இன்று நகைச்சுவை திலகம் கவுண்டமணியின் பிறந்தநாள். தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவை நடிகர்களுக்கு தனியிடம் உண்டு. கலைவாணர் தொடங்கி வடிவேலுவரை எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் வந்து போயிருக்கிறார்கள். அவர்களில் எவர்கிரீனாக நினைவில் போற்றப்படுகிறவர்களும், திரையில் பார்க்கப்படுகிறவர்களும் சிலர் தான். அவர்களில் கவுண்டமணி முக்கியமானவர்.
கவுண்டமணியின் தனித்தன்மையாக 3 விஷயங்களைச் சொல்லலாம். முதலாவதாக அவர் அதிகமும் விளிம்புநிலை கதாபாத்திரங்களில் நடித்தார். வெட்டியான், பிச்சைக்காரர், பூம்பூம் மாட்டுக்காரர், ஈயம் பூசுகிறவர், தையல்காரர், நரிக்குறவர் என அடித்தட்டு மக்களை பிரதிநிதிப்படுத்தும் வேடங்களில் நடித்ததால் கடைகோடி ரசிகர்கள் வரை அவரால் சென்று சேர முடிந்தது.
மூன்றாவது, பொதுமக்களின் குறைகளை திரையில் சுட்டிக் காட்டிய துணிச்சல். பொதுமக்களின் தவறுகளை, அவர்களின் மூடப்பழக்க வழக்கங்களை திரையில் எந்த ஹீரோவும் விமர்சித்ததில்லை. மக்கள் நினைத்தால் எதையும் செய்வார்கள், அவர்கள் தான் அனைத்தும் என்று புகழ்பாடித்தான் நடித்திருக்கிறார்களே தவிர விமர்சித்ததில்லை. அதனை தமிழ் சினிமாவில் கலைவாணர் போல ஒருசிலரே செய்திருக்கிறார்கள்.
உக்கிரமாக இதனை செய்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள். மக்களின் மூடநம்பிக்கை முதற்கொண்டு, விவசாயி, தொழிலாளர்கள் வரை திரையில் அவர் விமர்சிக்காதவர்கள் எவருமில்லை. அந்தத் துணிச்சல் அவருக்கு மட்டுமே இருந்தது. அவருடன் ஒப்பிட இயலாது என்றாலும், அவருக்குப் பின் இதனை ஓரளவு திரையில் சாத்தியப்படுத்தியவர் கவுண்டமணி.