இன்று பிரசாந்தின் 49 வது பிறந்தநாள். தமிழ் சினிமாவில், கடந்த 40 ஆண்டுகால வாரிசுகளின் ஆதிக்கத்தில், சினிமாவுக்கான அனைத்து கலைகளையும் முறைப்படி கற்று களம் இறங்கிய நடிகர் பிரசாந்த். 1900 நவம்பரில் வெளியான வைகாசி பொறந்தாச்சி படத்தில் பிரசாந்த் அறிமுகமானார். அப்போது அவரது வயது 17. மகனை சினிமாவில் நாயகனாகக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கராத்தே, நடனம், குதிரையேற்றம், ஜிம்னாஸ்டிக் என அனைத்தையும் தியாகராஜன் கற்றுத் தந்திருந்தார். வைகாசி பொறந்தாச்சி வெளியாகும் போது தியாகராஜன் குறிப்பிடத்தகுந்த ஆக்ஷன் ஹீரோவாக இருந்தார். அவர் படங்கள் திரையரங்கில் நான்குவாரங்கள் தாக்குப் பிடிக்கும் மார்க்கெட்டை பெற்றிருந்தார். சில படங்கள் 100 நாள்கள் ஓடின. பிரசாந்துக்காக தியாகராஜன் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
வைகாசி பொறந்தாச்சி ஒரு இன்ஸ்டன்ட் ஹிட் திரைப்படம். படத்தின் கதை எளிமையானது. ஏழையான நாயகன், திமிர் பிடித்த பணக்கார நாயகி. முதலில் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் மோதல். ஹீரோயினின் திமிரை ஹீரோ அடக்க, இருவருக்குள்ளும் காதல் பற்றிக் கொள்ளும். ஹீரோயினின் பணக்கார அப்பா தான் வில்லன். சிலபல சண்டைகளுக்குப் பிறகு ஹீரோவும், ஹீரோயினும் இணைய, சுபம்.
ஒருசில படங்களுக்கு கதாசிரியராக இருந்த ராதாபாரதி வைகாசி பொறந்தாச்சி படத்தை இயக்கியிருந்தார். தேவா இசை. அவரது மூன்றாவது படம் இது. இந்தப் படத்துக்காக தனது ஆர்கெஸ்ட்ராவுடன் தயாரிப்பாளர் கே.பிரபாகரனின் அலுவலகத்துக்கு சென்று ட்யூன் போட்டு காட்டியிருக்கிறார். முதலில் ஒரு டூயட். பத்தே நிமிடத்தில் தேவா கம்போஸ் செய்து காட்ட, தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சி. காலை 10.30 க்கு தொடங்கிய கம்போஸிங் மதியம் 2 மணிக்கு முடிந்த போது படத்துக்கான 7 பாடல்களும் தயாராகியிருந்தது. இந்தப் படம் தான் தேவாவுக்கு பெயர் வாங்கித் தந்த முதல் படம்.
பள்ளிக்கூடத்து குறும்பை இயக்குனர் ராதாபாரதி படத்தில் சிறப்பாக கொண்டு வந்திருந்தார். 'பள்ளிக்கூடம் போகாமலே...', 'பப்பரக்கிற பரபரக்கிற பப்பாளி பழமே...', 'இஞ்சி இடுப்பழகி...' போன்ற பாடல்கள் அதற்கு உதவி செய்தன. 'தண்ணிக்குடம் எடுத்து...' பாடல் அன்றைய புகழ்பெற்ற ஈவ்டீஸிங் பாடல். மெலடிக்கு, 'சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது...', 'நீலக்குயிலே நீலக்குயிலே...', சோகத்துக்கு 'கரிசல் காட்டு...' என்ற யேசுதாஸ் பாடல். கிளைமாக்ஸுக்கு, 'ஆத்தா உன் கோவிலிலே...' ஆக்ரோஷப்பாடல் என இசைக்கதம்பம் கச்சிதமாக அமைந்ததில் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இன்னொரு காரணம் நாயகியாக அறிமுகமான காவேரி. அவரது ஹேர்ஸ்டைலும், நடிப்பும் முதல் படத்திலேயே பேசப்பட்டது. விஜயகாந்தின் சுழன்று காலைத்தூக்கி அடிக்கும் சண்டை முறையை இதில் பிரசாந்த் அருமையாக செய்திருந்தார். படத்தின் தயாரிப்பாளர் கே.பிரபாகரனே வில்லனாகவும் நடித்தார். இறுதிக்காட்சியில் காதலர்களை பிரிக்க அவர் முயல, அவரை தடுத்து நிறுத்தும்விதமாக நாயகி - கதைப்படி அவரது மகள் - உடைகளை களைந்து வீசுவார். இந்த சென்டிமெண்ட் படத்தில் வொர்க் அவுட்டாகி படம் வெள்ளிவிழா கண்டது.
முதல் படம் வெள்ளிவிழா. அடுத்த மலையாளப் படம் பெருந்தச்சன், தேசிய விருது பெற்றது. அதையடுத்து பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள், ஆர்.கே.செல்வமணியின் செம்பருத்தி என தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பிரசாந்தின் வளர்ச்சி ஜெட் வேகத்தில் இருந்தது. செம்பருத்தி, ரோஜா அறிமுகமான படம். பிரசாந்த், ரோஜா கெமிஸ்ட்ரியை பார்க்க ரசிகர்கள் பெருமளவு திரையரங்கில் திரண்டனர்.
கண்ணெதிரே தோன்றினாள், பூமகள் ஊர்வலம், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன் என்று தொண்ணூறுகளின் இறுதியிலும் பிரசாந்தின் மார்க்கெட் நன்றாகவே இருந்தது. இதில் கண்ணெதிரே தோன்றினாள். மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பிரசாந்தின் கரியர் சறுக்க ஆரம்பித்தது 2005-ல் நடந்த அவரது திருமணத்துக்குப் பிறகு. படங்கள் குறைந்தன. 2006-க்குப் பிறகு 2011-ல் தான் பிரசாந்த் நடிப்பில் படங்கள் வந்தன. அதற்குள் அஜித், விஜய் உள்பட பலரும் இன்டஸ்ட்ரியையும், ரசிகர்களையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.