என்று சொல்லிவிட்டு வருவார்.
அப்பாசாமியும் பத்து பிள்ளைகள் உள்ள குடும்பத்திற்கு குறைந்த வாடகைக்கு வீடு வாடகைக்கு விடப்படும் என விளம்பரம் தர, தாண்டவம் குடும்பத்தோடு அங்கு குடியேற திட்டமிடுவார். ஆனால், அவரது மூத்த மகன் சுப்பு, நாற்காலி விற்ற தகராறில் வீட்டைவிட்டு சென்றுவிட, பத்துக்கு ஒன்று குறையுதே என, வாடகை வீடு தேடி வரும் ரவியை தனது மூத்த மகனாக்கி, அப்பாசாமியின் வீட்டில் குடியேறுவார். தனது தந்தையிடம் பணத்தை திருடியது ரவியாக இருக்கலாம் என சந்தேகிக்கும் காஞ்சனாவும், அப்பாசாமியின் வீட்டில், தாண்டவத்தின் தங்கை மகள் என்று சொல்லி குடியேறுவாள். பணத்தை திருடியது ரவி அல்ல என்பது தெரிய வரும். பிறகு அந்த சந்தேகம் அப்பாசாமியின் மீது திரும்பும். ஆனால், அவரும் இல்லை. கடைசியில் அது சுப்புவாக இருக்குமோ என்று அவன் மீது சந்தேகம் எழும். ஆனால், அவனும் இல்லை. இறுதியில் நவாப் நாற்காலியின் மர்மமும், பணத்தை திருடியது யார் என்ற ரகசியமும் தெரியவரும்.
முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து நவாப் நாற்காலியை எடுத்திருந்தனர். தாண்டவம், அப்பாசாமி, ராஜவேலு ஆகியோரின் வீடுகள்தான் பிரதான லொகேஷன். வீடுகூட இல்லை, வரவேற்பறை மட்டும்தான். கதாபாத்திரங்கள் கூடத்தில் வந்து பேசிவிட்டு செல்வார்கள். அப்பாசாமியாக வி.கே.ராமசாமியும், அவரது மனைவி பாக்யமாக எஸ்.என்.பார்வதியும், தாண்டவமாக சகஸ்ரநாமமும், அவரது மனைவியாக காந்திமதியும், அவர்களின் மூத்த பிள்ளை சுப்புவாக நாகேஷும் நடித்திருந்தனர். படம் நெடுக வந்தாலும் காஞ்சனாவாக நடித்த லட்சுமியை டைட்டிலில் கௌரவ நடிகை என்று குறிப்பிட்டிருந்தனர்.
ரவியாக ஜெய்சங்கர். நர்ஸ் கிறிஸ்டியாக ரமா பிரபா. ராஜவேலுவாக பி.எஸ்.ரகவனும், அவரது முதலாளி நேசமணி பொன்னையாவாக ஏ.ஆர்.சீனிவாசனும் நடித்திருந்தனர். விசிட்டிங் கார்டைப் பார்த்து, நேசமணி பொன்னையா என்ற பெயரை ரமா பிரபா, நாசமா நீ போனியா என்று வாசிப்பார். இந்த காமெடியை 20 வருடங்கள் கழித்து, 1992 இல் வெளிவந்த ரஜினியின் அண்ணாமலை படத்தில் ஜனகராஜ் குஷ்புவிடம் பேசுவது போல் வைத்திருந்தனர்.
படத்தில் சகஸ்ரநாமம், நாகேஷ், காந்திமதி மூவரும்தான் பிரதான நடிகர்கள். மூவருமே கலக்கியிருந்தனர். மற்றவர்களும் தங்கள் பங்குக்கு ஜமாய்த்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். குறைந்த முதலீட்டில் இன்றும் பார்த்து சிரிக்கிற ஒரு படத்தை அன்றே தந்திருந்தார் இயக்குனர் சி.வி.ராஜேந்திரன். 1972 மார்ச் 3 வெளியான நவாப் நாற்காலி தற்போது 51 வது வருடத்தை நிறைவு செய்கிறது.