பொங்கல் பண்டிகைக்கு முன்னணி நட்சத்திரங்களின் படங்களை வெளியிடுவது தொன்றுதொட்டு இருந்து வரும் நடைமுறை. இன்று விஜய்யின் வாரிசா, அஜித்தின் துணிவா எந்தப் படம் வெல்லும் என்ற போட்டி நிலவுகிறது. இரண்டுமே பொங்கல் திருநாளுக்கு திரைக்கு வரும் படங்கள். அந்தக் காலத்தில் இந்தப் போட்டி சிவாஜி படமா இல்லை எம்ஜிஆர் படமா என்றிருந்தது.
1965 ஆம் ஆண்டு பொங்கலையொட்டி எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளையும், சிவாஜியின் பழநியும் வெளியாயின. அவற்றுடன் புதுமுக நடிகரின் இரவும் பகலும் திரைப்படம் வெளியானது. இந்தப் போட்டியில் எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் ரசிகர்களை கவர்ந்து முன்னிலை பெற்றது. பழநி விவசாயம் சார்ந்த கதை. ஹீரோயிசம் தவிர்த்த படமாக இருந்தும் சுமாரான வெற்றியை பெற்றது. இதற்கு நடுவில் அறிமுக நடிகநின் படமும் வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்து கொடுத்தது. 1965 ஜனவரி 14 பொங்கலுக்கு வெளியான இரவும் பகலும் படத்தில் அறிமுகமான அந்த நடிகர், ஜெய்சங்கர்.
சுப்பிரமணியம் சங்கராக நாடகங்களில் நடித்து வந்தவரை ஜெய்சங்கர் என்ற புதுப்பெயருடன் திரையில் அறிமுகப்படுத்தியவர் ஜோசப் தளியத். இவரது தந்தை திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். அவரது விருப்பத்துக்கு மாறாக சென்னை வந்து உதவி இயக்குனராக பணியாற்றினார் ஜோசப் தளியத். கலை இயக்குனரும், நியூட்டன் ஸ்டுடியோவின் பங்குதாரருமான எஃப்.நாகூருடன் இணைந்து சிட்டாடல் ஃபிலிம் கார்ப்பரேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, 1948 இல் ஞான சுந்தரி என்ற படத்தை தயாரித்து, இயக்கி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பல படங்களை தயாரித்து, இயக்கினார். பிறகு சிட்டாடல் ஃபிலிம் கார்ப்பரேஷன் சிட்டாடல் ஸ்டுடியோவாக மாறியது.
அது என்ன சிட்டாடல் என்று தோன்றும். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த நாவலாசிரியர் ஏ.ஜே.குரோனின் 1937 இல் தி சிட்டாடல் என்ற நாவலை எழுதினார். அந்த நாவல் மிகவும் பிடித்துப்போக, அதையே தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு பெயராக சூட்டினார் தளியத். 1964 இல் அந்த நாவலை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டார். ஆனால், நாகூர் ஒப்புக் கொள்ளவில்லை. தி சிட்டாடல் நாவல் திரைப்படத்துக்கு சரியாக வராது என்று கூற, டி.என்.பாலு எழுதிய கதையை தேர்வு செய்தனர்.
க்ரைம் த்ரில்லரான அந்தக் கதையின் லோ பட்ஜெட் காரணமாக புதுமுகத்தை நாயகனாக்குவது என ஜெய்சங்கரை தேர்வு செய்தனர். அப்போது நாடகங்களில் பிரபலமாக நடித்துக் கொண்டிருந்த தேங்காய் சீனிவாசனை இன்னொரு பிரதான வேடத்துக்கு ஒப்பந்தம் செய்தனர். அப்போதெல்லாம், ஒரு படம் தொடங்கும் போதே விநியோகஸ்தர்கள் முன்பணம் தந்து படத்தை புக் செய்வார்கள். அதனால், விநியோகஸ்தர்களின் கருத்துக்களும் படத்தின் கதையில், நட்சத்திர தேர்வில் பிரபதிபலிக்கும். ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்களா என்று அவர்கள் அதிருப்தியடைய, தேங்காய் சீனிவாசனின் பகுதிகள் நீக்கப்பட்டன. ஒரு சிறந்த நடிகரை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு தளியத்துக்கு பறிபோனது. அதே வருடம் டிசம்பரில் வெளியான ஒரு விரல் த்ரில்லர் படத்தில் தேங்காய் சீனிவாசன் அறிமுகமானார்.
இரவும் பகலும் படத்தில் பணக்கார கல்லூரி மாணவராக ஜெய்சங்கர் நடித்தார். அவரது விதவைத் தாயாக நடித்தவர் பண்டரிபாய். ஜெய்சங்கர் தன்னுடன் படிக்கும் சி.வசந்தாவை காதலிப்பார். வசந்தாவுக்கும் இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் ஜெய்சங்கரின் வீட்டை சிலர் கொள்ளையடிப்பார்கள். போலீசில் புகார் செய்யலாம் என ஜெய்சங்கர் சொல்லும்போது, அதனை அம்மா பண்டரிபாய் தடுப்பார். ஏன் அவர் போலீசுக்கு போக வேண்டாம் என்றார், அதன் பின்னே உள்ள ரகசியம் என்ன, என்று படம் த்ரில்லர் ஜானரில் பயணித்து ரசிகர்களை கவர்ந்தது. படமும் வெற்றி பெற்றது.