கர்நாடக மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து தமிழக மக்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் கடந்து வந்த பாதை மிக கடினமானது. திரைத்துறையில் ஜெயிக்க வேண்டும் என்றால் பளபளப்புடன் கூடிய தேஜசான உடல் தோற்றத்தோடு, வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிற ஃபார்முலாவையே மாற்றியவர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.
அபூர்வ ராகங்கள் திரைப்படத்திற்காக நடைபெற்ற நடிகர்கள் தேர்வில் கலந்து கொள்ளச் சென்ற ரஜினி சிவாஜி போல் நடித்துக் காட்டித் தான் இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் நடிக்க வாய்ப்பு பெற்றுள்ளார். கே.பாலச்சந்திர் அறிமுகம் செய்திருந்தாலும், இயக்குநர் முத்துராமன் இயக்கத்தில் தான் ரஜினிகாந்த் அதிக படங்களில் நடித்துள்ளார்.
குரும்புடன் அவரின் ஸ்டைலுக்காவே சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு ரசிகர்கள். பாலிவுட்டின் ஸ்டைல் மன்னன் ஷாருக்கானே ஒரு முறை சொல்லியிருக்கிறார் ரஜினியின் ஸ்டைலை அவரைத் தவிர யாராலும் செய்ய முடியாது என்று. அதனால் தான் அவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ரஜினி ரசிகராக லுங்கி டான்ஸ் ஆடியிருப்பார் ஷாருக்கான்.
ரஜினியின் குழந்தை தனமான நகைச்சுவை நடிப்புக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயே ரசிகர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்காளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமல்ல… ஆங்கிலத்திலும் நடித்துள்ளார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடித்த பிளட்ஸ்டோன் ஆங்கில திரைப்படம் 1988 –ல் வெளியானது.