உலகில் தலைசிறந்த நபர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், முக்கியமான கண்டுபிடிப்புகள், முக்கிய நிகழ்வுகள், முக்கியத்துவம் வாய்ந்த நாள் போன்றவற்றை நினைவு கூறும் விதமாகவும் கவுரவிக்கும் விதமாகவும் கூகுள் நிறுவனம் டூடுல்களை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில் இன்று மலையாளத் திரையுலகின் முதல் பெண் கதாநாயகி ஆன பிகே ரோஸியின் 120 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
1903 ஆம் ஆண்டு அன்றைய கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் ராஜம்மா என்ற பெயரோடு ரோஸி பிறந்தார். இளம் வயதிலேயே நடிப்பின் மீது நாட்டம் வந்ததால் எப்படியாவது படங்களில் நடித்து விட வேண்டும் என்பதில் முனைப்போடு இருந்தார். சிறுவயதில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த ராஜம்மா நாடகங்களின் மீது கொண்ட நாட்டத்தால் பாட்டு, நடனம் முதலியவற்றை கற்றுக்கொண்டார். 1928 ஆம் ஆண்டு வெளியான விகதகுமாரன் (தி லாஸ்ட் சைல்ட்) என்ற மலையாள ஊமைத் திரைப்படத்தின் கதாநாயகியாக பிகே ரோஸி அறிமுகம் ஆனார். மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி மற்றும் இந்திய சினிமாவின் முதல் தலித் நடிகை என்ற பெருமையும் பெற்றார். முதல் படம், அதுவும் முதல் கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார். சொல்லவா வேண்டும்? அவரை சுற்றி பல சர்ச்சைகள் சூழத்தொடங்கியது.
படத்தில் சரோஜினி நாயர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று ரோஸி நடித்திருந்தார். படம் வெளியான போது, அந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தலித் பெண் ஒருவர் தங்களை சித்தரித்ததைக் கண்டு ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது படம் ஓடிய தியேட்டரில் கற்கள் வீசப்பட்டது. அவரது வீடு குறிப்பிட்ட சாதியினரால் எரிக்கப்பட்டுள்ளது. உயிருக்கு பயந்த ரோசி, தமிழகம் நோக்கி சென்ற லாரியில் ஏறி தப்பி ஓடியுள்ளார்.
லாரி ஓட்டுநரான கேசவன் பிள்ளையை திருமணம் செய்து கொண்டு, 'ராஜம்மாள்' என்ற பெயரில் மிச்ச காலம் வாழ்ந்தார். ஒரு படத்திலேயே அவரது நடிகைக்கான கனவுகளும் வாய்ப்புகளும் முடங்கி போனதால், நடிப்பு வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிவிட்டார். பிரபலமான நடிகை என்ற பெயரை கூட அவர் பெற முடியவில்லை. ஆனால் ரோஸி போட்ட விதைதான் இன்று மலையாள சினிமாவில் பெரிய பெரிய நாயகிகளை உருவாகியுள்ளது. பெண் நாயகிகளை மட்டும் வைத்து படங்கள் எடுக்கும் அளவிற்கு மலையாள சினிமா வளர்ந்துள்ளது. அவரது நினைவாக மலையாள சினிமாவில் பெண் நடிகர்கள் சங்கம் இன்றும் பிகே ரோஸி பிலிம் சொசைட்டி என்றே அழைக்கப்படுகிறது.