ஹீரோ கேரக்டர் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகாத நிலையில் மீண்டும் முழு நேர காமெடியனாக சந்தானம் மாறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சின்னத்திரையில் காமெடியனாக இருந்து சினிமாவிலும் காமெடியனாக அறிமுகம் ஆனவர் சந்தானம். இவர் அடிக்கும் டைமிங் காமெடிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. கவுண்டமணியை சந்தானம் இமிடேட் செய்வதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்கள் சந்தானம் காமெடிக்காகவே வரவேற்பை பெற்றன. ரசிகர்களின் பேராதரவைத் தொடர்ந்து கண்ணா லட்டு திங்க ஆசையா, அறை எண் 305-ல் கடவுள் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக மாறினார் சந்தானம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, சக்கபோடுபோடு ராஜா படங்களில் சந்தானம் ஆக்சன் ஹீரோவாக அடுத்த கட்டத்திற்கு சென்றார். ஹீரோவாக சந்தானம் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. விக்ரம் கதாசிரியர் ரத்னகுமார் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குலுகுலு படமும் தோல்வியில் முடிந்தது. இதனால் அடுத்ததாக மீண்டும் காமெடியனாக மாறலாமா என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் சந்தானம். காமெடி ஆக்டராக சந்தானம் தொடர்ந்திருந்தால் இப்போது அவர் இருக்கும் இடமே வேறு என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அடுத்ததாக காமெடி தூக்கலாக இருக்கும் தனது பழைய நடிப்புக்கு ஏற்ற படங்களை தேர்வு செய்யப் போகிறாராம் சந்தானம்.