பட்டணத்தில் ஏமாற்றுக்காரர்களும், போக்கிரிகளும் நிறைந்திருப்பார்கள் என்ற மனப்பதிவு அனைவருக்கும் உண்டு. இந்த எண்ணத்தை மக்கள் மனதில் விதைத்ததில் திரைப்படங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவற்றை முழுக்க பொய் என்று உதறிவிடவும் முடியாது. பட்டணத்தின் நெருக்கடியும், முகம் தெரியாத எண்ணற்ற மனிதர்களும், வாழ்தலுக்கான போட்டியும் போக்கிரிகளையும், ஏமாற்றுக்காரர்களையும் எளிதில் உருவாக்கிவிடுகின்றன. 1959 இல் வெளியான பொன்னுவிளையும் பூமி திரைப்படத்தில் இந்த ஏமாற்றுக்காரர்களையும், கிராமத்து விவசாய வாழ்வினையும் ஒருங்கே காட்டியிருந்தனர்.
நாகன் வயதான அப்பாவி விவசாயி. அவரது மகன் நல்லானும் ஒரு விவசாயி. அப்பாவைவிட அறிவும், துணிச்சலும் கொண்டவன். மிராசுதாரர் பாலகோடி முதலியாரின் வீட்டில் வேலை செய்யும் முத்தம்மாவை நல்லானுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். என்னுடைய வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு, நானே திருமணம் செய்து வைக்கிறேன் என முதலியார் தடபுடலாக திருமணத்தை நடத்தி முடிக்கிறார். அதன்பிறகுதான் அவரது பணக்கார முகம் வெளிப்படுகிறது. திருமணத்துக்கான ஏழாயிரம் ரூபாய் செலவுக்காக நாகனின் நிலம் முதலான சொத்துக்களை கடன் பத்திரமாக எழுதி வாங்கிக் கொள்கிறார். முத்தம்மாவால்தான் இப்படியொரு நிலைமை என்ற வெறுப்பு நல்லானுக்கு. அவன் மனைவியை துக்கிரியாகவே நினைத்து நடத்துகிறான். அவர்களுக்கு ஒரு மகனும் பிறக்கிறான்.
கடனை அடைக்கவில்லை என்று நாகனின் வீடு, நிலம் அனைத்தையும் முதலியார் பிடுங்கிக் கொள்கிறார். பிழைப்புக்காக அப்பா, மகன், மருமகள், பேரன் என மொத்த குடும்பமும் பட்டணம் செல்கிறது. அங்கிருக்கும் ஏமாற்றுக் கும்பல் அவர்களிடமிருந்து பணத்தை பிடுங்கிக் கொள்கிறது. இந்த களேபரத்தில் குடும்பத்தினர் திசைக்கொருவராக பிரிகின்றனர். அப்பாவும், மருமகளும், பேரனும் விரைவில் ஒன்று சேர்கிறார்கள். நல்லான் மட்டும் தனியாக அலைகிறான்.
இதனிடையில் முதலியாருக்கு கடன் ஏறுகிறது. அந்த நேரத்தில் சிங்கப்பூர் சென்ற முத்தம்மாவின் தந்தை போரில் மாண்டதாகவும், அவர் வங்கியில் போட்ட இரண்டு லட்ச ரூபாயை முத்தம்மா பெற்றுக் கொள்ளுமாறும் தகவல் வருகிறது. அந்தப் பணத்தை முதலியாரும், அவரது மகளும் கைப்பற்ற திட்டம் போடுகின்றனர். இந்நிலையில் ரூபா என்ற பெண்ணின் தலையீட்டால் அந்தப் பணம் நல்லானுக்கு கிடைக்கிறது. அவன் ஏலத்துக்கு வரும் முதலியாரின் பங்களாவை விலைக்கு வாங்கி அவரையும், அவரது பெண்ணையில் பங்களாவிலிருந்து துரத்திவிடுகிறான். இதனிடையில் நாகன் இறந்து போக, முத்தம்மா மகனுடன் வறுமையில் வாடுகிறாள். மறுபுறம் அவளது கணவன் அவளது தந்தையின் பணத்தில் சுகபோகமாக வாழ்கிறான். இறுதியில் தவறை உணர்ந்து நல்லான் முத்தம்மாவுடன் ஒன்றிணைவதுடன், முதலியாரும் தனது தவறை உணர்ந்து திருந்துகிறார்.
ஒரு படத்தில் பல படங்களுக்கான கதையை திணித்தால் எப்படியிருக்குமோ, அதுதான் பொன்னுவிளையும் பூமி. காதல் மன்னனாக ஜெமினி நடித்த கல்யாணப் பரிசு வெளியான அதே வருடம்தான் பொன்னுவிளையும் பூமியும் வெளியானது. இதில் வழக்கத்துக்கு மாறாக கிராமத்துத் தோற்றம், மனைவியுடம் வெறுப்பைக் காட்டும் கதாபாத்திரம் என முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் ஜெமினி கணேசன் நடித்திருந்தார். வேலைக்கார முத்தம்மாவாக பத்மினிக்கு வெயிட்டான வேடம். திருமணத்துக்கு முன்பு அவருக்கு பரதநாட்டிய பாடல் ஒன்றை வைத்துவிட்டு, அதன் பிறகு முழுக்க சோகத்தில் நனையவிட்டிருந்தனர். அப்பாவி விவசாயி நாகனாக எஸ்.வி.சுப்பையா பரிதாபத்தை அள்ளியிருந்தார்.
பாலையா, சந்திரபாபு, டி.பாலசுப்பிரமணியம், சுகுமாரி, ராகினி ஆகியோரும் நடித்திருந்தனர். கே.ஹெச் ரெட்டி இசையில் மொத்தம் பதினொரு பாடல்கள். கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருகதாசி, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் திருச்சி தியாகராஜனும் பாடல் எழுதியிருந்தார். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பல பாடல்களை தந்த திருச்சி தியாகராஜன் பாடல் எழுதிய முதல் படம் இது.
ஸ்டுடியோ வட்டத்துக்குள், சின்ன கதையை படமாக்கி வந்த காலகட்டத்தில் கிராமம், நகரம் என இருவேறு நிலப்பரப்பை விசாலமாக அணுகி பொன்னுவிளையும் பூமியை எடுத்திருந்தனர். வித்தியாசமான கதை, ஜெமினி, பத்மினியுன் சிறந்த நடிப்பு, கவித்துவமான பாடல்கள் ஆகியவற்றிற்காக பொன்னுவிளையும் பூமி நீண்டகாலம் நினைவுகூரப்படும்.