1969-ல் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான அடிமைப் பெண் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற இன்னொரு திரைப்படம் நம் நாடு. வழக்கம் போல் எண்ணிக்கையிலும், வெற்றியிலும் சிவாஜி முன்னணியில் இருந்தார். அவரது நடிப்பில் தெய்வமகன், அன்பளிப்பு, அஞ்சல்பெட்டி 52,0 குருதட்சணை, காவல் தெய்வம், நிறைகுடம், சிவந்த மண், தங்கச் சுரங்கம், திருடன் ஆகிய படங்கள் வெளியாகின. ஜெமினி கணேசன் நடிப்பில் சாந்தி நிலையம், இருகோடுகள், தங்கமலர், பொற்சிலை, பூவா தலையா, மனைவி, குலவிளக்கு, அவரே என் தெய்வம், ஐந்து லட்சம் என ஒன்பது படங்கள் வெளியாகின. இதில் சாந்தி நிலையம், இரு கோடுகள் படங்கள் இன்றும் நினைவுகூரும் படங்களாக உள்ளன.
19 ஆம் நாற்றாண்டில் வாழ்ந்த ஆங்கில கவிஞரும், நாவலாசிரியருமான Charlotte Bronte 1847-ல் எழுதிய Jane Eyre நாவல் மிகவும் பிரபலமானது. இந்த நாவலையும், தி சவுண்ட் ஆஃப் மியூஸிக் திரைப்படத்தையும் உள்வாங்கி 1968 இல் கன்னடத்தில் பேடி பண்டவலு என்ற படத்தை எடுத்தனர். கல்யாண் குமாரும், சந்திரகலாவும் நடித்திருந்த அந்தப் படம் வெற்றி பெற்றது. ஜெமினி பிக்சர்ஸ் எஸ்எஸ் வாசனுக்கு கன்னடப் படம் மிகவும் பிடித்துப் போகிறது. அதனை தமிழில் ரீமேக் செய்ய விரும்பி, அதன் திரைக்கதை, வசனத்தை எழுதும் பொறுப்பை சித்ராலயா கோபுவிடம் ஒப்படைக்கிறார். எஸ்எஸ் வாசனும், அவரது மருமகன் ஜிஎஸ்.மணியும் இணைந்து அந்த ரீமேக்கை தயாரித்தனர். அதுதான் சாந்தி நிலையம் திரைப்படம். படத்தை ஜிஎஸ் மணியே இயக்கவும் செய்தார்.
இதனிடையில் நாயகனின் வாழ்க்கையில் ஒரு மர்மம் இருப்பதை நாயகி கண்டுகொள்வாள். ஆனால், என்ன என்பது அவளுக்கு தெரியாது. இதனிடையில் அவளும், அவனும் காதலிக்க ஆரம்பிப்பார்கள். அவர்கள் இணைவதற்கு தடையாக நாயகனின் சொந்தத்திலிருந்தே ஒரு பெண் வருவாள். நாயகன் ஏற்கனவே ஒருமுறை திருமணமானவன், அவனது மனைவி இன்னும் உயிருடன் இருக்கிறாள் என்பதும் நாயகிக்கு அதிர்ச்சியை கொடுக்கும்.
ஆங்கில நாவலையும், தி சவுண்ட் ஆஃப் மியூசிக் திரைப்படத்தையும் அதிகமாக பிரதிபலிக்கும் சாந்தி நிலையம் பி அண்ட் சியில் ஓடுமா என்ற சந்தேகம் எஸ்எஸ் வாசனுக்கு இருந்தது. நாகேஷின் கதாபாத்திரம் அதனை சரி செய்யும் என்று சித்ராலயா கோபு நம்பினார். ஆனால், வாசன் நினைத்தது போலவே ஏ சென்டர்களில் ஓடிய அளவுக்கு பி அண்ட் சி சென்டர்களில் படம் ஓடவில்லை. இது ஒப்பீட்டளவிலான விமர்சனமே தவிர, பல திரையரங்குகளில் படம் 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது.
சாந்தி நிலையத்தின் ஹைலைட்டாக அன்று பேசப்பட்டது படத்தின் ஒளிப்பதிவு. பாதாள பைரவி, மாயா பஜார், செம்மீன் போன்ற கிளாஸிக் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மார்க்கஸ் பார்ட்லி சாந்தி நிலையத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். பூமியில் இருப்பதும் பாடலில் ஹீலியம் பலூனில் பறப்பது போன்ற காட்சி வரும். இந்த முழுப் பாடலே இந்த பாலூன்கள் பின்னணியில்தான் எடுக்கப்பட்டது.
இதில் லாங் ஷாட்டில் மட்டுமே பலூன்கள் ஆகாயத்தில் பறப்பது காட்டப்படும். குளோசப் காட்சிகள் அனைத்தும் தரையில் எடுக்கப்பட்டவை. ஆனால், அது தெரியாத வகையில் வானத்தில் பறப்பது போன்று கேமரா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவர் எடுத்திருப்பார். இந்தப் படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது மார்க்கஸ் பார்ட்லிக்கு கிடைத்தது.