பஞ்சதந்திரம் ஐந்து நண்பர்களைப் பற்றியது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஒவ்வொருவரும் ஒரு பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள். திருமணமானவர்கள். அதில் கமலின் மனைவி சிம்ரன் கமல் மீதான சந்தேகத்தால் அவரை பிரிந்திருப்பார். அவரது பிரிவுத் துயரை மாற்ற, நண்பர்கள் பொய் சொல்லி அவரை பெங்களூரு வரவழைத்து, கால் கேர்ள் ரம்யா கிருஷ்ணனுடன் அனுப்பி வைப்பார்கள். ஆனால், கமலுக்கு அதில் விருப்பமிருக்காது. அதன் பிறகு நடக்கும் சண்டையில் ரம்யா கிருஷ்ணன் கொல்லப்படுவார். நண்பர்கள் அவரது உடலை மறைக்க முயல்வார்கள்.
ரம்யா கிருஷ்ணன் சாகவில்லை, அவருக்குப் பதில் அவர்கள் எடுத்துச் சென்ற பிணம் இன்னொரு பெண்ணினுடையது. அவளை கொலை செய்தது யார், எதற்காக இந்த கொலை என்பது நகைச்சுவையுடன் விவரிக்கப்படும். கிரேஸி மோகனின் வசனத்தில் படத்தில் நடித்த கமல், ஜெயராம், யூகிசேது, ஸ்ரீமன், ரமேஷ் அரவிந்த், நாகேஷ் என சகலரும் கலக்கி எடுத்திருப்பார்கள். ஒரேயொரு காட்சியில் வரும் தேவயானியும் நம்மை சிரிக்க வைப்பார். இந்தப் படம் 1998 இல் ஹாலிவுட்டில் வெளியான வெரி பேட் திங்க்ஸ் படத்தின் காப்பி என்ற குற்றச்சாட்டு இப்போதும் உள்ளது.
வெரி பேட் திங்க்ஸ் படத்தில் லாஸ் வேகாஸில் பேச்சிலர் பார்ட்டி நடக்கும். ஐந்து நண்பர்கள் கலந்து கொள்வார்கள். போதையின் உச்சத்தில் ஸ்ட்ரிப்பர் ஒருத்தியை வரவழைப்பார்கள். நண்பர்களில் ஒருவன் அவளுடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்துக் கொள்கையில் எதிர்பாராதவிதமாக அவள் இறந்து போவாள். சத்தம் கேட்டு செக்யூரிட்டி வருவார். வாக்குவாதத்தின் நடுவில் அவரையும் கொன்றுவிடுவார்கள். இரண்டு பிணங்களையும் பாலைவனத்தில் குழிதோண்டி புதைப்பார்கள். அதன் பிறகு நண்பர்களுக்குள் ஏற்படும் குழப்பத்தில் ஒவ்வொருவராக கொல்லப்படுவார்கள்.
பிளாக் க்யூமர் திரைப்படமான இதனை காப்பி செய்து பஞ்சதந்திரம் எடுக்கப்பட்டதாக கூறுவார்கள். ஐந்து நண்பர்கள் பார்ட்டி பண்ணுகிறார்கள். அதில் ஒரு பெண் இறந்து போகிறாள் என்ற ஒரு வரி இரண்டு படங்களுக்கும் பொதுவானது. ஆனால், இதன் பிறகு வருகிற அனைத்தும் மாறுபட்டது. ஹாலிவுட் படத்தில் கமல் இன்ஸ்பயராகி பஞ்சதந்திரம் கதையை எழுதியிருக்க வாய்ப்புள்ளது. ஆனால், அது இன்ஸ்பயராக மட்டுமே இருந்திருக்கும். காரணம் அடிப்படை தவிர்த்து படத்தின் 99 சதவீத காட்சிகள் மாறுபட்டவை.
இது ஒருபுறம் இருக்க, பஞ்சதந்திரத்தை ஹாலிவுட்டில் காப்பி செய்து படம் எடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு ஓடுகிறது. அந்தப் படம் ஸ்கார்லெட் ஜான்சன் நடித்த ரஃப் நைட். 2017 இல் வெளியானது. இதில் 5 தோழிகள் மையாமியில் பார்ட்டி கொண்டாடுகிறார்கள். கோகைய்ன் போதையில் ஆண் ஸ்ட்ரிப்பர் ஒருவனை வரவழைக்கிறார்கள். எதிர்பாராதவிதமாக அவனுடன் சண்டை ஏற்படுகிறது. அதில் அவன் கொல்லப்படுகிறான். பிணத்தை கடலில் வீச தோழிகள் திட்டமிடுகிறார்கள். இதன் நடுவில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. செத்துப் போனவன் உண்மையான ஸ்ட்ரிப்பர் அல்ல என்பது தெரிய வருகிறது. அவன் ஒரு கிரிமினல். கடைசியில் பிரச்சனைகளிலிருந்து தோழிகள் எப்படி மீண்டார்கள் என்பது கதை. இதனை பஞ்சதந்திரத்தின் நகல் என்று சொல்ல முடியுமா?
ஐந்து நண்பர்களை வைத்து வெரி பேட் திங்க்ஸ் படத்தை இயக்கிய லூசியா அனிலோ இயக்கிய படம்தான் ரஃப் நைட்டும். ஐந்து நண்பர்கள் - போதை - ஸ்ட்ரிப்பர் - கொலை என்ற கதையை அவர் பஞ்சதந்திரத்துக்கு முன்பே எடுத்துள்ளார். முதலில் ஆண்களை வைத்து எடுத்தவர் பிறகு பெண்களை வைத்து எடுத்துள்ளார். அவரைப் போய் பஞ்சதந்திரத்தை காப்பியடித்தார் என்று சொல்ல முடியுமா?