கடந்த பல வருடங்களாக தமிழில் கடவுளர்களின் இடத்தை பேய்கள் பிடித்துக் கொண்டன. அம்மன் படங்கள் அரிதாகி ஆவி படங்கள் அதிகரித்தன. டிமான்டி காலனி, தில்லுக்கு துட்டு, அரண்மனை போன்ற ஹாரர் படங்களின் வெற்றி காரணமாக, மொத்தத் திரையுலகும் சிவப்பு மை, வெள்ளைச் சேலை மற்றும் கேமரா சகிதம் பாழடைந்த பங்களாக்களை சரணடைந்தன.
சமீபத்தில் அப்படி வெளிவந்த திரைப்படம் பிரம்மாஸ்திரா. புராண கடவுளர்களின் ஆற்றல் ஒரு சாமானியனுக்கு கிடைத்தால் அவன் எப்படி ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோவைப் போல் ஆக முடியும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டதுதான் பிரம்மாஸ்திரம். இந்தியாவில் சூப்பர் ஹீரோக்கள் இல்லாத குறையை புராண கடவுளர்களை வைத்து நிரப்ப இந்தித் திரையுலகு முயற்சிக்கிறது. இந்தியர்களின் பக்தியும்,ஹாலிவுட்டின் கிராபிக்ஸும் பெருத்த வசூல் அறுவடையை தரும் என்ற நம்பிக்கையில் இவ்வகை படங்கள் எடுக்கப்படுகின்றன.
பிரமாஸ்திரத்துக்கு அடுத்து, அக்ஷய் குமார் நடித்திருக்கும் ராம் சேது வெளியாகிறது. இராமாயணத்தில் வரும் ராமர் பாலம் உண்மை என்பதை நிறுவ அக்ஷய் குமார் மேற்கொண்டிருக்கும் முயற்சியே இப்படம். ஆர்க்கியாலஜிஸ்டான அக்ஷய் குமார் ராமர் பாலம் உண்மையா பொய்யா என்பதை கண்டறிய கிளம்புவதும், அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், ராமர் பாலம் புனைவல்ல உண்மை என நிறுவுவதுமே கதை. இதில் அக்ஷய் குமாரின் கதாப்பாத்திர பெயர் ஆகியன் குல்ஷேத்ரா. ஆரியம், திராவிடம், சனாதனம் என அரசியல் தளத்தில் சூடாக விவாதம் போய்க்கொண்டிருக்கும் நிலையில் ராம் சேதுக்கு பாக்ஸ் ஆபிஸில் நல்ல மைலேஜ் கிடைக்கும் என அக்ஷய் குமார் நினைக்கிறார்.
நேற்று பிரபாஸின் 500 கோடி புராணப் படமான ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியானது. இதில் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். பத்துத்தலை ராவணனாக சயிப் அலிகான். ராமர் பாலம் அமைத்து இலங்கை சென்று சீதையை மீட்டது படத்தில் பிரதானமாக வருகிறது. அனுமார் இலங்கையில் நிகழ்ச்சிய அட்டகாசங்களையும் விலாவரியாக படமாக்கியுள்ளனர். அதாவது, இராமாயணத்தை தற்கால கிராபிக்ஸில் மறுஉருவாக்கம் செய்ய முயன்றுள்ளனர். கிராபிக்ஸ் கற்கால எபெக்டில் இருப்பது ஒன்றுதான் படத்தின் குறை.
இதற்கு தோதாக பாய்காட் பாலிவுட் இயக்கமும் செயல்படுகிறது. இந்துத்துவ நம்பிக்கைக்கு புறம்பானவர்களின் படங்களை பாய்காட் செய்யச் சொல்லி இவர்கள் வற்புறுத்துகிறார்கள். இவர்களின் இப்போதைய டார்லிங்காக இருப்பவர்கள் அக்ஷய் குமாரும், அஜய் தேவ்கானும். இரண்டு பேரும் அந்த நம்பிக்கையை காப்பாற்றும்வகையில் படங்கள் எடுத்து வருகின்றனர். அக்ஷய் குமாரின் அடுத்தப் படம் ராம் சேது என்றால், அஜய் தேவ்கானின் அடுத்தப் படம், தேங்க் காட்.