எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி மூவரும் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த நேரத்தில், ஜெய்சங்கர் தனக்கென ஒரு பாணியை வகுத்து தொடர்ச்சியாக படங்கள் நடித்து வந்தார். அந்த காலகட்டத்தில் திரைத்துறை தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது ஜெய்சங்கரின் படங்கள். வெள்ளிக்கிழமை நாயகன் என்று அழைக்கும் அளவுக்கு அவர் நடித்தப் படங்கள் வாராவாரம் வெளியாவது போல் வெளியாகும். அந்தக்கதை தனிக்கதை. விரிவாக பார்க்க வேண்டியது.
ஜெய்சங்கர் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் பாதிப்பில் சிஐடியாக பல படங்களில் நடித்தார். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்றொரு பெயரும் அவருக்கு உண்டு. மாடர்ன் தியேட்டர்ஸ் அவரை வைத்து இவ்வகை படங்களை தொடர்ச்சியாக எடுத்தது. பெரும்பாலும் இவை மேலே நாட்டுப் படங்களின் தழுவலாக இருக்கும். அப்படி, பிரெஞ்ச் - இத்தாலி தயாரிப்பான Furia à Bahia pour OSS 117 (யுஎஸ்ஸில் இப்படம் OSS 117–Mission for a Killer என்ற பெயரில் வெளியானது) படத்தைத் தழுவி தமிழில் சிஐடி சங்கர் படத்தை எடுத்தனர். இதில் ஜெய்சங்கர் சிஐடியாகவும், தேங்காய் சீனிவாசன் அவரது உதவியாளருமாக வருவார்கள். இதில் ஜெய்சங்கரை காதலிக்கும் வித்யா என்ற கதாபாத்திரத்தில் சகுந்தலா நடித்தார். இந்தப் படத்துக்குப் பிறகே அவர் சிஐடி சகுந்தலா என்று அழைக்கப்பட்டார்.
சிஐடி சங்கர் படத்தின் ஆரம்பத்தில் தனுவைப் போன்ற பெண், மாலையுடன் காரில் வரும் அரசியல்வாதியை நோக்கிச் செல்வார். அவருக்கு அவள் மாலை அணிவித்ததும் குண்டு வெடித்து அந்த அரசியல்வாதி இறந்து போவார். அச்சு அசலாக ராஜீவ் காந்தி எப்படி கொலை செய்யப்பட்டாரோ அப்படி இந்தப் படத்தின் காட்சி அமைந்திருப்பது ஆச்சரியம்.
இந்தக் காட்சி படத்தை இயக்கிய ஆர்.சுந்தரத்தின் கற்பனையோ, திரைக்கதை, வசனம் எழுதிய ஏ.எல்.நாராயணனின் கற்பனையோ அல்ல. OSS 117–Mission for a Killer படத்தில் வரும் காட்சிதான் இது. மேற்கத்திய நாடுகளில் மாலை அணிவிக்கிற வழக்கம் இல்லை, அங்கு பூங்கொத்து தான். பெண் ஒருத்தி பூங்கொத்துடன் சென்று, காரில் வரும் ராணுவ சீருடை அணிந்த தலைவரிடம் கொடுக்க, பூங்கொத்தில் மறைத்து வைத்திருக்கும் குண்டு வெடிக்கும். தமிழ்நாட்டில் பூங்கொத்து இல்லை. அதனால் அதனை மாலையாக்கினார்கள். என்றாலும் ராஜீவைக் கொன்ற தனுவைப் போலவே அந்தப் பெண்ணிற்கு மாலையை கையில் கொடுத்தது ஆச்சரியமான ஒற்றுமை.